லண்டனிலும் சென்னையிலும் இடம்பெற்ற காணாமல் போனோருக்கான அனைத்துலக நாள் கவனயீர்ப்பு போராட்டம் !

ஐ.நாவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அனைத்துலக நாளையொட்டி (ஓகஸ்ற் 30) இலங்கைத் தீவில் காணாமல் போன தமிழ் உறவுகளுக்கான நீதிகோரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் லண்டனிலும் சென்னையிலும் இடம்பெற்றுள்ளன. லண்டனில் பிரித்தானியப் பிரதமர் வாயிலுக்கு முன்னராக இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்து அழைப்பு விடுத்திருந்தது. தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐ.நா கட்டமைப்பான யுனிசெப் முன் தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஒருங்கிணைத்திருந்தது. இலங்கைத்தீவின் தமிழர் தாயகப்பகுதிகளிலும் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளினது பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. லண்டனில் ஓகஸ்ற் 30ம் நாள் இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு நிகழ்வானது மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இடம்பெற்றிருந்ததோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரிக்கை மனுவொன்றும் பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, சென்னையில் ஓகஸ்ற் 31ம் நாள் இடமபெற்றிருந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பெருந்திரளான உணர்வாளர்கள் பங்கெடுத்திருந்ததோடு, கோரிக்கை மனுவொன்றும் ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கப்பட்டடுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் தி.வேல்முருகன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தலைவி பேராசிரியர் சரசுவதி, திராவிடர் விடுதலை கழக தலைவர்.கொளத்தூர்.மணி. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தலைவர் .தோழர் தியாகுஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
  
 

Print Friendly