அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி ஐ.நா மனித உரிமைகள் ஆணைய களச்செயற்பாட்டில்

  • September 10, 2014
  • HRC
சிறிலங்கா விவகாரம்: ஐ.நா மனித உரிமைச் சபையில் நடந்தது என்ன?

un_892014_2இன்று திங்கட்கிழமை தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 27வது கூட்டத் தொடரில் , சிறிலங்காவினை மையப்படுத்தி இரு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய ஆணையாளராக பொறுப்பேற்றிருந்த செய்ட் ராட் அல்- ஹுசைன் அவர்களது தொடக்கவுரையில், சிறிலங்கா தொடர்பில் அவர் குறித்துரைத்திருந்த விடயமும், இதனையொட்டி மற்றைய நாடுகளது கருத்துக்களும் மற்றும் சிறிலங்காவினை மையப்படுத்தி இடம்பெற்றிருந்த உப மாநாடொன்றும் பிரதானமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஜெனிவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சின், நாதம் ஊடகசேவை வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் உறுதி :

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையம் மேற்கொள்ளும் இலங்கை தொடர்பாக விசாரணைகளுக்கு, சிறிலங்கா அரசாங்கம் முமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு தான் கவலையும் அச்சமும் அடைவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் முஸ்லீம், கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களையும் தான் கடுமையாக கண்டிக்கிறேன் எனவும் குறிப்பிட்டுருந்தார்.

முன்னாள் ஆணையாளர் மீது அதிருப்தியினையும், புதிய ஆணையாளர் மீது திருப்பதியினையும் சிறிலங்கா அரச தரப்பு சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்த நிலையில் ,முன்னாள் ஆணையாளர் முன்னெடுத்துச் சென்ற பணிகளை தொடர்ந்தும் தான் உறுதியுடன் மேற்கொள்ளவுள்ள இருப்பதாக, புதிய ஆணையாளர் இன் சபையில் தெரிவித்திருந்த கூற்று சிறிலங்காவுக்கு கசப்பானதாகவே அமைந்திருந்தது.

அமெரிக்கா பிரித்தானியா – ஐரோப்பா அழுத்தம் :

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுக்கும் விசாரணைகளிற்க்கு ஒத்துழைப்பை வழங்குமாறு சிறிலங்காவினை அமெரிக்கா பிரித்தானியா – ஐரோப்பா ஆகிய நாடுகள் தங்களது தொடக்கவுரையில் கோரியிருந்தன.

இலங்கையில் மனித உரிமை மதிக்கப்படுவதற்க்கும் பொறுப்பக்கூறலிற்க்கும் ,முன்னாள் ஆணையாளர் அவர் ஆற்றிய பங்களிப்பிற்க்கு அமெரிக்கா நன்றி தெரிவித்திருந்ததோடு, இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை அமெரிக்கா எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானியா ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்குள் நுழைய நுழைவிசையினை சிறிலங்கா அரசாங்கத்தினைக் கோரியிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழர் அமைப்பு பிரதிநிதிகளின் பிரசன்னம் :

நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய மக்கள் பேரவை, தமிழர் மனித உரிமைகள் மையம் பிரான்சு ஆகிய அமைப்புக்கள் ,அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி களச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.

அனைத்துலக விசாரணையின் சாட்சியங்களுக்கான பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தவும், அவர்கள் மீதான அச்சுறுத்தல்களின் பின்விளைவுகளை சிறிலங்காவுக்கு எச்சரிக்கை செய்யவும், ஐ.நா மனித உரிமைச்சபையானது, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரை செய்யவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றிருக்கும் இளவரசர் செய்ட் ராட் செய்ட் அல்-ஹுசைன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் நிராகரிப்பும் பிசுபிசுத்த உபமாநாடும்:

மனித உரிமைச்சபையின் பிரதான பொதுச்சபையில் அனைத்துலக விசாரணையினை வழமைபோல் நிராகரித்த சிறிலங்கா அரச தரப்பு ,ஐ.நா மனித உரிமை சபை, தனது எல்லைகளை மீறிச் செயற்பட்டு வருவதாகவும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையை சீர்குலைப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.

நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்திருந்ததோடு, யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொள்ள இலங்கைக்கு வருகை தருமாறும், புதிய ஆணையாளரை சிறிலங்கா சபையில் கோரியிருந்தது.

இதேவேளை பௌத்த மகா சங்கமென்ற அமைப்பொன்றின் பெயரில், உப மாநாடொன்றினை நடாத்தியிருந்த சிறிலங்கா, தமிழர்கள் மீதான இன அழிப்பு போரினை மனிதநேய இராணுவ நடவடிக்கையென வாதிட்டிருந்தது.

இனப்படுகொலையோ அல்லது பாரிய போர் குற்றங்களோ இடம்பெறவில்லை குறித்துரைத்து, ஆங்காங்கே நடைபெற்ற சில குற்றச் செயல்கள் தனிநபர்கள் சார்ந்த சிறுசிறு விடயங்கள் என நியாயப்படுத்த முனைந்திருந்தது.

போரின் இறுதி நாட்களில் இனப்படுகொலையின் ஒர் ஆயுதமாக உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கல் மறுப்பு ,சிறிலங்காவுக்கு எதிராக மேலெழுந்து வரும் சூழலில், இதனை நியாயப்படுத்தி பல பக்கங்கள் கொண்ட புத்தகம் மற்றும் இறுவட்டு ஒன்றினையும் இந்த உபமாநாட்டில் விநியோகிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து கேள்வி நேரத்தில் தமிழர் மனித உரிமைகள் மையம் – (பிரான்சு) கிருபாகரன் மற்றும் மனித உரிமைவாதிகள் தொடுத்த கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், கேள்வி தொடுத்தவர்கள் மீதே திருப்பிக் கேள்வியினைத் தொடுத்து, உண்மைகளை மறைக்க சிறிலங்கா முற்பட்டிருந்தது.

More from our blog

See all posts