ஈழத்தமிழர்களுக்கு அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையும் பொதுசன வாக்கெடுப்பும்: பிரகடனம்!

  • September 26, 2014
  • TGTE
unnamedஇனவழிப்பில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களது இன அடையாளத்தைப் பேணுவதற்கும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை வலியுறுத்திய பொங்குதமிழ் பிரகடனம் , ஈழத்தமிழ் மக்களது பொதுசன வாக்கெடுப்புக்கான சனநாயக உரிமையினையும் அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஐ.நா உரைக்கு எதிர்ப்பும் தெரிவித்தும், தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரியும், நியூயோர்க் ஐ.நா பொதுச்சபை முன் இடம்பெற்றிருந்த பொங்குதமிழ் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வின் பிரகடனத்திலேயே இந்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முரசறையப்பட்ட பொங்குதமிழ் பிரகடனத்தின் முழுவடிவம்

பொங்குதமிழ் பிரகடனம் – 2014

அன்பார்ந்த தமிழீழ மக்களே !தமிழக மக்களே! உலகத் தமிழ் மக்களே!

பொங்குதமிழ் உணர்வெழுச்சியோடு நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகளாய் ஒன்றிணைந்திருக்கின்றோம்.

பொங்குதமிழ்! ஈழவிடுதலைப் போராட்ட தடத்தின் மக்கள் எழுச்சியின் குறியீடாக உள்ளது.

இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் உள்ளான தமிழீழத் தாயக மக்கள், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் தங்களின் அரசியல் பெருவிருப்பினை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் பொங்குதமிழ் எழுச்சியாக பொங்கியெழுந்திருந்தனர்.

அன்று, தமிழர் தாயகத்தில் பெருக்கெடுத்த மக்கள் எழுச்சி, நாடுகளைக் கடந்து வாழும் ஈழத்தமிழர் தேசங்களெங்கும் எழுச்சிப் பெருக்கெடுத்திருந்தது. அதன் தொடர்சியாக நீட்சியாக இன்று ஐ.நா முன்றலில் பொங்குதமிழ் எழுச்சியுற்று நிற்கின்றது.

பொங்குதமிழ் !மக்கள் தமிழீழ மக்கள் எழுச்சியின் வடிவம்!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என அறைகூவிய தியாகி திலீபனின் அறவழிப்போராட்த்தின் நினைவேந்தல் காலமாகவும் இந்நாட்கள் அமைகின்றது.

இந்நாளில் தமிழகத்திலும் ஐந்த அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழர் எழுச்சிப் பேரணி எழுச்சிக் கோலம் பூண்டுநிற்கின்றது.

தமிழீழத் தாயக மக்கள் தங்களின் மனவெழுச்சியினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத அரசியல் வெளியற்ற நிலையில், புலத்திலும் தமிழகத்திலும் சமாந்திரமாக முன்னெடுக்கப்படும் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம், உலகின் மனச்சாட்சியினை மீண்டும் ஒருதடவை தட்டட்டும்.

எம்மினத்தின் மீது சிங்கள பௌத்த பேரினவாதம் நடாத்திய இனஅழிப்புக்கு நீதிகேட்டு, அனைத்துலக விசாரணையினை அனைத்துலக சமூகத்திடம் கோரியிருந்தோம்.

இன்று ஐ.நா மனித உரிiமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும், இலங்கை தொடர்பிலான அனைத்துலக விசாரணையின் முதலறிக்கையாக வாய்மொழியறிக்கை, ஐ.நா மனித உரிமைச்சபையில் இப்பொங்குதமிழ் நாளில் முன்வைக்கப்படுகின்றது.

வரலாற்றில் இந்நாள் பல்வேறு வகையிலும் முக்கியத்தும் உள்ளதாக அமைகின்றது.

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் அனைத்துலகத்திடம் நாம் முன்வைத்த கோரிக்கையினை, இந்நாளில் மீண்டும் ஒருதடவை முன்வைக்கின்றோம்.

நாம் கோருவதெல்லாம் நமது மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், தம்மைத் தாமே ஆளுமை செய்யும் உரிமை உடையவர்களாக இப்பூமிப்பந்தில் ஏனைய சுதந்திர மனிதர்களைப் போல் வாழும் உரிமையினைத்தான்.

நாம் கோருவதெல்லாம் நமது தேசத்தின் மீது இனஅழிப்பு புரிந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதனைத்தான். எமது மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதனைத்தான்.

நாம் கோருவதெல்லாம் சிங்களத்தின் இனஅழிப்பில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ அரசை அமைக்க அங்கீகாரமும் ஆதரவும் தாருங்கள் என்பதனைத்தான்.

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் வடிவமாக விளங்கிய நடைமுறைத் தமிழீழ அரசினை, பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக அழித்த சிங்களத்துக்கு துணைநின்ற, அதே அனைத்துலக சமூகத்திடமே நாம் நீதி கோருகிறோம்.

அதனால்தான் அனைத்துலக பொதுமன்றமான ஐ.நா பொதுச்சபை முன், பொங்குதமிழராய் இனஅழிப்புக்கு பரிகார நீதிகோரி நாம் அனைவரும் அணிவகுத்து நிற்கின்றோம்.

இப்பொங்குதமிழின் எழுச்சி முரசமாக நாம் அறைகூவுவது

ஈழத் தமிழர்களுக்கான பரகார நீதியின் முதற்படியாக, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் அமைத்துள்ள இலங்கை தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு, நாம் அனைவரும் சிங்கள இனஅழிப்பின் சாட்சியங்களை வழங்குவோம்!

ஸ்கொட்லாந்து மக்கள் தங்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்க அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சனநாயக உரிமையான பொது வாக்களிப்புக்கான வாய்ப்பினை, இலங்கைத்தீவில் இன அழிப்புக்கு உள்ளான ஈழத் தமிழர்களாகிய எமக்கும் கிடைக்க, ஐக்கிய நாடுகள் சபை அங்கத்துவ நாடுகளுக்கும், அனைத்துலக சமூகத்திடமும் வழிசமைக்க வேண்டுகின்றோம்!

இலங்கைதீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியனவற்றில் இருந்து, தமிழ் மக்களை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களது இனஅடையாளத்தைப் பேணுவதற்கும், அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திடமும் ஐ.நா அங்கத்துவ நாடுகளிடம் நாம் கோருகின்றோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என பொங்குதமிழ் 2014ன் பிரகடனம் அமைந்திருந்தது.

More from our blog

See all posts