ஐ.நாவில் மகிந்த! பொங்குதமிழென அணிதிரளத் தயாராகும் வட அமெரிக்கத் தமிழர்கள்- நா.க.த.அ.

  • August 21, 2014
  • TGTE

pongutamil-2014 for webஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் 25ம் நாளன்று சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நியூ யோர்க் ஐ.நாவின் முன் *’பொங்குதமிழ்’ *ஒன்றுகூடலாக இந்த  நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

இந்தியாவில் புதிதாக ஆட்சிப்பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனால், முக்கியத்துவம் கொடுத்து இந்த எழுச்சி ஒன்றுகூடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது.

தமிழர்களுக்கான எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பினை அம்பலப்படுத்தி, சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான வலுவான குரலினை பதிவு செய்வதோடு, ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துல சபையின் முன் உறுதிபடக் கோருவதற்குமாக இந்த எழுச்சி ஒன்றுகூடல் அமையவிருக்கின்றது.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து மக்கள் பங்குபற்றுவதற்கான வழிமுறைகளோடு, கனடாவில் இருந்தும் மக்கள் பங்கெடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.

இதேவேளை செப்ரெம்பர் 15ம் நாள் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைசபையின் முன் அணிதிரள்வதற்கு ஐரோப்பிய தமிழர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from our blog

See all posts