காரைநகர் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்

  • July 19, 2014
  • WCE
25
இலங்கை படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத் தாயகத்தின் யாழ். காரைநகர் ஊரிக் கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட இரு சிறுமிகள் விவகாரம் தொடர்பில் வன்மையான கண்டனத்தினைத் தெரிவித்துள்ள நா.க.த அரசாங்கம், இது தொடர்பில் ஐ.நா சபை உட்பட அனைத்துலக மையங்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

மானுடத்திற்கு புறம்பான வகையில், சர்வதேச ரீதியில் சிறுவர் நலன் தொடர்பாக வரையப்பட்டிருக்கும் அத்தனை அடிப்படை மனித உரிமைகளையும் இலங்கை கடற்படையினர் மீறியுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் நலன் மையம் இயக்குனர் ரஜனிதேவி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை,

பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மிருகத்தனமான நடவடிக்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன் மையம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

2009ம் ஆண்டிற்கு பின்னரான காலப் பகுதியில் இருந்து இன்று வரை வடக்குகிழக்கில் காலவரையறை அற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முப்படையைச் சேர்ந்தவர்களாலும் தமிழ்ப் பெண்கள் மற்றும் பாடசாலைச் சிறுமிகள் மீது அச்சுறுத்தல் நோக்கிலும், எதேச்சதிகார நிலையிலும் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை “மனித உரிமைகள் கண்காணிப்பகம்” மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த சனல் 4 ஊடகம் என்பன ஆதாரங்களுடன் வெளிக் கொண்டு வந்திருந்தன.

கடந்த 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் லண்டன் நகரில் நடந்த “மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்” பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் தமிழர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வேண்டுமென்று திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது என்று (HRW) பிரித்தானிய இயக்குனர் David Mepham கூறியிருந்தார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையொன்றில் இலங்கை அரசின் ஆயுதப் படையினரால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட 75 தமிழ்ப் பெண்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் குறித்த விபரம் உள்ளடக்கப்பட்டிருப்பதும் அவர்களினால் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும் 2011 ஆகஸ்ட் மாதம் சுவிஸ் சூரிச் நகரில் நடந்த “பெண்கள் மீதான (இராணுவ) பாலியல் வன்முறைகள் அவர்களின் சகல முன்னேற்றங்களையும் முடக்குகிறது” என்கிற மாநாட்டில் கலந்து கொண்ட மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க போராட வேண்டும். குறிப்பாக பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறைகள் பெண்களுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

கூடவே, கடந்த வருடம் 2013 ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நவநீதம்பிள்ளை அவர்கள் தனது பயணத்தின் இறுதி நாளில் பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்கும் போது, இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும் இலங்கையில் வைத்தே தெரிவித்திருந்தமையை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

அண்மையில் பிரித்தானியாவில் ஏஞ்சலினா ஜுலி (angelina jolie) தலைமையில் இடம் பெற்ற “மோதல்களின் போது பாலியல் வன்முறையினை ஆயுதமாக்குவதை முடிவிற்கு கொண்டு வருவதற்கான சர்வதேச உச்சி மாநாட்டின்” போதும் தமிழ்ப் பெண்களின் இந்த விடயங்கள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய உறுப்பினர்கள், மாநாட்டு உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்ட அதிதிகள் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.

2009ல் இலங்கையில் நடைபெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொலை போரின் போது ஈழத் தமிழ் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மனிதவதைகளும், பாலியல் கொடுமைகளும் நிகழ்த்தப்பட்டன.

போரின் போது கணவனை இழந்து தனித்து வாழும் பெண்கள், புனர்வாழ்வு மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள், முன்னாள் அரசியல் போராளிப் பெண்கள் மீது நாளாந்தம் அரச இராணுவத்தினால் பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்படுகிறது.

இராணுவத்திற்கு இணைக்கப்பட்ட பெண்கள் மீது மேலதிகாரிகள் பாலியல் பலாத்கார கொடுமைகள் புரிந்தமை.

அண்மைக் காலங்களில் பாடசாலை சிறுமிகள் மீதான இராணுவத்தினரின் தொல்லைகள் அதிகரித்து வருவது பெற்றோர்களாலும் பாடசாலை நிர்வாகத்தினராலும் அவதானிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை யாவும் உலகளாவிய ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மனதில் சிறுமிகள் பாதுகாப்புக் குறித்த கவலைகளையும் மன உளைச்சல்களையும் ஏற்படுத்தி நிற்கிறது.

தற்சமயம் சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கும் பெண்கள் சிறுவர்- களுக்கு எதிரான இராணுவ பாலியல் வன்கொடுமைகளை நாம் உன்னிப்பாக அவதானிப்பதுடன் சிறுவர் விடயத்தில் அக்கறை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகள் மற்றும் நலன் பேண் அமைப்பு (UNICEF ) , ஐக்கிய நாடுகள் சபை ”பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் அனைத்து குற்றங்கள் ஒழிப்புக் குழு'(CEDAW) ஆகியவற்றின் உயர்மட்டக் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருகிறோம்.

முடிவாக இலங்கை இனவாத அரசின் இத்தகைய திட்டமிடப்பட்ட இனஒழிப்பு நடவடிக்கைகளின் அவலங்கள் முடிவிற்கு வர வேண்டுமாயின், தமிழர் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமைகள் கொண்ட அரசியல் விடுதலை ஒன்று அமைவதற்கு மக்களினது ஒருமித்த செயற்பாடுகள் அவசியம் என்பது இங்கே வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts