மாவீரர் நினைவாலயம் அமைக்கும் பெரும்பணிக்கான திட்டவாக்கக் குழுவினை நா.க.த.அ.உருவாக்கியது !

  • November 26, 2014
  • TGTE
மாவீரர் நினைவாலயம் அமைக்கும் பெரும்பணிக்கான திட்டவாக்கக் குழுவினை நா.க.த.அரசாங்கம் உருவாக்கியது !

images (2)தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை உலகத் தமிழர்கள் தம் நெஞ்சிருத்தி வணக்கம் தெரிவிக்கும் இந்நாட்களில் மாவீரர்; நினைவாலயம் அமைக்கும் பெரும்பணியொன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கிறது எனும் செய்தியினை மக்களுக்கு அறியத் தருவதில் பெருநிறைவடைவதாக நாதமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் 14 பேர்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டவாக்கக்குழு,  நினைவாலயம் அமைக்கும் திட்டம் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி,  எதிர்வரும் 30.06.2015க்குள் முன்னராக பரிந்துரையினை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,  நினைவாலயம் அமைக்கும் இத் திட்டவாக்கல் முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோருக்கான பொதுஅழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் :

நமது தமிழீழத் தாயகம் சிங்கள ஆயுதப்படையினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, மாவீரர் துயிலும் இல்லங்களும், மாவீரர் நினைவுத்தூபிகள், நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டவர்களாகத் தாயக மக்கள் வாழ்ந்து வரும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

இத்தகையதொரு சூழலில் நமது மாவீரர்களை காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக மக்கள் நெஞ்சிருத்தி வணக்கம் தெரிவிக்க வழிவகை செய்யவும், மாவீரர் நினைவுகளை மனதில் சுமந்தவாறு நமது சுதந்திரக்கனவை உயிர்ப்போடு முன்னெடுக்கும் நோக்குடனும், தமிழ் மக்களின் இதயங்களில் மாவீரர் வகித்துவரும் உயர்ந்த இடத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த மாவீரர் நினைவாலயம் அமைக்கப்படுதல் காலத்தின் தேவையாக உள்ளது.

உலகின் தேசங்கள் அனைத்தும் தத்தமது தேசத்துக்காக, மக்களுக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த தேசப் புதல்வர்களை மிகுந்த கௌரவத்துடன் நினைவு கூர்ந்து வருவதனைப் பண்பாடாகவே பேணுகின்றன.

இவர்களின் வரலாற்றைத் தேசத்தின் வரலாற்றில் உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டாடுகின்றன. இவர்களின் நினைவுகள் காலம் காலமாக நிலைக்கும் வகையில் இவர்களுக்கான நினைவிடங்களை அமைத்து மரியாதை செய்து வருகின்றன. இவ்வகையில் தமிழர் தேசமும் தனது தேசத்தின் மாவீரர்களை நினைவுகூரும் வகையிலான நினைவாலயத்தை உயர்ந்த தரத்துடன் உருவாக்குவது எமது வரலாற்றுக் கடமையாக அமைகிறது.

இந் நினைவாலயம் அமைக்கும் திட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்தாலும் இதனை உருவாக்கும் பெரும் பணி அனைத்துத் தமிழ் மக்களது பங்கு பற்றுதலோடுதான் நிறைவேற முடியும். இதனால் இந் நினைவாலயம் அமைக்கும் திட்டம் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி எங்கு, எத்தகைய முறையில் இம் மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான திட்டமொன்றினைத் தயாரிப்பதற்கான திட்டவாக்கல் குழுவொன்று பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம்.

இத் திட்டவாக்கற்குழு மாவீரர் நினைவாலயம் அமைக்கும் திட்டத்துடன் இணைந்த வகையில் மாவீரர்குடும்ப நலன் மற்றும் போராட்டத் தியாகிகளான முன்னைநாள் போராளிகள் நலன் பேணும் வகையிலான நிறுவனரீதியான ஏற்பாடு தொடர்பாகவும் தனது பரிந்துரைகளை வழங்கும்.

இம் மாவீரர் நினைவாலயத் திட்டவாக்கக்குழுவில் பின்வருவோர் அங்கம் வகிக்கின்றனர்.

பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா – ஒருங்கிணைப்பாளர் – சுவீடன்

  1. திரு வேலும்மயிலும் மனோகரன் – இணைச் செயலாளர் – பிரான்ஸ்
  2. திரு சீனிவாசகம் ஞானேஸ்வரன் – இணைச் செயலாளர் – கனடா
  3. வைத்தியக் கலாநிதி சிவேன் சீவநாயகம் – அவுஸ்திரேலியா
  4. பேராசிரியர் பழனிசாமி இராமசாமி – மலேசியா
  5. திரு கொளத்தூர் மணி – தமிழ்நாடு
  6. வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் – ஐக்கிய அமெரிக்கா
  7. செல்வி எலீசா மான் – பிரித்தானியா
  8. சட்டவாளர் காசிநாதர் சிவபாலன் – நோர்வே
  9. பேராசிரியர் பீற்றர் சால்க் – சுவீடன்
  10. திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் – பிரித்தானியா
  11. செல்வி சுகன்யா ஆறுமுகம் – சுவிற்சலாந்து
  12. திரு விஜயரூபன் சிவராஜா – நோர்வே
  13. தேசிய மாவீரர் பணிகள் செயலகம் பணி முதல்வர்

இத் திட்டவாக்கல் குழு ஒரு சுயாதீனமான குழுவாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கட்டமைப்புக்கு வெளியே நின்று, தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிவரும் அனைத்துத் தமிழ்; அமைப்புக்களுடனும் இணைந்த வகையில் மாவீரர் நினைவாலயம் அமைக்கும் திட்டத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபடும்.

இத் திட்டவாக்கல் குழுவினர் மாவீரர் நினைவாலயம் அமையும் இடம் அதன் வடிவமைப்பு, நினைவாலயத்தை உருவாக்க எடுக்கக்கூடிய காலம், அதற்கு ஏற்படக்கூடிய செலவு, மாவீரர் நினைவாலய உருவாக்கக்குழுவின் கட்டமைப்பு உள்ளடங்கலான பல்வேறு விடயங்களை ஆய்வு செய்து எதிர் வரும் 30.06.2015 க்கு முன்னர் தமது திட்ட அறிக்கையினை முன்வைப்பர். இத் திட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்;படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மாவீரர் நிiனைவாலயம் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும்.

எம் மாவீரர்களுக்கான நினைவாலயம் அமைக்கும் இத் திட்டவாக்கல் முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோர் அனைவரையும் பின்வரும் maveerar@tgte.org மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

மாவீரர் கனவு விரைவில் நனவாகும்!! ஈழத் தாயகம் விடுதலைப் பேறடையும்!!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகச் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images

 

More from our blog

See all posts