முள்ளிவாய்க்கால் முடிவல்ல! புதியதோர் ஆரம்பம்! தமிழீழத் தனியரசே இனஅழிப்புக்கான பரிகாரநீதி!! – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையுமென நாம் திடமாக நம்புகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மே18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சனநாயக வழியில் இத் தீர்வினை எட்டிக் கொள்ள ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிநாட்டு நிலைப்பாட்டினையும் உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படுவதே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமது உயிரை ஈகம் செய்த அனைவருக்கும் வழங்கப்படக்;;கூடிய நாம் பெற்றுக் கொடுக்கக்;கூடிய நீதியாக இருக்க முடியும் எனவும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த நீதியினை எமக்கு வழங்குமாறு நாம் இத் தருணத்தில் அனைத்துலக சமூகத்தைக் கோருகிறோம். நீதி கிடைக்கும் வரை எமது நீதிக்கான போராட்டம் தொடரும் என முள்ளிவாய்க்கால் நினைவுடன் உறுதி எடுத்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் முழுவடிவம் :

முள்ளிவாய்க்கால் முடிவல்ல! புதியதோர் ஆரம்பம்!
தமிழீழத் தனியரசே இனஅழிப்புக்கான பரிகாரநீதி!!

இன்று தமிழீழத் தேசிய துக்க நாள்!

முள்ளிவாய்க்காலிலும் வன்னிப் பெரு நிலப்பரப்பெங்கும் சிங்கள கொலைவெறி இராணுவ இயந்திரம் தமிழீழ மக்களை துவம்சம் செய்து சுட்டெரித்த கொடுமைகளை நாம் கூட்டாக நினைவுகூரும் நாள்!

எமது மக்களின் இரத்த ஆற்றில் தோய்ந்த தமிழீழ மண்ணில் சிங்களம் தனது ஆக்கிரமிப்பின் சின்னங்களை நிறுவிக் கொண்ட நாள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் இராணுவரீதியில் அழித்து, தமிழர் தேசம் எனும் மக்கள்கூட்டத்தைச் சிதைத்து சின்னாபின்னப்படுத்தி, தமிழ் மக்களை அடிமை கொள்ளும் கனவுடன் தனது தமிழின அழிப்பு நடவடிக்கையின் உச்சத்தை சிங்கள பௌத்த இனவாதப் பூதம் தொட்டு நின்ற நாள்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை நோயாளிகள் முதல் கர்ப்பிணித்தாய்மார் வரை, மாணவர், பெண்கள், உடல் இயக்கம் இழந்தோர் என வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்கள் அனைவரையுமே எந்த வித வேறுபாடுகளும் இன்றி சிங்களம் நரபலி எடுத்த நாட்களின் இறுதி நாள்!

எமது மக்கள் «காப்பாற்றுங்கள்» «காப்பாற்றுங்கள்» எனக் கதறினார்கள். வேண்டினார்கள். அவர்கள் நாடாத கோவில்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. அழைக்காத நாடுகள் இல்லை. உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாவது ஒரு அபயக்கரம் வராதா? என ஏங்கினார்கள். ஐக்கிய நாடுகள் சபை என்று உள்ளதே! மக்களைப் பாதுகாப்பதற்கான உரிமை என்று ஒரு நடைமுறை அங்கு உள்ளதே! ஏன் தம்மை நோக்கி அவர்களின் கடைக்கண்பார்வை விழவில்லை என்று தவித்தார்கள்.

கூப்பிடுதூரத்தில் 6 கோடி தமிழகச் சோதரர்கள் உள்ளார்கள் புலம் பெயர் நாடுகளில் இரத்த உறவுகள் உள்ளார்கள் -எப்படியும் தமது அவலம் தீர்க்கும் ஏற்பாடுகளைச் செய்து நல்ல செய்தி தருவார்கள் எனக் காத்திருந்தார்கள்.

எமது சக்தியனைத்தையும் திரட்டி வீதியில் இறங்கிப் போராடிப் பார்த்தும் நம்மால் எதுவுமே செய்ய முடியவில்லையே! நம் கண் முன்னாலேயே ஒரு பெரும் தமிழின அழிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறதே! இது நமது தேசத்தின் ஆன்மாவின் மீது பெரும் துயர வடுவாய்ப் பதிந்திருக்கிறதே! இப் பெருந்துயர் நம்மையெல்லாம் நாளும் தின்று தீர்க்கிறதே என இன்றும் ஏங்குகிறார்கள்.

தமிழர் தேசத்தின் இப்பெருந்துயரை வெளிப்படுத்தும் வகையில்தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ தேசிய துக்க நாளைப் பிரகடனப் படுத்தியிருக்கிறது.

இத் தேசிய துக்க நாளை நினைவுகூரும் தருணத்தில் முள்ளிவாய்க்காலிலும் தமிழீழத்தின் அனைத்து நிலப்பரப்பெங்கும் கொல்லப்பட்ட மக்களுக்கு எமது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிங்கள இராணுவத்தின் தமிழின அழிப்பை எதிர்த்து நின்று பெரும் வீரத்துடன் போராடி, தமிழீழ நிலப்பரப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கச் சமர் புரிந்து தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களை நமது நெஞ்சக்கூட்டினுள் இருத்திக் கொள்கிறோம்.

தேசிய துக்கம் என்பதும் ஆறாப் பெருந் துயர் என்பதும் எமது மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகள். முள்ளிவாய்க்கால் நினைவுகள் எமக்குள் முதலில் ஏற்படுத்துவது ஆறாப் பெருந்துயரைத்தான். இத் துயரில் இருந்து கடும் சினமும் கனலும் எம்முள் எழுகின்றன. இன அழிப்பின் துயர நினைவுகள் ஆறாக் கொடுஞ் சினமாக நமது கூட்டு நினைவுகளில் நெருப்பாகத் தகிக்கின்றன. இந் நெருப்பு என்றும் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் கனன்று கொண்டுதான் இருக்கும். எந்தவித அரசியல்ரீதியான சரணாகதியையும் அது சுட்டெரிக்கும். தமிழீழ மக்களின் விடுதலை மட்டுமே கனலும் இந் நெருப்பை ஆற்றுப்படுத்த உதவும்.

தமிழின அழிப்பு ஒன்றே அரச கொள்கை

முள்ளிவாய்க்கால் பேரவலம் தற்செயலாக நடந்தவொன்றல்ல. போரின் இடையில் சிக்கி மக்கள் இறந்து போன நிகழ்வுமல்ல. இயற்கை செய்த கொடுமையுமல்ல.

இது நன்கு திட்டமிடப்பட்டு சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு. இத் தமிழின அழிப்புக்குத் தெளிவான நோக்கமும் இலக்கும் இருந்தன. ஈழத் தமிழர் தேசத்தினை, ஈழத் தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாசைகளைச் சிதைத்து விடுவதுதான் இந்த நோக்கமும் இலக்குமாக இருந்தன.

இந்த நோக்கமும் இலக்கும் முள்ளிவாய்க்காலுக்குரியதொன்றாக மட்டும் இருக்கவில்லை. இது நீண்டகாலமாக சிங்கள அரசு கொண்டிருக்கும் தமிழின அழிப்புக் கொள்கை. இந்த தமிழின அழிப்பு இலக்கைக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் ஐனாதிபதி மகிந்த இராஜபக்ச மட்டுமல்ல. சிங்கள ஆட்சியாளர்கள் அனைவருமே அவர்கள் எந்தக் கட்சியியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதே கொள்கையைக் கொண்டிருப்பவர்கள்தான்.

இன்றைய ஆட்சித் தலைவர்கள் – மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் சரி, ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் சரி, சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவாக இருந்தாலும் சரி தமது கைகளில் தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்தவர்கள்தான். சிங்கள அரசின் தமிழின அழிப்புக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள்தான்.

யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் இவர்களுக்கிடையே அணுகுமுறை மாற்றம் இருக்கலாமேயன்றி அடிப்படை இலக்கில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

அனைத்துலக சமூகத்துக்குப் பொறுப்புண்டு!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு சிங்களத்தால் மட்டும் நிகழ்த்தப் பட்ட ஒன்றல்ல. இதற்கு ஐக்கிய நாடுகள் சபை முதற்கொண்டு அனைத்துலக சமூகமும் பொறுப்பெடுக்க வேண்டும்.

அனைத்துலக சமூகம் தனது நலனின் அடிப்படையில் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகக் காத்த மௌனம்தான் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு வழி கோலியது.

எம்மால் முடிந்தவெல்லாவற்றையும் செய்து பார்த்தோம். சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் யுத்தத்தின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முனைந்து நிற்கும் போது எம்மால் என்ன செய்து விட முடியும் என அனைத்துலக சமூகத்தில் இருந்து வெளிப்படும் கருத்து நேர்மையானதும் அல்ல. ஒரு போரில் நடுநிலைமை வகிப்பவர்கள் மட்டுமே இத்தகைய கருத்தைக் கூறத் தகைமை உடையவர்கள்.

போரில் அனைத்துலக சமூகம் மிகத் தெளிவாகச் சிறிலங்கா அரசுக்கு ஆதரவு வழங்கியது. இந்த ஆதரவுதான் சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு வாய்ப்புக் கொடுத்தது. தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இப்பெரும் கொடுமைக்கு அனைத்துலக சமூகமும் பொறுப்புக்கூறியாக வேண்டும்.

இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மக்கள் பெருந்தொகையாகக் கொல்லப்பட்டமைக்கு விடுதலைப்புலிகள் அமைப்பினைக் குற்றம் சாட்டும் கருத்துக்களே கூடுதலாக அனைத்துலக சமூகத்திடம் இருந்து எழுவதனையும் நாம் பார்க்கிறோம்.

தம்மால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஏற்று மக்களை வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை, அவ்வாறு அனுமதித்திருந்தால் இப் பேரவலம் நடந்திருக்காது என்பதே இதற்காக இவர்கள் முன் வைக்கும் வாதம். இவர்கள் இங்கு சிறிலங்காவின் தமிழின அழிப்பு நோக்கத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

மேலும், இவர்கள் முன்வைத்த திட்டம் எல்லாம் தமிழர் தரப்பு, தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தைக் கைவிட்டு, அரசியல், இராணுவரீதியில் சரணடைந்து தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே.

அப்போதுகூட உங்களால் பாதுகாப்பு உத்தரவாதம் தரமுடியுமா என்ற கேள்விக்கு தம்மால் எந்தவித பாதுகாப்பு உத்தரவாதமும் தரமுடியாது என்று கைவிரித்ததே அவர்கள் பதிலாக இருந்தது.

இங்கு அனைத்துலக சமூகத்திடம் நாம் ஒரு கேள்வியினை எழுப்ப விரும்புகிறோம்.

ஏன் விடுதலைப்புலிகள் அமைப்பு கோரியதுபோலவும,; தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் உலக நாடெங்கிலும் தமிழ் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களின் போது கோரியதுபோலவும், நிபந்தனையற்ற யுத்த நிறுத்தம் ஒன்றை அனைத்துலக சமூகம் கொண்டு வந்து மக்கள் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியாதா?

ஒரு குறுகிய காலத்துக்குக்கூட மனதாபிமான அடிப்படையில் ஒரு யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவர அனைத்துலக சமூகம் முழு மனதாய் முயலவில்லையே?

எந்தவித யுத்த நிறுத்தமும் விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பைக் கொடுத்துவிடும் என்ற சிந்தனைதானே அனைத்துலக சமூகத்திடம் மேலோங்கியிருந்தது! மக்கள் உயிர்களைப் பாதுகாப்பதா அல்லது விடுதலைப்புலிகளை அழிப்பதா என்பதில் மக்கள் உயிர்கள் காக்கப்படுவதைவிட விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதுதானே அனைத்துலக சமூகத்தின் தெரிவாய் இருந்தது!

விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தன் குழந்தையைப் பாதுகாக்க வேண்டித் துடி துடிக்கும் பெற்றோரின் மனநிலையில்தான் அவர்கள் இறுதிப் போரக் கால கட்டத்தில் இருந்தார்கள். மக்கள் உயிரிழப்பைத் தடுக்க யுத்த நிறுத்தம் என்ற மருத்துவத்தைக் கோரினார்கள். அனைத்துலக சமூக மருத்துவர்கள் அதற்கு மனமிரங்கவில்லையே!

தனது குழந்தையைத் தானே கொன்று விடுவதா அல்லது இறுதிவரை போராடி குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்;புக்கள் ஏதாவது வராதா என்று முயற்சிப்பதா என்ற தெரிவில் அவர்கள் இரண்டாவதனைத் தேர்ந்தெடுத்தார்கள். பெற்றோரின் மனநிலையில் இருந்து பார்க்கும் எவராலும் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

நாம் இவற்றை இங்கு குறிப்பிடுவது அனைத்துலகச் சமூகத்தின் பாத்திரத்தை நிராகரிப்பதற்காக அல்ல. மாறாக அனைத்துலச சமூகம் தார்மீக நேர்மையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்த வேண்டியே நாம் இவற்றைக் குறிப்பிடுகிறோம். நலன்களுக்காக அறத்தைப் பலிகொடுக்கும் அணுகுமுறையினை அனைத்துலக சமூகம் கைவிட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டவே இவற்றைக் குறிப்பிடுகிறோம். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகத்துக்கும் பொறுப்பிருக்கிறது என்பதனை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நீதி கோரவே இவற்றைக் குறிப்பிடுகிறோம்.

இப்போதும்கூட தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளை நடாத்தி சிறிலங்காவைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுமாறு தமிழ் மக்கள் கோருகிறார்கள். வடக்கு மாகாணசபையும் இத்தகைய தீர்மானமொன்றை நிறைவேற்றியிருக்கிறது. இத் தீர்மானம் முள்ளிவாய்க்காலுக்கு நீதி கோரும் வகையிலான ஒரு தீர்மானம். துணிச்சலாக முடிவெடுத்து இனஅழிப்புத் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியமைக்காக முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும் நாம் பாராட்டுதல்களை இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாமும் சிறிலங்காவை தமிழின அழிப்புக் குற்றச்சாட்டின் கீழ் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்துமாறு கோரி ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கமொன்றை நடத்தி வருகிறோம். இதன் ஊடாக அனைத்துலக சமூகத்திடம் மீண்டும் நீதி கோரி நிற்கிறோம்.

நாம் யதார்த்தம் புரியாத குருட்டு இலட்சியவாதிகளா?

எங்களை யதார்த்தம் என்றால் என்னவென்று புரியாத குருட்டு இலட்சியம் பேசும் தீவிரவாதிகளாகக் கணிப்பவர்கள் இன்று நேற்று எம்மண்ணில் நடந்தவற்றை ஒருமுறை அலசிப் பார்க்க வேண்டும்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் வந்த புதிய வாய்ப்புக்களை யதார்த்த நிலையில் முன்னெடுத்து முள்ளிவாய்க்காலில் நேரில்சென்று எம்மவரெல்லாம் வணக்கம் செலுத்தப் போகின்றனரென இந்நினைவெழுச்சி வாரத்தின் ஆரம்பத்தில் நாமெல்லாம் உவகைப்பட்டோம். ஆனால் நடந்துள்ளது என்ன?

கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகட்கும் சிதைக்கப்பட்ட எமது உணர்வுகட்கும் அமைதி தேடிப் புறப்பட்ட எமது அரசியல் தலைவர்கள் அப்பகுதிக்குப் போகமுடியாதென்ற ஆணையை அடக்குமுறை ஆட்சிசெய்யும் காவல்துறையும் இராணுவமும் சட்டத்தின் துணையோடு விதித்துள்ளனர்.

மரணித்தவருக்கு மலரஞ்சலி செய்யும் எமது அடிப்படை உரிமையினை வன்மையாக இன்று மறுத்துள்ளனர்.

எனவேதான் இச்சிங்களதேசம் தனது அணுகுமுறையிலும் அளந்துபேசும் சொல்லாடலிலும் எம்மையும் உலகத்தையும் ஏமாற்றிக்கொண்டு தங்கள் அடிப்படை இலக்கில் எம்மை அடக்கி ஆளும் இலட்சியம் கொண்டவர்களாகவே உள்ளார்கள் என்பதை இத்துயரம் சுமந்த வாரத்தில் நாம் மீளவும் நினைவு கொள்கிறோம். என்னதான் எம்மவர் வளையத்தயாராக வரிசையில் நின்றாலும் அவர்கள் மாறத் தயாரில்லை என்பதே இன்றும் யதார்த்தமாயுள்ளது.

இந்நிலையில் சிங்களத்தின் அடக்குமுறைத் தீர்ப்புக்கு அடிபணிந்து போகாமல் தாயகத் தலைமை இதனை ஒரு அரசியல் போராட்டமாக ஒரு அறப்; போராட்டமாகக் கையிலெடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் மக்களைத் திரட்டி ஒரு மக்கள் போராட்டமாக முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னேற வேண்டுமெனவே நாம் எதிர்பார்க்கிறோம்.

தமிழீழத் தனியரசே பரிகாரநீதி!

இப்போதும்கூட அனைத்துலக சமூகம் தனது நலனின் அடிப்படையில் சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப்பொறிமுறைக்கு அல்லது அனைத்துலக நிபுணர்கள் உதவி செய்யும் ஒரு கலப்புப்பொறிமுறைக்கு ஆதரவளிக்கப் போகிறதோ என்ற ஐயம் எமது மக்களுக்கு எழுந்துள்ளது.

அனைத்துலக உறவுகளில் நலன்கள் மட்டுமல்ல உலகளாவியரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படை மனித விழுமியங்களுக்கும் இடம் இருக்கிறது என்றே இன்றும் நாம் நம்புகிறோம். அரசுகளின் நலன்கள் குறித்த சமன்பாட்டை நீதிக்காகக் குரல் கொடுக்கக்கூடிய உலக சிவில் சமூகம் மாற்றியமைக்கும் வாய்ப்புகள் இன்னும் உண்டு என்றே கருதுகிறோம்.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையுமென நாம் திடமாக நம்புகிறோம்.

ஐனநாயக வழியில் இத் தீர்வினை எட்டிக் கொள்ள ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிநாட்டு நிலைப்பாட்டினையும் உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படுவதே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமது உயிரை ஈகம் செய்த அனைவருக்கும் வழங்கப்படக்;;கூடிய நாம் பெற்றுக் கொடுக்கக்;கூடிய நீதியாக இருக்க முடியும்.

இந்த நீதியினை எமக்கு வழங்குமாறு நாம் இத் தருணத்தில் அனைத்துலக சமூகத்தைக் கோருகிறோம். நீதி கிடைக்கும் வரை எமது நீதிக்கான போராட்டம் தொடரும் என முள்ளிவாய்க்கால் நினைவுடன் உறுதி எடுத்துக் கொள்கிறோம்!

முள்ளிவாய்க்கால் முடிவல்ல! புதியதோர் ஆரம்பம்!!

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மே18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts