ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு ஈழத் தமிழருக்கு உந்துசக்தியாக அமைகின்றது !

  • September 18, 2014
  • TGTE

Rudrakumranஸ்கொட்லாந்தில் நடைபெறுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுவாக்கெடுப்பு ஈழத் தமிழருக்கு உந்துசக்தியாக அமைகின்றதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்,

நீதியினதும் தார்மீகத்தினதும் அடிப்படையில் இலங்கையிலும் பொது வாக்கெடுப்பு உடனே நிகழ்த்தப் படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செப்18ம் நாள் வியாழக்கிழமை இடம்பெறுகின்ற ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு குறித்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்:

ஸ்கொட்லாந்தில் நடைபெறுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு தொடர்பாக, ஸ்கொட்லாந்து மக்களுக்கும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மாண்புமிகு டேவிட் கமரூன் அவர்களுக்கும், ஸ்கொட்லாந்து முதல் அமைச்சராக விளங்கும் மாண்புமிகு அலக்ஸ் சல்மன் அவர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இவ்வேளையில், பொது வாக்கெடுப்பு நடத்துவற்கான ஒப்புதலை வழங்கியதோடு, இவ்விடயத்தில் தனது நிலைப்பாட்டினை வலையுறுத்துவதில் அரசியல் படிமுறையிலும் அறிவு பூர்வமாகவும் முழுமையாக ஈடுபட்டுவரும் பிரித்தானியப் பிரதமர் மிகவும் பாராட்டுக்கு உரியவர் என்பதை இங்கு வலியுறுத்துவதில் நான் பெருமையடைகின்றேன்.

இப்பொது வாக்கெடுப்பின் முடிவு என்னவாக அமைய வேண்டும் என்பதில் எமக்கென நிலைப்பாடு எதுவும் இல்லை. ஆனாலும் ஸ்கொட்டிஷ் இன மக்கள் சுதந்திரம் தேடும் முயற்சியில் இறங்குவதற்கான முன்னணிக் காரணிகளாக விளங்குபவை, பிரித்தானிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளின்மீது அவர்கள் கொண்டுள்ள அதிருப்தியும், ஆங்கிலேயர்கள் தம்மீது கொண்டுள்ள ஏனோதானோவென்ற நிலைப்பாடு பற்றிய மனவெறுப்புமேயாகும்.

ஈழத் தமிழர்கள் என்ற வகையில், ஸ்கொட்டிஷ் மக்களது இன்றைய பொதுவாக்கெடுப்பு, எந்த ஒரு வகையிலும் அம்மக்களது தேசிய அடையாளத்தைக் காரணப்படுத்தி அவர்கள் மீது எவ்வகையான மனித உரிமை மீறல்கள் இனஒழிப்பு ஏற்பட்டதால் முன்னெடுக்கப் படவில்லை என்பதனை நாங்கள் நன்கு அறிவோம்.

ஸ்கொட்டிஷ் மக்கள் தமது சொந்த அரசின்கீழ் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள் என்பதையும், 1707 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய இராட்சிய சட்டத்தினால்தான் அவர்கள் இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டார்கள் என்பதையும்கூட நாங்கள் அறிவோம்.

இலங்கைத் தீவினில் வாழ்ந்து வந்த தமிழரது நிலையும், ஸ்கொட்டிஷ் மக்களது பின்னணியும் ஒருவகைப்பட்டவை என்பது கண்கூடானது. ஈழத் தமிழரும் தமக்கேயான அரசின்கீழ் வாழ்ந்து வந்தவர்கள் என்பதும், இலங்கைத் தீவினை தன்வசப் படுத்திய ஆதிக்க சக்திகளே தமது நிர்வாக வசதிக்கென தீவில் அதுவரை இயங்கி வந்த மூன்று அரசுகளையும் ஒன்றிணைத்தார்கள் என்பது வெளிப்படை.

இந்தப் பொது வாக்கெடுப்பினை நடாத்துவதற்கு பிரித்தானியப் பிரதமர் தனது சம்மதத்தை வழங்கியுள்ளார் என்பது மட்டுமன்றி, அனைத்துலக சமூகத்தின் எந்தவொரு பகுதியிலிருந்தும் எந்தவித எதிர்ப்பும் இந்த முடிவினைப் பொறுத்த வரையில் வெளிப்படவில்லை என்பதனையும் நாம் இங்கு சுட்டிக் காட்டுதல் பொருந்தும்.

உலகப் பரப்பில் பொது வாக்கெடுப்பு எனும் பொறிமுறையானது செழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே.

பிரஞ்சுப் புரட்சிக் காலத்திலிருந்து, நோர்வே சுவீடன் நாடுகள் பிரிந்தது முதலான நிகழ்வுகளும், அண்மைக் காலங்களில் கொசோவோ, தென் சூடான் நாடுகளின் பிறப்பும் பிறவும் இந்த உன்னத பொறிமுறையாம் பொதுவாக் கெடுப்பு மூலமே நிறைவேறியுள்ளன. இதன் மூலம் மக்கள் தம் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடல் வேண்டும்.

ஸ்கொட்டிஷ் மக்களைப் போலவே தனித்துவத்துடன் வாழ்ந்த தமிழர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களினால் தமது நிர்வாகத் தேவைகட்காக சிங்களருடன் இணைக்கப்பட்டதும், பின்னர் 1948இல் பிரித்தானியர்கள் இலங்கையை விட்டுச் சென்ற போது, தமிழர்களது சொந்த நிலப் பரப்பின்மீது அவர்கள் கொண்ட கட்டுப்பாட்டினையோ அல்லது தமிழர்களது பாதுகாப்புக்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தினையோ உறுதிப் படுத்திச் செல்லவில்லை.

அன்றிலிருந்து இடைவிடாத கொடும் இன அழிப்புக்கு இன்றும் தமிழர் ஆளாகி வருகின்றனர். அவ்வகையான தொடரும் இன அழிப்பிலிருந்து தமிழர் விடுபட வேண்டுமாயின், அவர்களது சுய நிர்ணய உரிமை நிலை நாட்டப் படவேண்டும். தனி நாட்டின் கீழா அல்லது ஒன்றுபட்ட இலங்கையின் கீழா தாம் வாழ விரும்புகிறார்கள் என்பதனை அவர்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் நிறுவும் வாய்ப்பு அவர்கட்கு வழங்கப் படவேண்டும்.

இலங்கைத் தீவிலும் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையிலும் தொடர்ச்சியாகவும் இடம் பெற்று வந்த மனித உரிமை மீறல்களின் விளைவாக, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் பொது வாக்கெடுப்பாகக் கருதி, இறைமை படைத்த தனி நாடாகப் பிரிந்து செல்வதற்கான தமது ஆணையை மிகப் பெரும்பான்மையான வாக்குகள் மூலம் வழங்கினார்கள்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னர், புலம் பெயர் தமிழர் குழாம் இத்தகைய பொது வாக்கெடுப்பு நடாத்தப் படல் வேண்டும் எனும் கோரிக்கையை உலக சமூகத்திடம் முன்வைத்து வருகின்றது.

இலங்கையில் நிறைவேற்றப் பட்டுள்ள 6வது யாப்புத் திருத்தத்தின் மூலம், அந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் மக்களாட்சியின் வழியில் பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் கோரிக்கையை முன்வைத்தல் சட்ட விரோதமான தாக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கைத் தீவில் இடம் பெறும் தொடர்ச்சியான அடக்கு முறைகளிலிருந்து விடுபட்டு, பொது வாக்கெடுப்பின் மூலம் தனி அரசை அமைத்து வாழும் உரிமை அம்மக்களுக்கு உண்டு எனும் தர்மத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு, புலம் பெயர் தமிழர் குழாத்திடமும் அனைத்துலக சமூகத்திடமும் ஒப்படைக்கப் பட்டுள்ளது என்பதனையும் இங்கு வலியுறுத்தல் பொருத்த முடையதாகும்.

தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் தமிழ் நாடு சட்ட சபையில் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி, தமிழர்கள் தம் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழி செய்தல் வேண்டும் எனும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தனையும் நடந்ததின் பின்னரும், உலக அரங்கிலுள்ள சில பலம் வாய்ந்த சக்திகள் இந்த பொது வாக்கெடுப்புக்கான வேண்டுகோளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன என்பது வேதனை தருகின்றது.

தமிழீழப் பொது வாக்கெடுப்புக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் கருத்தானது எந்த வகையிலும் நீதியானதோ தார்மீகத்தின் பாற்பட்டதோ அல்ல என்பதே யதார்த்தமாகும்.

வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்துகின்ற அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை முற்று முழுதாக நடைமுறைப் படுத்துவதே நீதியான செயற்பாடாகும். அதையும்விட சர்வதேச சமூகம் பாகுபாடான வகையில் அனைத்துலக சட்டங்களை கையாளுவதன் மூலமே இன்று இலங்கையில் கண்கூடாக நிகழும் அநீதிகளைப் போன்றவற்றினைக் கட்டுப்படுத்தக கூடிய சர்வதேச நல்லாட்சி போதாதுள்ளது.

1990 ஆம் ஆண்டின் பின்னர் மட்டும், உலகில் முப்பத்தினான்கு நாடுகளுக்கு மேல் சுதந்திரம் பெற்றுள்ளன. இவ்வாறு புதுப்புது நாடுகளின் தோற்றத்தால் உலக ஒழுங்கில் எவ்வித சீரழிவும் ஏற்படவில்லை என்பதை நாம் அறிவோம்.

புதிய நாடுகளின் தோற்றத்திற்கு எதிராக இத்தகையதோர் வாதம் முன்வைக்கப்பட்ட போதிலும், அது தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு முற்றும் மாறாக, எங்கெங்கு புதிய அரசுகள் தோற்ற மெடுத்தனவோ அந்தந்தப் பிரதேசமெங்கும் அமைதியும் பாதுகாப்பும் பலம் பெற்றுள்ளன என்றே கூறலாம்.

எனவே ஐக்கிய இராச்சியத்தின் எதிர்காலம் ஸ்கொட்லாந்து பொது வாக்களிப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் இம்முக்கியமான தருணத்தில், இலங்கைத்தீவில் கொடியதொரு இன அழிப்பினால் அல்லற்படும் தமிழ் இனத்தின் அழுகுரலைக் கேட்டு அவர்களது,

அரசியல் எதிர்காலத்தினைத் தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்புக்கு வழிசமைக்குமாறு, அத்தனை மேம்பட்ட தேசங்கட்கும் ஐக்கிய நாடுகள் சபை அங்கத்துவ நாடுகட்கும் நாம் அறைகூவல் விடுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

More from our blog

See all posts