2011-08-11 செல்வி தமிழ்வாணியை இழிவுபடுத்தும் கூற்றுக்கு !

செல்வி தமிழ்வாணியை இழிவுபடுத்தும் கேத்தாபயவின் கூற்றுக்கு அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் கண்டனம் !

100_0435

 2009 யுத்தகாலப்பகுதியில் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின், நேரில் கண்ட சாட்சியமாக விளங்கும் செல்வி தமிழ்வாணியை இழிவுபடுத்தும் நோக்கிலான, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கூற்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது.

சிறிலங்கா படைகளினால் பெண்கள் பாலியல்வன்மத்துக்கு உள்ளாக்கப்பட்டதாயின், தமிழ்வாணி எவ்வாறு எவ்வித பாதிப்புக்களும் இன்றி, இலங்கையைவிட்டுச் தப்பிச் சென்றார் எனும் கேள்வியை முன்னிறுத்தி, பாதுகாப்பு செயலர் கோத்தாபய அவர்கள் இந்திய தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

பாதுகாப்பு செயலரின் இக்கருத்து குறித்து, நா.த.அரசாங்கத்தின் சிறுவர்- பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மிலேச்சத்தனமாக, உணர்வெதுவுமற்ற முறையில் சொல்லாடல் செய்வது, சிங்கள பேரினவாத கொடுங்கோல் ஆட்சியினது மிருகத்தனத்தையும், அவர்கள் கையில் தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளையும் தெளிவாகச் சுட்டி நிற்கிறதெனவும் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முழுவிபரம்

இந்திய தொலைக்காட்சி சேவையான  Headline Today யுக்கு அளித்த செவ்வியின்போது ஸ்ரீ லங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிரித்தானியத் தமிழ்ப் பெண் செல்வி தமிழ்வாணி அவர்களை இழிவு படுத்தும் வகையில் கூறிய வார்த்தைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் என்ற வகையில் நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் இவ்வகையில் மிலேச்சத்தனமாக உணர்வெதுவுமற்ற முறையில் சொல்லாடல் செய்வது அவர்களது கொடுங்கோல் ஆட்சியினது மிருகத்தனத்தையும் அவர்கள் கையில் தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளையும் தெளிவாகச் சுட்டி நிற்கிறது.

செல்வி தமிழ்வாணி அவர்கள் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எமது தாய் மண்ணில் நிகழ்ந்தேறிய படுகொலைகள் மானிடப் பேரழிவின் மத்தியிலும்கூட தன்னலமற்ற வகையில் அவ்விடத்தில் ஆற்றிய சேவையின் பெறுமதியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் புலம் பெயர் தமிழ்ச் சமூகமும் நன்கறிவோம்.

அவர் Chanel 4 தொலைக்காட்சிக்கு துணிவுடன் முதலில் கொடுத்துதவிய வாக்குமூலம் தான் பின்னர் இறுதிக்கட்டப் போரில் நடந்த உண்மைகளையெல்லாம் வெளிக்கொணர ஊன்றுகோலாக அமைந்தது.

எனவே கௌரவம் மிக்க தமிழ்ப்பெண் ஒருவரைப்பற்றி திரு கோத்தாபய ராஜபக்ச பொறுப்பற்றவகையில் ஏற்படுத்தியுள்ள அவதூற்று வார்த்தைகளை அனைத்துலகச் சமூகம் உடனடியாகக் கண்டிக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றோம் என அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

தகவல்துறை அமைச்சகம்

More from our blog

See all posts