2013-05-18 தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன்-ராதிகா.எம்.பி !

  • September 16, 2013
  • NEWS

கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை முதன்மையாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் மேற்கொள்ளப்பட்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார்.

தமிழ்மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடியோரையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் இழந்த துக்க நாள் இதுவென குறிப்பிட்ட ராதிகா சிற்சபைஈசன் எம்.பி அவர்கள் கனடாவின் 307 நாடாளுமன்ற உறுப்பினர்களில் என்னையும் ஒருவராக மக்கள் தெரிவு செய்துள்ளனர். இந்நிலையில் கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய நானும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தில் கை கோர்த்து இணைந்து ஒத்துழைப்பேன் என அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து தனது என்.டி.பி கட்சித் தலைவர் தோமஸ் மல்கெயார் அவர்கள் தமிழீழத் தேசிய துக்க நாளுக்கு வழங்கிய செய்தியினை நிகழ்வரங்கில் வாசித்திருந்தார்.

அச்செய்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் சிறிய நிலப்பரப்பினுள் வைத்து தமிழ் மக்களை கொன்றொழித்துள்ளனர். அதனால் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும், சோகத்தினையும் நான் நன்கறிவேன். பொது மக்கள் கொல்லப்பட்டதை நாம் எதிர்க்கின்றோம். அதுபற்றி சர்வதேச ரீதியில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகின்றோம். சிறிலங்காவில் நடைபெறவிருக்கும் பொதுநல அமைப்பு நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கனடா கலந்து கொள்ளக் கூடாது என நாம் வலியுறுத்தி வருகின்றோம் என என்.டி.பி கட்சித் தலைவர் தோமஸ் மல்கெயார் அவர்களது செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு பெருவலியினை சுமந்து கூட்டுநினைவாக அமைந்திருந்த இந்நிகழ்வில் லிபரல் கட்சிப்பிரதிநிதி எடுவார்டோ ஹராறி கனடாவிலுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகாரத்துக்கான பிரதிநிதி ஜோன் ஆகியூ, ஈழவேந்தன் ஐயா, ரொறொன்ரோ மாநகர சபை உறுப்பினர் கலாநிதி றேமன்ட் சோ ஆகிய சிறப்பு பிரதிநிதிகளும் உரைகளை வழங்கியிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுகளை மீட்டி உரையாற்றிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கலை கலாச்சார தொன்மைகள் பிரதி அமைச்சர் வின் மகாலிங்கம் அவர்கள் ஒரு நாட்டின் நல்லாட்சிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து பரிந்துரைகளும் மனித உரிமைகளும் தமிழீழ அரசமைப்பில் உள்வாங்கப்படும் என்பதனையே தமிழீழ சுதந்திர சாசனம முரசறைந்து நிற்கின்றதென தெரிவித்தார்

லண்டனில் இருந்து சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர்கள், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் ஈழத்தமிழர்களின் உடனடிப் பாதுகாப்பிற்கு சர்வதேச பாதுகாப்புப் பொறி முறை ஒன்று ஏற்படுத்தப் பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தி உரையாற்றிருந்தார்.

எழுச்சி நடனங்களுடன் இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வினை கனேடிய தமிழ் கொங்கிரசின் பேச்சாளர் பூபாலபிள்ளை, ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ள கென் கிருபா, முன்னாள் வேட்பாளர் சான் தயாபரன், இராஜரட்னம், சொர்ணலிங்கம் ஆகிய பிரதிநிதிகளும் பங்கெடுத்து வலுவூட்டியிருந்தனர்.

More from our blog

See all posts