சிறிலங்கா அதிபரின் போக்கினைக் அனைத்துலக சமூகம் கண்டிக்க வேண்டும் !!

சிறிலங்கா அரசுத் தலைவர் மைத்திரிபாலா சிறிசேனாவின் ஐ.நா பயணத்தின் போது, அவரின் போக்கினை அனைத்துலக சமூகம் கண்டிக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசுத் தலைவர் ஐ.நா பொதுமன்றில் உரையினை ஆற்றும் சமவேளை, 'சிறிலங்கா ஒரு குற்றவாளி நாடு' எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.

இந்நிலையில் சிறிலங்கா அரசுத் தலைவரின் பொறுப்புக்கூறலைத் புறந்தள்ளும் அவரது பொறுப்பற்ற போக்கினைக் வெளிப்படுத்தும் வகையில் அனைத்துலக சமூகம் நோக்கி அனைத்துலக ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் முழுவிபரம் வருமாறு :

https://www.einpresswire.com/article/404492603/censure-sri-lankan-president-tgte

சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா ஐநாவின் 72வது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் வொஷிங்டனில் ஆங்காங்கே நிகழவிருக்கும் சந்திப்புகளிலும் விருந்துபசார நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதானது ஐநா அமைப்பு என்ன புனிதமான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதைப்பற்றி எவ்வகையிலும் பொருட்படுத்தாத  ஒரு தன்மையையே காட்டுகின்றது.

கடந்த வாரம் 'வாஷிங்டன் போஸ்ட்' ஊடகம்  வட கொறியா பற்றிய ஐநா சபையின் அறிக்கையிலிருந்து வெளியே கசிந்த அறிக்கையின் ஒரு பகுதியைப் பற்றிய செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில், வடகொரியா மீது ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்படவுள்ள பொருளாதாரத் தடையிலிருந்து தப்புவதற்கு சிறிலங்கா அந்த நாட்டுக்கு உதவி செய்வதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிறிசேனா தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகின்றார், 'ஜெகத் ஜயசூரியாவையோ வேறெந்த முக்கிய இராணுவ அதிகாரிகளையோ யுத்த கால நாயகர்களையோ தண்டிப்பதற்கு உலகத்தில் எவரையும் நான் அனுமதிக்கப்போவதில்லை என்பததைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.'இது தான் அவரின் நிலைப்பாடு.

சிறிலங்காவின் போர்க்காலத் தளபதிகளில் ஒருவரும் தற்போதைய  பிரேசில், ஆர்ஜன்டீனா, சிலி, கொலம்பியா, சூரினாம் ஆகிய நாடுகளனைத்துக்கும் சிறிலங்காவின் தூதுவராகவுமுள்ள ஜெயசூரியாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்றம் பற்றிய சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தே சிறிலங்காவின் அதிபரின் இந்த நிலைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு  யுத்த காலத்தில் உயர் பதவி வகித்த பாதுகாப்புத் துறையின் முன்னைய மூத்த அதிகாரி ஒருவரை தண்டனை பெறுவதிலிருந்து விலக்களிக்கும் செயற் பாடானது  ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1(2015) தீர்மானத்திற்கு ஆதரவாக சிறிலங்காவின் அதிபர் தான் வழங்கிய உறுதிப்பாட்டைப் புறக்கணிக்கும் பாரதூரமான செயலாக விளங்குகின்றது.

இச்சந்தர்ப்பத்தில், சிறிலங்காவானது அமெரிக்காவோடு இணைந்து தயாரித்து, முன்வைத்த தீர்மானத்தில் பொறுப்புக் கூறல் எனும் விடயத்தின் அவசியத்தை சிறிலங்கா வலியுறுத்தி உள்ளதை நினைவு கூர விரும்புகின்றோம்.

அது மட்டுமன்றி, யுத்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்காக சிறப்பு வழக்கறிஞரை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கும் சிறிலங்கா தனது  ஆதரவை வழங்கியுள்ளதும் குறிப்பிடப் படல் வேண்டும். எனினும், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் வெளிவந்த ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.' சிறிலங்கா வழங்கிய உறுதிப்பாட்டினை நிறைவேற்றும் செயல் முறையானது ஏமாற்றத்தைத் தரும் வகையில் மிக மந்த கதியில் தான் இடம்பெற்று வருகின்றது. உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு இவை எந்த வகையிலும் வலுச் சேர்ப்பதாகக் காணப்படவில்லை. '

இவ்வாறு, இராணுவத்தின் உயர் தளபதிகளில் ஒருவராக பொறுப்பாற்றி தனக்குக்கீழ் இயங்கிவந்த அதிகாரிகள் இழைத்த குற்றங்களுக்கான வகைசொல்லவேண்டியவரான ஜயசூரியாவின்மேல்  அனைத்துலக சட்டங்களுக்கு அமைய  விசாரணை மே‌ற்கொ‌ள்ள வேண்டிய அதிபர்  சிறிசேனா  அதற்குப் பதிலாக எந்தவித கூச்சமும் இல்லாமல் நீதி நடவடிக்கைகளிலிருந்து விலக்களித்துப் பாதுகாப்பு வழங்க முன்வந்துள்ளது  அவரது ஆட்சியிலும் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்படாத ஒரு கேவலமான நிலை தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துவதையே காண்கிறோம்.

இக் குற்றங்கள் எல்லாமே காணொளிகளாக பதியப்பட்டும்  செய்மதி தொழில் நுட்பத்தின் மூலம்  உறுதி செய்யப்பட்டும் பின்னர் ஐநாவின் மனித உரிமை ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட பக்கச் சார்பற்ற விசாரணைக் குழு அதிகாரிகள் இவற்றை தாங்களே நேரடியாகப் பார்வையிட்டு உறுதி செய்ததன் மூலம் நிறுவப்பட்டவையே. இந்த விபரங்களை அக் குழு தனது அறிக்கையில் விபரமாக வெளியிட்டுள்ளது.

பாரிய யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்ட கடைசி வாரங்களில் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் சிறிசேனா தான் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளார். எனவே, அவர் இப்போதெடுக்கும் தன் நிலைப் பாட்டின் மூலம் எவ்வித தயக்கமும் இன்றி தனது சுயநலத்தைக் பார்த்துக் கொள்ள முற்படும் தன்மையும் புலப்படுகின்றது.

சிறிலங்காவில் அதன் இராணுவத்தினரால் பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுளார்கள். பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்; பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவற்றுக்கான நீதி கிட்டுமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே தொடர்கிறது.

அதிபர் சிறிசேனா பெரும் செருக்கோடு தனது இராணுவ அதிகாரிகளுக்கு சட்ட விலக்கு வழங்கத் துணிந்துள்ளார். அனைத்துலக சமூகமும் இவ்வாறு இன  அழிப்பு உள்ளடங்கலாக பாரிய யுத்தக் குற்றங்களை இழைத்தவர்களுக்கு சட்ட விலக்களிக்கும் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமலிருப்பதும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்துலக சமூகத்தின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, தற்போது மியன்மார் நாட்டில் இடம் பெற்றுவரும் இன அழிப்பு நடவடிக்கைகளை புரியும் இராணுவ அதிகாரிகளுக்கும் இது மறைமுகமான பலத்தைக் கொடுத்துள்ளது என்பதும் கருத்தில் கொள்ளப்படல்  வேண்டும்.

சிறிலங்காவின் அதிபரின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி அவர்களும் சட்ட விலக்களிப்பைப் பயன்படுத்தி எவ்வித பயமும் இன்றி செயல்பட இந்த நிலைப்பாடு வழி வகுக்கும்.

இவ் வாரம் நிகழவிருக்கும்  விருந்துபசாரங்களின் போது அதிபர்  சிறிசேனா தனது மதுக் கிண்ணத்தை உயர்த்தும் போது தனது சாதுரியத்தின் மூலம் சர்வதே சமூகத்தை மருட்டித்  தன் வழியில் கொண்டு  செல்வதில் தாம் காணும் வெற்றியை எண்ணி மகிழ்ந்து கொள்வார் என்பதில்  ஐயமில்லை.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly