முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இறுதி வணக்கத்தை தெரிவிக்கின்றது !

தமிழக முதலமைச்சரும் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் தானைத் தலைவியுமாய் விளங்கிய மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் இயற்கை எய்தினார் எனும் சேதியறிந்து நாம் சொல்லொணாத் துயர் அடைந்திருக்கிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

காலத்தால் ஆற்ற முடியா இப் பெருந்துயரில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுடனும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுடனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை இணைத்துக் கொள்வதுடன் தமிழீழ மக்கள் சார்பில் முதலைமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தனது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என நா.கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையின் முழுவடிவம் :

புரட்சித்தலைவி எனவும், அம்மா எனவும் பாசத்துடன் தமிழக மக்களால் அழைக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு வரலாற்று சாதனையாளர். தமிழ்ப் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல உலகளாவியரீதியில் பார்ப்பினும்கூட பெண்களின் ஆளுமைக்கு முன்னுதாரணமாகக் குறிப்பிடப்படக்கூடியவர். ஒரு கலைஞராகத் திரைப்படத்துறையில் சாதனை பல புரிந்தவர்.

ஆணாதிக்கம் நிறைந்த அரசியற்துறைக்கு அவர் புரட்சித்தலைவர் எம்.ஐp.ஆர். அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் தென்னிந்தியப் பிராந்தியத்தின் பல பெண் அரசியற் தலைவர்கள் போல குடும்பப்பின்னணி காரணமாக பாதுகாப்பாக ஆட்சிக் கட்டிலில்; அமர்த்தப்பட்டவர் அல்ல.

எம்.ஐp. ஆர். அவர்களின் மறைவுக்குப் பின்னர் செவ்வி ஜெயலலிதா அவர்கள், மிகுந்த போராட்டத்தின் மத்தியில் தனது ஆளுமையாலும் விடா முயற்சியினாலும் மக்களைக் கவரும் தன்மையாலும் கட்சித்தலைமையைக் கையேற்று, தேர்தல்களில் பல தடவை வெற்றி பெற்றுத் தமிழக முதல்வராகப் பல ஆண்டுகள் பெருமையுடன் திகழ்ந்தவர்.தனது தலைமைத்துவப் பண்பாலும் உறுதியாக முடிவுகளை எடுக்கும் ஆற்றலாலும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல முழுஇந்தியாவிலும் முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.

துணிச்சலும் அஞ்சாநெஞ்சுரமும் கம்பீரமும் கொண்ட தலைவராக விளங்கி இரும்புப்பெண் என்ற பெயரையும் பெற்றவர். பெண்களதும் ஏழை மக்களதும் அன்புக்குரியவராக இருந்தவர். வருமானம் குறைந்த மக்களது நன்மைகள் கருதிப் பல செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் ஆதரவு பெற்றவர்.

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக் காலத்திலும் அதன் பின்னரும் ஜெயலலிதா அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடு அவரைக் காவியத்தலைவியாகக் கருதும் நிலையை உருவாக்கியது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவரது அரசியல் நிலைப்பாடு அமைந்தது. தமிழ்நாடு சட்டசபையின்; வரலாற்றில் ஈழத்தமிழ் மக்கள் குறித்து மிக முக்கியமான தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கு செல்வி ஜெயலலிதா அவர்கள் காரணமாக இருந்தவர்.

சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக விசாரணை, சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழத்தனியரசு தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் வாக்கெடுப்பு, தமிழகத்தில் வாழும் அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை போன்ற ஈழத் தமிழ் மக்கள் குறித்த அவர் எடுத்த நிலைப்பாடுகள் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. தான் எடுத்த நிலைப்பாடுகளில் அவர் காட்டி வந்த உறுதித்தன்மை அவர் மீது ஈழத்தமிழ் மக்களிடையே மிகுந்த பற்றையும் மரியாதையையும் ஈட்டிக் கொடுத்தது. தமிழீழ மக்கள் ஒவ்வொருவரும் முதல்வர் ஜெயலலிதா அவர்களது இழப்பை தமது சொந்த வீடுகளில் நிகழ்ந்தது போன்று மிகுந்த வேதனையை உணர்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா அவர்களது மறைவை இயற்கையின் அழைப்பாக ஏற்று நாம் மனஅமைதி கொள்ள முயற்சிப்பதும், அவரது ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்பதும் இத் தருணத்தில் துயர் களைய உதவக்கூடிய செயற்பாடுகள். எனினும் காலத்தால் அழியுமோ இப் பெருந்துயர் எனும் எண்ணமே தற்போது எமது நெஞ்சை நிறைத்து நிற்கிறது.

முதல்வர் அவர்கள் அமைதியாய் உறங்குவதற்கு இயற்கை துணைபுரியட்டும்!

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly