புதிய ஆண்டில் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என எதிர்பார்க்கிறோம்! பிரதமர் !

  • January 1, 2016
  • TGTE

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ல் சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறை ஆகியன நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்;குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்ததெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ண உரிமையினை அடைந்து கொள்ளும் போராட்டத்தில் எவ்வாறு வென்றெடுக்கப் போகிறோம் என்பது புதிய ஆண்டில் நாம் எதிர் கொள்ளப் போகும் பெரும் சவாலாக அமையவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் புத்தாண்டுச் செய்தியின் முழமையான அறிக்கை :

உலக மக்கள் அனைவரும் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்கும் இவ்வேளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலரும் இப் புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்;றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம். இப் புதிய ஆண்டில் தமிழகத்தில் இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக மக்களின் இன்னல்கள் நீங்கி அவர்களது வாழ்வு செழிப்பாக அமையும் எனவும் நாம் நம்புகிறோம்.

கடந்து சென்ற 2015 ஆம் ஆண்டு நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்;குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்தது. சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறையினைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய ஆண்டாகவும் கடந்த வருடம் அமைந்தது. சிறிலங்கா அரசினைத் தமது நலன்கள் சார்ந்து ஆதரித்து நிற்கும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ண உரிமையினை அடைந்து கொள்ளும் போராட்டத்தில் எவ்வாறு வென்றெடுக்கப் போகிறோம் என்பது புதிய ஆண்டில் நாம் எதிர் கொள்ளப் போகும் பெரும் சவாலாக அமையவுள்ளது. இச் சவாலை எதிர் கொள்ளும் வகையில்; புதிய ஆண்டில் நாம் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இப் புதிய ஆண்டில் சிறிலங்கா அரசுக்கான புதிய அரசியல் யாப்பு வரையப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப் புதிய அரசியல் யாப்பின் ஊடாகத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட முடியும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்படுகிறது. எமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி புதிய அரசியல் யாப்பு சிறிலங்கா அரச கட்டமைப்பின் பௌத்த இனவாத மேலாண்மையினை மாற்றியமைக்கும் வகையில் அமையப் போவதில்லை எனவும் மாறாக தற்போது இருக்கும் கட்டமைப்பின் ஒரு தொடர்ச்சியாகவே இது அமையும் எனவும் தெரிய வருகிறது.

சிறிலங்காவின் இப் புதிய அரசியல் யாப்பு ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதனையோ, இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதி தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதனையோ அங்கீரிக்காது என்பது இப்போதே தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய அங்கீகாரம் இல்லாதவொரு எந்தவொரு முன்னெடுப்பின் ஊடாகவும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வினைக் காணமுடியாது என்பதனை இவ்வேளையில் நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

அதே நேரம் கடந்த காலங்களைப் போலன்றி இத் தடவை இப் புதிய அரசியல் யாப்புக்குத் தமிழ் மக்களின் சம்மதத்தைப் பெறும் வகையிலான முயற்சிகள்; புதிய ஆண்டில் மேற்கொள்ளப்படும் எனவும்; தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதம் பெறப்படுவதற்கான முயற்சிகளும், இப் புதிய யாப்பின் மீது இலங்கை பூராக நடாத்தப்படும் மக்கள் வாக்கெடுப்பின் ஊடாக தமிழ் மக்களது சம்மதத்தினையும் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளும் தற்போதய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது. இவ் விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவே நாம் வேண்டுகிறோம்.

கடந்த வருட இறுதிப் பகுதியில் தாயகத்தில் தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதொரு வடிவத்தில் அமையக்கூடிய அரசியல் தீர்வு குறித்த கருத்துப்பரிமாற்றங்களை, விவாதங்களை மக்கள் மயப்படுத்தி, ஈழத் தமிழர் தேசத்தினை விழிப்புணர்வுள்ள ஓர் அரசியல் சமூகமாக வளரத்தெடுப்பதில் ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் என்பது எமது எதிர்பார்ப்பாக உள்ளது. தம்மை தேர்தல் அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சியாக அல்லாது, அரசியல் முடிவுகளில் மக்களை, மக்கள் அமைப்புக்களைப் பங்காளர் ஆக்கும் வகையிலான, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டதொரு மக்கள் அமைப்பாகத் தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளமையினை நாம் பெரிதும் வரவேற்கிறோம்.

இப் புதிய ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 ஆவது ஆண்டின் நிறைவை எட்டும் ஆண்டாகவும் அமைகிறது. இப் புதிய ஆண்டில் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் யாப்பை உலகத் தமிழ் மக்களது பங்கு பற்றலுடன் நாம் ஆக்கத் தீர்மானித்திருக்கிறோம். ஈழத் தமிழர் தேசத்தையும, தேசத்தின் தாயகபூமியையும் சிங்களம் ஆக்கிரமித்து, சிங்கள பௌத்த மேலாண்மையைக் கொண்ட சிறிலங்கா அரசியல் யாப்பினுள் தமிழ் மக்களைக் கட்டிப் போட்டுள்ள நடைமுறையினை நிராகரிக்கும் வகையிலும், தமிழ் மக்களின் அரசியற் கனவைப் பிரதிபலிக்கும் வகையிலும் தமிழீழ அரசுக்கான அரசியல் யாப்பை அமைக்கும் முயற்சியினை வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடையும் இவ் ஆண்டில் நாம் மேற் கொள்ளவுள்ளோம்.

சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்புத் தொடர்பாக அனைத்துலகக் குற்றவியல் நீதி விசாரணை தேவை என்ற கோரிக்கையினை வலுப்படுத்தம் வகையில் சிறிலங்கா எவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிபை; பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துகிறது என்பதனைக் கண்காணிக்கும் வகையில் நிபுணர் குழுவை நாம் கடந்த ஆண்டில் அமைத்திருந்தோம். இந்த நிபுணர்குழு இவ் வருடத்தில் தனது செயற்பாடுகளை முனைப்புடன் மேற்கொள்ளும்.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் இப் புதிய ஆண்டில் மேலும் விரிவு படுத்தப்படும். பதிப்பகம், ஆவணக் காப்பகம், தமிழகத்தில் தமிழர் தகவல் மையம், Yes to Referendum பரப்புரை இயக்கம், நீதிக்காய் மரம் நாட்டும் இயக்கம், புலம் பெயர் நாடுகளில் தமிழ் மொழிக் கல்விக்கான வள ஆலோசனை மையம் உட்பட்ட வேலைத் திட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப் புதிய ஆண்டில் முன்னெடுக்கும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுடன் உலகத் தமிழ் மக்கள் இப் புதிய ஆண்டில் தம்மை மேலும் இணைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இப் புதிய ஆண்டில் எமது பயணத்தைத் தொடர்கிறோம்.

நன்றி, தமிழரின் தாகத் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்ள்ளது.

More from our blog

See all posts