பன்முக ஆளுமையாள் தமிழினி அவர்களுக்கு மரியாதை வணக்கம்!

  • October 19, 2015
  • TGTE

உலத்தமிழர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) அவர்களுக்கு நாடுகடந்த தழிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழத்தமிழர் தேசத்தின் விடுதலையின் குரலாக, களப்போராளியாக பன்முக ஆளுமை நிறைந்தவராக தமிழினி அவர்கள் விளங்கியிருந்தார்.

பாடசாலை காலங்களிலேயே இனத்தின் மீதான, மொழியின் மீதான பெண்களின் உரிமைகள் மீதான தனது பற்றுதலையும் ஆற்றலையும் ஆளுமையோடு வெளிக்காட்டியவர்.
1991ம் ஆண்டு காலப்பகுதியில் களப்போராளியாக தன்னை இணைத்துக் கொண்ட தமிழினி அவர்கள், பெண்களின் வீரத்துக்கும் துணிச்சலுக்கும் தன்னை முன்மாதிரியாக களத்தினில் தன்னை வெளிக்காட்டியிருந்தவர்.

நிலத்திலும் புலத்திலும் தனது ஆளுமை மிக்க பேச்சாற்றலால் போராட்டத்தினை மக்கள் மயப்படுத்தியதில் காத்திரமான பங்கினை வகித்தவர்.

பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் அவர் எதுவித விட்டுக் கொடுப்புகளுக்கும் தயார் இல்லாதவர் என்பதையும், தென்னிலங்கையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள சிங்களப் பெண்களின் மனச்சாட்சிக்கான தமிழ்க்குரலாக தமிழினி அவர்களை விழிக்கும், சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன அவர்களது கூற்று, தமிழினி அவர்களது ஆளுமையின் எல்லைகடந்த தாக்கத்துக்கு சான்றாகவுள்ளது.

இன்று, சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர் தேசத்தில் ஒப்பீட்டளவில் கிடைத்துள்ள வெளிக்குள், பெருந்திரளான மக்கள் தமிழினி அவர்களுக்கு செய்கின்ற மரியாதை வணக்கம், அவர் தேசத்தின் மீதும் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்றுதலையும் அர்ப்பணிப்பினையும் வெளிக்காட்டுகின்றது.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts