சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துங்கள்: 1.4 மில்லியன் கையெழுத்து ஐ.நாவிடம் கையளிப்பு!

  • September 27, 2015
  • TGTE
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் 1.4 மில்லியன் கையெழுத்து ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையளித்தது.

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம், ஐ.நா விசாரணைக்குழு, சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்க பிரேரணைக்குழு மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்துலக நாடுகளிடம் மில்லியன் கையெழுத்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 15ம் நாள் தொடங்கப்பட்ட இக்கையெழுத்து இயக்கத்தில் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்கள் இணைய மூலமாகவும் நேரடியாகவும் ஒப்பமிட்டிருந்தனர்.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் உள்நாடும் வெளிநாடும் இணைந்ததான கலப்பு விசாரணை நீதிமன்றம் அமைப்பது குறித்து வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்பதிவாக (Data CD) வடிவில் மில்லியன் ஒப்பங்கள் உள்ளடக்கப்பட்டு, ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நா. தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இதனை ஒப்படைத்துள்ளனர்.

மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கை மனு பின்வருமாறு:

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு, நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சிறிலங்கா குறித்த ஐ.நா. உள்ளக மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 70,000 தமிழ்மக்கள் உயிரிழந்ததாக ‘நம்பகமான மதிப்பீடுகள்’ இருந்தன.

முன்னாள் அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக்காட்டியுள்ளது போல, வன்புணர்ச்சியைச் ஒரு யுத்தச் செயல்தந்திரமாகப் பயன்படுத்திய போஸ்னியா, பர்மா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான், மற்றும் பிற நாடுகளைப் போன்ற வரிசையில் குறிப்பிடத்தக்க நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா இருக்கிறது.

ஒரு உள்நாட்டு அமைப்போ அல்லது ஒரு சர்வதேசமும் சிறிலங்காவும் கொண்ட ஒரு மாறுபட்ட அமைப்போ தமிழ் மக்களுக்கு நீதியைக் கொண்டுவராது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த ஒரு சர்வதேச நீதிச் செயல்முறைக்கும் பதிலாக, புதிய சிறிலங்கா அரசாங்கம் ஒரு உள்நாட்டு அல்லது கலப்பு அமைப்பைக் கோருவது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு சிறிலங்கா அரசை நிறுத்தும் கோரிக்கையை திசைதிருப்புகிற, மற்றும் பொறுப்புடைமை குறித்த பிற அர்த்தமுள்ள நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துகிற முயற்சியாகும். ஒரு உள்நாட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவும் முயற்சிகள் தமிழர்களுக்கு எதிரான தீவிரமான குற்றங்களைப் புரிந்துள்ளவர்களைப் பாதுகாக்கும் இன்னொரு திசைதிருப்பும் செய்லதந்திரம் ஆகும்.

போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு முற்றிலும் எந்தப் பொறுப்பேதும் இல்லை என்பதால், சிறிலங்காவின் தற்போதைய சூழ்நிலை, ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ், ‘அமைதிக்கான அச்சுறுத்தல்’ தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது.

1)சிறிலங்கா அரசு இனரீதியாக நடுநிலையாக இல்லை:

சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்த பெரும்பான்மை சமூகத்தின் கலாச்சார யுத்தத் தலைமையாக நடந்துகொண்டது. அரசின் அரசாங்கம், இந்த விடயத்தில் சிறிலங்கா, தமிழர்களுக்கு எதிராகச் சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளது என்பதோடு மட்டுமின்றி, அது விடுதலையடைந்த 1948 இலிருந்து, அறுபது ஆண்டுகள் காலமாக அவர்களைப் பாதுகாக்கவும் தவறியுள்ளது.

உண்மையில், பிரச்சனைக்குரிய தீவிரமான குற்றங்களில் பெரும்பாலானவை அரசு இயந்திரத்தினாலேயே இழைக்கப்பட்டவையாகும்.

தனது குடிமக்களின் உரிமைகள் மீறப்பட்டபோது, தனது பாத்திரம் மற்றும் பொறுப்புக் குறித்து அதிகாரபூர்வமாக அரசால் ஒப்புக் கொள்ளப்படுவதும் பொறுப்புடைமைக்கு அவசியமானதாகும்.’ சிறிலங்காவில் பொறுப்புடைமை குறித்த ஐ.நா.பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை (மார்ச் 31, 2011).

2) சிறிலங்கா நீதித்துறை இனரீதியாக நடுநிலையானதாக இல்லை:

தமிழர்களுக்கு எதிரான இழிசெயல்கள் என்று வரும்போது, சிறிலங்கா நீதித்துறை எப்போதும் அரசியல் தலைமைக்கு அடிபணிவதாகவே இருக்கிறது, இது கடந்தகால விசாரணை ஆணையங்கள் அனைத்திலும் சான்றாக இருக்கிறது. 1983 இல், சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசாக ஒரு தமிழர் இருந்தும் கூட, 1983 ஆம் ஆண்டின் படுகொலையில் தமிழர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டதற்கு எந்த ஒரு நபருக்கு எதிராகவும் எந்த ஒரு வழக்கு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

(நீதி) அமைப்பின் கடந்தகாலச் செயல்பாடு மற்றும் தற்போதைய கட்டமைப்பு மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அரசியல் சூழலில் அது நீதி வழங்கும் என்பதில் சிறிதளவு கூட இந்தக் குழுவுக்கு நம்பிக்கையில்லை.’ சிறிலங்காவில் பொறுப்புடைமை குறித்த ஐ.நா.பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை (மார்ச் 31, 2011).

1958 இல் தொடங்கி இன்று வரை, தமிழர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டு வருவதற்கு, நீதி வழங்கப்படவேயில்லை. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் சர்வதேச அழுத்தம் காரணமாக செயல்திறனற்ற விசாரணை அமைப்புக்களை நியமித்தன, அவை குற்றமிழைத்தவர்களுக்கு ஒருமுறைகூடத் தண்டனை வழங்குமளவுக்குச் செல்லவில்லை. (சர்வதேச பொதுமன்னிப்புச் சபை, ‘இருபதாண்டுகாலப் பாசாங்கு : சிறிலங்காவின் விசாரணை ஆணையங்கள்,’ ஜூன் 11, 2009).

3) தமிழர்களுக்கு நீதி வழங்கும் அரசியல் உறுதிப்பாடு சிறிலங்காவில் இல்லை:

முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபயா ராஜபட்சே சிறிலங்காவில் இருக்கும் வரை பாதுகாப்பாக இருப்பார்: சிறிலங்கா நீதித்துறைத் துணை அமைச்சர்.

4) உள்நாட்டின் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் 2010 (எல்.எல்.ஆர்.சி.) தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை: 

எல்.எல்.ஆர்.சி. தீவிரமான குறைபாடுகள் உடையது, அது ஒரு செயலூக்கமுள்ள பொறுப்புடைமை அமைப்புக்கான சர்வதேசத் தரங்களைக் கொண்டதாக இல்லை.’ சிறிலங்காவில் பொறுப்புடைமை குறித்த ஐ.நா.பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை (மார்ச் 31, 2011).
மாண்புமிக்க மனிதர்களின் சர்வதேச சுயேச்சையான குழு 2008 மார்ச்சில் விலகிக்கொண்ட போது, உள்நாட்டு விசாரணையைக் கண்காணிப்பதில் சர்வதேச சமூகத்தின் ஈடுபாடும் தோல்வியிலேயே முடிந்தது. (மனித உரிமைகள் கண்காணிப்பகம் – சிறிலங்கா: இழிசெயல்கள் குறித்த உள்நாட்டு விசாரணை ஒரு மூடுதிரை –அக்டோபர் 27, 2009).

சிறிலங்காவின் அரசியலில் சிங்கள பௌத்த மேலாதிக்க நிறுவனங்களுடனான நீண்ட கால அனுபவத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டால், சிறிலங்கா ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் எந்தத் தவறான செயலுக்காகவும் எப்போதாவது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உள்நாட்டு அமைப்பின் மீதான சர்வதேசக் கண்காணிப்பு நேரத்தை வீணடிக்கவே பயன்படும். (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2015 பிப்ரவரி 24 அன்று ஐ.நா.வுக்கு அளித்த மனுவில்).

5) சிறிலங்காவில் ஆட்சி மாற்றம், நிறுவனமயமாக்கப்பட்ட, தண்டிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் மாற்றத்தைக் கொண்டுவராது:

அதிபர் மாற்றப்பட்டுவிட்டாலும் கூட, தமிழர்கள் தொடர்பான அரசியல் சூழல் மாறவில்லை.

யுத்தத்தின் முடிவில் இராணுவப் படைத்தலைவராக இருந்த தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தில் முதுநிலைப் பதவிகளில் இருக்கிறார்கள்.

அவசரநிலை ஒழுங்குவிதிகள் மற்றும் துணை இராணுவப்படை ஒட்டுக்குக்களை கூடியஅளவு பயன்படுத்துவது ஆகியன தவிர, அனைத்துக் காரணிகளும், குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டம், கொழும்பில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னரும் கூட இன்னும் நடப்பில் இருக்கின்றன.

இராணுவ இயந்திரம் இன்னமும் அவ்வாறே உள்ளது, வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல் தமிழர்களிடையே அச்சம் நீடிக்கச் செய்கிறது, மேலும் இவை அங்கு அன்றாட நடவடிக்கைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகள் உள்நாட்டு அல்லது கலப்புத் தீர்ப்பாயத்தின் முன்பு உண்மையில் சுதந்திரமாக இருப்பது சாத்தியமில்லை.

6) புதிய அதிபர் சிறிசேனாவின் சாத்தியப்பட்ட குற்றத்தன்மை உள்நாட்டு அல்லது கலப்பு அமைப்புக்கு உகந்ததாக இருக்காது:

போரின் முடிவில், ஏராளமான எண்ணிக்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, அதிபர் சிரிசேனா தற்காலிக பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

சிரிசேனா தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக இல்லை; போரின்போது கொடுங்கனவாக இருந்த இறுதிப் பதினைந்து நாட்கள், அவர் பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.’ – எகனாமிஸ்ட், ஜனவரி 3, 2015.

7) போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றுக்கான குற்றவியல் நடைமுறைவிதிகள் சிறிலங்காவிடம் இல்லை.

மனித இனத்திற்கெதிரான சில குற்றங்களுக்கு எதிராக நோர்வேயிடம் சட்டங்கள் இல்லாததால், ருவாண்டவுக்கான சர்வதேசத் தீர்ப்பாயம் பகரசகாவை என்பவரை நோர்வேவுக்கு மாற்றவில்லை, ஏனென்றால் பிரதிவாதியை ஒரு சாதாரண குற்றவாளியாக வழக்குவிசாரணைக்கு உட்படுத்துவது அவரது குற்றங்களை அற்பமானவையாக ஆக்கிவிடும்.

8) நீதியின் குறிக்கோளை சமாதானத்தின் குறிக்கோளுக்கு எதிராக நிறுத்துவது ஒரு தவறான தெரிவு ஆகும்:

இரண்டாவது உலகப்போரின் போது இனப்படுகொலை புரிந்தவர்கள் இன்றும் கூடத் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். எந்த விதத்திலும் நீதி மறுக்கப்பட்டுவிடக் கூடாது எனபது உலகின் எதிர்பார்ப்பும் பிரதிபலிப்பும் ஆகும் என்பதை இது காட்டுகிறது.’ – நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாணசபை முதலமைச்சர்.

நிறைவாக, சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு, நாங்கள் வலியுறுத்துகிறோம்.

http://tgte-icc.org/Sign/Country_List.asp

7

                          

More from our blog

See all posts