பிரித்தானியாவில் இடம்பெற்ற இலங்கை கண்காணிப்பு பன்னாட்டு நிபுணர் குழுவை வலுப்படுத்தும் நிகழ்வு !

எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை பிடிக்கவுள்ள நிலையில், இலங்கையின் நிலைமாற்றுகால நீதிப்பொறிமுறை அமைவுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவை வலுப்படுத்தும் நிகழ்வொன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் 11/02/17அன்று  சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

சுதந்திரமான செயன்முறையினைக் கொண்ட இப்பன்னாட்டு நிபுணர் குழு இலங்கை தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைகளை கண்காணித்து வரும் நிலையில் அதன் செயற்பாடுகளை மேலும் வலுவுறச் செய்யும் வகையில் குறித்த நிகழ்வானது மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை Sun Lounge, Atlip Centre, 1, Atlip Road, Wembley, HA0 4LU என்னும் இடத்தில் நடைபெற்றது.

இதன்போது, பல்வேறு மனிதவுரிமைவாதிகள், சட்டத்தரணிகள், இலங்கை விவகாரத்தில் தேர்ச்சி பெற்ற வளப்பிரதிநிதிகள் தமிழீழ ஆதரவாளர்கள் தமிழ்த் தேசிய செயர்ப்பாட்டாளர்கள் என பலரும்  கலந்து சிறப்பித்தனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், வரவேற்பு பாடல், வரவேற்பு நடனம், வீணை மிருதங்க இசை, நடைபெற்றதை தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் மதிப்புக்குரிய திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தியிருந்தார்.அதை தொடர்ந்து மதிப்புக்குரிய பிரதமர் உருத்திரகுமாரன் அவர்கள்  ஸ்கைப் தொழில்நுட்பம் மூலமாக உரையாற்றினார்.

இப்பொறிமுறையை கண்காணிக்கும் குழுவின் உறுப்பினரும் செயலருமான ரிச்சட் ஜே.ரோஜர்ஸ் அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு இவ்வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார். தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்களும்

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மதிப்புக்குரிய கனகேந்திரம் மாணிக்கவாசகர் அவர்களும் வழங்கிய ஒளிப்பதிவுகள் திரையிடப்பட்டன. சிரேஸ்ட சட்டவாளர் சிவானி ஜெகராஜா  அவர்களின் உரையும் இடம்பெற்றது.

அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்று செயலர் பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

”MAP” வேலைத்திட்டம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் தொகையான கொடூரங்கள் இன அழிப்புக்கான செயற்பாடு அலுவல்கள் அமைச்சர் மதிப்புக்குரிய பத்மநாபன் மணிவண்ணன் அவர்கள் விளக்கமளித்தார்.

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர் கெளரவ நாகலிங்கம் பாலச்சந்திரனின் உரையினைத் தொடர்ந்து இளையோர் பண்பாட்டு அமைச்சின் மதிப்புக்குரிய அமைச்சர்  அகிலவாணர் அம்பலவாணர் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.

இராப்போசனத்துடன் கூடிய இந்நிகழ்வை திரு.டினுசன் அவர்களும் திருமதி விஜயா ரட்ணம் அவர்களும் சிறப்புற தொகுத்து வழங்கினர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

More from our blog

See all posts