சிறிலங்காவுக்கு செல்ல நாடுகடந்த தமிழீழ அராசங்கம் தயாரா ? – பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் !!

  • July 20, 2017
  • TGTE

சிறிலங்காவுக்கு நீங்களோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிற உறுப்பினர்களோ எதிர்காலத்தில் செல்லும் திட்டம் உண்டா என்ற அனைத்துலக ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பிரதமர் வி.உரித்திரகுமாரன் பதில் அளித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எவ்வகையான அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் அவர்களது விருப்பத்தைக் கண்டறியும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்குரிய கால அட்டவணை வகுப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதானால் அதற்காக நாங்கள் இலங்கைத் தீவுக்கு சென்றாலும் செல்லக் கூடும் என அப்பதிலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவின் தீவின் நிரந்தர அமைதிக்கு பொதுவாக்கெடுப்புதான் ஒரே வழி எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன்,  வேறு வகைத் தீர்வுகள் எவையாயினும் அது ‘ஒட்டுவேலை’த் தீர்வுகளாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் Huffington Post ஊடகத்தில்

Taylor Dibbert அவர்கள் எடுத்திருந்த செவ்வியின் முழுவடிவம் :

http://www.huffingtonpost.com/entry/keeping-international-pressure-on-sri-lanka_us_595bb79fe4b0326c0a8d132d

கேள்வி : ஐநா மனித உரிமைப் பேரவை 34ம் அமர்வில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட  மற்றுமொரு தீர்மானத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆதரவு திரட்டல், விழிப்பூட்டல் என்ற வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அடுத்து என்ன செய்யப் போகிறது?

பதில் : இனப்படுகொலைக் குற்றங்களுக்கு வழக்குத் தொடுக்க பன்னாட்டுப் பொறிமுறையைத் தோற்றுவித்தல் என்பது 2009ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிந்ததிலிருந்தே தமிழ் மக்களின் மனத்துடிப்பும் பெருவிருப்புமாக இருந்து வருகிறது.

இந்தப் போரில் சிறிலங்கா ஆயுதப் படைகளால் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலைக்கும் பாலியல் வன்தாக்குதலுக்கும் ஆளானார்கள்.

சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அனுப்ப வேண்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தியது. அவ்வியக்கத்தில் 16 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றார்கள். ஆனால் 2015 மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் மக்கள் விடுத்த இந்த அறைகூவலுக்குப் பொருந்தவில்லை.

அந்தத் தீர்மானம், குறிப்பாக பொறுப்புக்கூறல் செயல்வழியில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பது தொடர்பாகத் தெளிவின்றி இருந்ததால், தீர்மானத்தைப் பொருள்விளக்கம் செய்திட பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழுவை (MAP) அமர்த்தினோம்.

ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் ஜசையது ராத் அல் உசைன்ஸ அவர்களும், மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இத்தீர்மானம் பன்னாட்டு நீதிபதிகள் நீதிசார் பொறுப்பில் பங்கேற்பதைக் கருத்திலெடுத்து  பொருள் விளக்கம் செய்திட வேண்டுமென தெரிவித்தோம்.

2015 மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தினை சிறிலங்கா செயற்படுத்துவதையும் கண்காணிக்கும் பொறுப்பு பொறுப்புக் கூறல் கண்காணிப்புக் குழுவுக்குத் தரப்பட்டது.

2017 மார்ச் மனித உரிமைப் பேரவை அமர்வின் போது காண்காணிப்புக் குழுவினர் 31 பக்க அறிக்கை

ஒன்றை வெளியிட்டனர்.

செயற்படுத்தும் வேலையைச் சிதைக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் விசுவாசமற்ற வகையில் இயங்கி வந்துள்ளதென அவ்வறிக்கை வெளிப்படையாகக் கூறியது.

இவ்விடத்தில் வரலாற்று முன்னிகழ்வுகளைக் கருதி நான் ஒன்றைச் சொல்ல வேண்டும், அவர்கள்

இந்த முடிவுக்கு வந்ததில் எங்களுக்கு வியப்பெதுவுமில்லை. சிறிலங்கா அரசின் இறுக்கமான பௌத்த இனவாத கட்டமைப்பு காரணமாக, பன்னாட்டு வழக்குத் தொடுத்தல் வாயிலாக அல்லாமல் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிட்டாது என்பதை வரலாறும் மெய்ந்நடப்பும் தெளிவாகக் காட்டி நிற்கும்.

மேலும், தமிழர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் தொடர்ந்து நடப்பதைப் பற்பல அறிக்கைகள் ஆவணப்படுத்தியுள்ளன. இவற்றுள் ஒன்று, சித்திரவதை இன்னபிற கொடிய, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைமுறை தொடர்பான ஐநா சிறப்பு அறிக்கையாளர் யுவான் மெந்தெஸ் அளித்துள்ள அறிக்கை ஆகும்.

மேலும், பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பினர் அளித்துள்ள அறிக்கை சிறிலங்கா இராணுவம் நடத்தும் ‘வல்லுறவு முகாம்கள்’ பற்றிய விவரங்களை வெளியிட்டது. இந்த முகாம்களில் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர்.

பன்னாட்டுச் சமுதாயத்தையும் தமிழர்களையும் திரும்பத் திரும்ப ஏமாற்றவும் வஞ்சிக்கவும் சிறிலங்கா அரசாங்கம் முயல்கிறது. எனவேதான் கூடுதல் கால அவகாசம் கேட்பதன் மூலம் பொறுப்புக் கூறல் செயல்வழியை இழுத்தடித்துக் காலங்கடத்தும் தந்திரத்தைத் தேர்ந்தெடுத்தது.

இவ்விதம் தமிழர்களுக்கு எதிரான பெருந்திரள் படுகொலைக்கும் பாலியல் வன்முறைக்கும் பொறுப்புக் கூறாமல் தப்பி விடலாம் என்பது அதன் கணக்கு.

இந்தப் பின்னணியில்தான் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வில் ஒரு மீளோட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களுக்கு எதிராக இழைத்த பெருமளவிலான கொடுமைகளுக்கான பன்னாட்டு நீதியிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தத் தீர்மானம் இச்செயல்வழியை அது பன்னாட்டு நிகழ்நிரலை விட்டுக் கழன்று விழும் வரை இழுத்தடிக்கும் தந்திரமே இதுவாகும்.

இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட பிறகும் கூட, சிறிலங்காவின் அரசுத் தலைவரும், பிரதமரும் அந்த மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தின் முதன்மைக் கூறினை, அதாவது வெளிநாட்டு நீதிபதிகளைப் புலனாய்வுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொதுவெளியில் மறுதலித்தனர்.

இந்நிலையில், தீர்மானத்தைக் கூட்டாக முன்மொழிந்த நாடுகளில் ஒன்றான சிறிலங்காவின் அரசாங்கமே, அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, அதன் முதன்மைக் கூறினை மறுதலித்திருக்கும் போது, இத்தீர்மானத்தால் விளையப் போகும் பயன் என்ன என்பது கேள்விக்குறியாகி விடுகிறது.

தமிழர்களைப் பாதுகாக்கவும் தமிழர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் எட்டச் செய்ய அர்த்தமுள்ள வழி என்பது, மனித உரிமைப் பேரவை சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்பி, சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அனுப்புமாறு, அல்லது சிறிலங்கா குறித்துத் தனிநோக்குப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயம் அமைக்குமாறு ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்வதே  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

வட கொரியாவின் மானிட விரோதக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய இதே போன்ற நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது.

சிறிலங்காவுக்குக் கூடுதலாக ஈராண்டு கால அவகாசம் கொடுத்த மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தை அடுத்து நாங்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது போல், பாதிப்புற்ற தமிழர்களாகிய நாங்கள் நீதிக்காக மனித உரிமைப் பேரவையை மட்டும் நம்பிக் கைகட்டிக் காத்திருக்கப் போவதில்லை.

இன்றைய நீதிசார் உலகமயத்தைக் கருத்தில் கொண்டால், மனித உரிமைப் பேரவை என்பது பல மேடைகளில் ஒரு மேடை, அவ்வளவுதான். சிறிலங்கா அரசை எதிர்த்தும் சிறிலங்காவின் அரசியல் மற்றும் படைத்துறை நிறுவனத்தை எதிர்த்தும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் படி அந்தந்த நாட்டிலும் வழக்குகளை தொடுக்கச் செய்ய எண்ணியுள்ளோம். உண்மையில், மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் உறுப்பு நாடுகளுக்கு எடுத்துரைத்த செய்தி என்னவென்றால், அவை தத்தமது உள்ளக நீதித் தீர்ப்பாயங்களில் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் உள்ளக வழக்குத் தொடுப்பைக் கொண்டுவர வேண்டினார். உறுப்பு நாடுகள் இப்படிச் செய்ய நாங்கள் இயக்கம் நடத்துவோம்.

கேள்வி : சிறிலங்கா பற்றிய மிக அண்மைய மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் சிறிலங்கா வரவிருக்கும் மாதங்களில் செயலாக்கும் படியான கூறுகள் ஏதும் உண்டா?

பதில் : மிக அண்மைய மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் ஒரு மீளோட்டத் தீர்மானம் ஆகும். அது அடிப்படையில் முதல் தீர்மானத்தின் அதே கூறுகளைக் கொண்டிருந்தது. சிறிலங்கா முதல் தீர்மானத்தின் கூறுகளில் எதையும் செயலாக்க அர்த்தமுள்ள அடிகள் ஏதும் எடுத்து வைக்காத போது, இந்த மீளோட்டத் தீர்மானத்தின் முதன்மைக் கூறுகளை சிறிலங்கத் தலைவர்கள் ஏற்கெனவே மறுதலித்திருக்கும் போது, சிறிலங்கா மீளோட்டத் தீர்மானத்தின் கூறுகள் எதையும் அர்த்தமுள்ள விதத்தில் செயலாக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.

கேள்வி : ஜெனிவாவில் இடம்பெற்றுள்ள மனித உரிமைப் பேரவையின் வரவிருக்கும் அமர்வுகளைக் குறிவைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாய்ப்பு வளங்களைக் களமிறக்குமா? ஜெனிவாவில் எவ்வகையிலாவது நீங்கள் இடம்பெறுவீர்களா?

பதில் : தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெருங்கொடுமைகளுக்கு நீதி கோரும் எமது இயக்கத்தைத் தொடர்வோம். பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழுவிற்கான தவணையை இன்னும் ஈராண்டு நீட்டித்துள்ளோம். ஜெனிவாவிலும் மற்ற இடங்களிலும் எங்கள் செயற்பாடுகளைத் தொடர்வோம். தமிழர்களுக்கு நீதி கிட்டும் வரை  நாங்கள் ஓய மாட்டோம்.

கேள்வி : விடுதலைப் புலிகள் இழைத்ததாகச் சொல்லப்படும் போர்க்கால உரிமை மீறல்கள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலை என்ன?

பதில் : தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனக்கொலைக்கு தமிழர்கள் நீதி வேண்டி நிற்கின்றார்கள். எமது கவனமும் செயல்களும் இதனை மையப்படுத்தித்தான்.

கேள்வி : டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன் நோக்கங்களை எடுத்துரைத்து ஆதரவு திரட்டுதல் என்ற வகையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதா ?

பதில் : அமெரிக்காவிலோ பிற நாடுகளிலோ ஏற்படக் கூடிய ஆட்சி மாற்றங்கள் எவையானாலும், எமது ஆதரவுத் திரட்டல் பணி தொடரும். அமெரிக்காவிலோ பிற நாடுகளிலோ யார் ஆட்சி அதிகாரத்தில் இருப்பினும், தமிழர்களுக்கு நீதி கோருவதே எமது நோக்கம். இப்போராட்ட முயற்சியில்  நாம் வெற்றியும் காணத்தான் போகிறோம்.

கேள்வி : நீங்களோ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிற உறுப்பினர்களோ எதிர்காலத்தில் இலங்கை செல்லும் திட்டம் உண்டா?

பதில் : தமிழ் மக்களுக்கு எவ்வகையான அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் அவர்களது விருப்பத்தைக் கண்டறியும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதுதான் வெளிப்படையான, அமைதியான, சனநாயக வழிகளின் ஊடாக அம்மக்களுக்கான நிரந்தரத் தீர்வு காணும் வழி.  இதற்கு ஒரு கால அட்டவணை வகுப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதானால் அதற்காக நாங்கள் இலங்கைத் தீவுக்கு சென்றாலும் செல்லக் கூடும்.

மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து, இலங்கைத்தீவில் தீவு நிரந்தர அமைதி மலரச் செய்ய பொதுவாக்கெடுப்புதான் ஒரே வழி.

வேறு வகைத் தீர்வுகள் எவையாயினும் ‘ஒட்டுவேலை’த் தீர்வுகளாகவே இருக்கும், கடந்த அறுபத்தெட்டு ஆண்டுகளில் செய்த முந்தைய முயற்சிகள் அனைத்தையும் போலவே இவையும் நிலைத்து நிற்க மாட்டா.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று கிடைக்கும் ஏந்துகளைப் பயன்படுத்திக் கொள்வதால், உண்மையில் எந்தவொரு சூழலிலும் நேராகப் போய் நிற்க வேண்டிய கட்டாயத் தேவை இல்லை. நாங்கள் தொழில்நுட்பத்தின் துணைக்கொண்டு எங்கள் தாயக மக்களோடு நிற்கிறோம். ஆனால் நாங்களும்  களத்தில் நிற்கும் போது எங்கள் மக்களுடன் ஏற்படும் தோழமையும் இனிமையும் ஓர்மையும் நாங்கள் குறைத்து மதிப்பிடக் கூடியவை அல்ல. இதற்கு இப்போதுள்ள முதன்மைத் தடையாக சிறிலங்கா அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை தொடர்ந்து முறைகேடாகப் பயன்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பயங்கரவாத அமைப்பாகக் குறித்துத் தடை செய்திருப்பதுதான். இந்தத் தடையை நீக்குவதுதான் முதற்படியாகும். தண்டனை போன்ற விளைவுகளைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை இது எமது சுயகௌரவம் பற்றியதாகும்.

 

More from our blog

See all posts