லண்டனில் பெருமளவான மக்களுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வு!

  • October 13, 2017
  • TGTE

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் “தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்” நிகழ்வும், முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதியின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வு  திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் அவர்கள் தலைமையில் நேற்று (10/10/2017) செவ்வாய்க் கிழமை வடமேற்கு லண்டன் பகுதியில் 306 Dollis Hill Lane, London, NW2 6HH எனும் முகவரியில் அமைந்துள்ள Maharastra Maddal மண்டபத்தில் மாலை 07.00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் என்றுமில்லாதவாறு பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த நிகழ்வில், மாவீரர்களான லெப்.வெங்கடேஸ், லெ.கேணல் பாமா, ஆகியோரின் தாயார் திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், தேச விடுதலைச் செயற்பாட்டாளர் திருமதி. தவமணி வன்னியசிங்கம், முன்னாள் போராளி திருமதி. நிலா, மாவீரர் போராளிகள் குடுமப நலன் பேணும் அமைச்சின் அமெரிக்க பொறுப்பாளரின் மனைவி திருமதி. ரஜனி ராமலிங்கம்,ஆகியோர் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தனர்.

நாடு  கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர், பெண்கள், முதியோர் விவகார அமைச்சர் திருமதி.பாலம்பிகை முருகதாஸ்  பொதுச் சுடரினை ஏற்றிவைத்து சிறப்புரையும் ஆற்றினார்.

தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை மாலதி படையணித் தளபதிகளுள் ஒருவரான திருமதி. மதுரா அவர்கள் ஏற்றிவைத்தார்.

முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதியின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடரினை 2ம் லெப். மாலதியுடன் ஒன்றாக சம காலத்தில் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்று தாயகம் சென்று களமுனைகள் கண்ட முன்னாள் போராளி திருமதி. பவாணி அவர்கள் ஏற்றி வைக்க மலர் மாலையினை போராளி ஜெயமாலினி லிங்கேஸ்வரன் அவர்கள் அணிவித்தார்.

தொடர்ந்து இதுவரை காலமும் தாயக விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்காகவும், அன்னிய சிறீலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்களின் மலர்வணக்க நிகழ்வோடு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கலை நிகழ்வுகளாக தமிழர்களின் பாரம்பரிய வாத்தியமான பறை வாத்திய எழுச்சி இசையோடு, மாலதி உட்பட மாவீரர்களான பல பெண் போராளிகளின் நினைவுப் பகிர்வுகளை போராளிகள் வழங்கினர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர், போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் பிரித்தானியாவிற்கான பொறுப்பாளர் திரு. நிமலன் சீவரட்ணம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன் நிகழ்வு மண்டபம் நிறைந்த மக்களோடு மிகவும் எழுச்சிபூர்வமாக சிறப்பாக நடைபெற்று இரவு 10:00 மணிக்கு உறுதியேற்பு மற்றும் தேசியக் கொடி இறக்கலுடன் நிறைவடைந்தது.

More from our blog

See all posts