பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய சிறிலங்கா இராணுவத்தினரின் நிர்ப்பந்த்தின் மத்தியிலேயே வாழும் நிலையில் தமிழ் பெண்கள் !

இலங்கைத்தீவில் சிறிலங்கா இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.10412-jaffna-rally-2488x1712

மார்ச் 8, அனைத்துலக பெண்கள் நாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஐக்கிய நாடுகள் பொதுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றொழித்ததோடு, அகப்பட்ட பெரும் தொகுதி தமிழப்;பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கியள்ளதோடு, இத்தகைய அத்துமீறல்களைப் புரிந்த சிறிலங்காவின் படையினர்
பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு மீண்டும் அச்சுறுத்தலாக தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் பெருமளவில் நிலைகொண்டுள்ளனர். குற்றம் புரிந்த இராணுவத்தினர் சுதந்திரத்துடனும், ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பூரண ஆதரவுடனும் நடமாடுவதைக் காணும் இப்பெண்கள் பயப்பிராந்தியும் அவமான உணர்வும் கொண்ட அவல வாழ்வு வாழ்கிறார்கள்.’

‘யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கழிந்தும் குற்றம் புரிந்த ஒரு ராணுவச் சிப்பாய்கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக சிறிலங்கா அரசாங்கமானது இராணுவக் குற்றவாளிகளை காப்பாற்றிக்கொள்வதிலேயே கண்ணும்கருத்துமாய் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் பொதுமன்றம் அறிவுறுத்தும் நீதி விசாரணையைக்கூட, சிறிலங்கா அரசாங்கம் இராணுவக் குற்றவாளிகளை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் தட்டிக்கழிக்கிறது மேலும். பாரபட்சமற்ற சுயாதீனத் தகவல்களின்படி ஐந்து பொதுமக்களுக்கு ஒரு ராணுவம் என்ற விகிதத்தில் தமிழர் பிரதேசங்களில் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர். இது உலகெங்கிலும் காணப்படாத அதிகூடிய ராணுவ அடக்கு முறையைப் பிரதிபலிக்கும் ஒரு இராணுவப் பிரசன்னமாகும்.’

மேலும் அவர் கூறுகையில் ‘ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்கள் தமது கணவன்மார் மகள் மகன் என தமது சொந்தங்கள் பலரை சிறிலங்கா படையினரிடம் கையளித்தனர். இன்றுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவுமில்லை எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலும் பெறமுடியாமலுள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் சமீபத்தில் கூறும்போது ‘கையளிக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை’ என கூறியதுடன் அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் எதனையும் தர மறுத்து பாதுகாப்புப்படையினரை பாதுகாத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்தினார்.’

‘கணவனை இழந்த மீளாத்துன்பத்தை சுமந்தவண்ணம் தமது பிள்ளைகளை பராமரிக்கவேண்டிய கடின வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இத்தனைக்கும் மேலாக தமது கணவன்மாரை கொன்ற ராணுவத்தினரின் மிரட்டல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகம்கொடுத்து சுமார் 90,000 கைம்பெண்களின் அவல வாழ்க்கை தொடர்கதையாய் தொடர்கிறது.’

தமது சொந்த வீடுகளிலிருந்து பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு பல்லாயிரம் குடும்பங்கள் இன்னமும் இடைத்தங்கல் முகாம்களில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பசி பட்டினி ஊட்டச்சத்தின்மை சுகாதார சீர்கேடுகள் என பல குறைபாடுகளுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். தமக்கென ஒரு ஒதுக்குப்புறம் இல்லாததாலும், பாதுகாப்புப் படையினரின் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சத்தாலும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச்சேர்ந்த குறிப்பாக பெண்களும், பெண்பிள்ளைகளுமே இத் துன்பச்சுமைகளினால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் ஆவர். மேலும் இவ்விடம்பெயர்ந்த மக்களிடமிருந்து கைப்பற்றிய காணிகளில் குடியேறியுள்ள பாதுகாப்புப் படையினர் அக்காணிகளின் மூலம் கிடைக்கும் பலாபலன்களை அனுபவிப்பதோடு அங்கு ஆடம்பர, வீடுகள், உல்லாசவிடுதிகள், நீச்சல்தடாகங்கள் என கட்டியுள்ளார்கள்.’

சிறிலங்காவில் புதிதாக பதவிக்கு வந்திருக்கும் அரசாங்கத்தின் ஆட்சியில் குறிப்பாக தமிழ்ப்பெண்கள் பெண்பிள்ளைகளின் தொடர்கதையாகும் மேற்கூறிய இன்னல்களைக் கருத்திலெடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் சர்வதேச சமூகத்தை வேண்டிக்கொண்டார்.

More from our blog

See all posts