அனைத்துலக விசாரணையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் !

  • June 13, 2014
  • HDA
tgte_009ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்தான உபமாநாட்டில், இலங்கைத்தீவின் தமிழ்பெண்கள் விவகாரம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

லண்டனில் இடம்பெற்றுவரும் மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்தான அனைத்துலக மாநாட்டிற்கு வலுவூட்டும் வகையில், இந்த உபமாநாடு யூன் 12ம் நாள் வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

உபமாநாட்டில் பங்கெடுத்திருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாப் பிரதிநிதி ,தமிழ்பெண்கள் எதிர்கொண்டுள்ள பாலியல் வன்முறைகளை, லண்டன் மாநாடு எந்தவகையில் கவனத்தில் கொள்கின்றது என கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த ஐ.நா மனித உரிமைச்சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி மார்க் மத்தியூ அவர்கள், இலங்கையின் இறுதிப்போரின் போது மிகமோசமான மனித உரிமைமீறல்கள் இடம்பெற்றுள்ளது என்றும், இது தொடர்பில் ஐ.நாவின் அறிக்கைகள் தெளிவாக காட்டியிருக்கின்றது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கான தீர்மானத்தின் ஊடாக, நடைபெறும் விசாரணையில் பெண்கள் மீதானபாலியல் வன்றைகளும் கவனத்தில் கொள்ளப்படுமென அவர் பதிலளித்திருந்ததோடு, விசாரணைக்கு பிரித்தானிய முழுமையான ஆதரவினை வழங்குமெனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ்பெண்கள் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தக்கோரும் கோரிக்கை மனுவொன்று, நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாப் பிரதிநிதி சுகிந்தன் முருகையா அவர்களால் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த உபமாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஏஞ்சலினா ஜொலி ஆகியோரது கருத்துரைகள் காணொகளில் ஒளிபரப்பட்டிருந்தது.

இதேவேளை லண்டனில் இடம்பெற்றுவரும் மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்தான பிரதான மாநாட்டில், ஈழத்தில் தமிழ்பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்களை விளக்கும் துண்டுப்பிரசுர பரப்புரையில், தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ், பெண்கள் சிறுவர் முதியோர் மையம் பிரதிநிதி லாவன்னியா, இளையோர் பண்பாட்டுத் துணை அமைச்சர் நிமலன் சீவரட்ணம் , இனப்படுகொலைத் தடுப்பும் விசாரணை முன்னெடுப்புக்குமான மைய துணைச் செயலளார் மணிவண்ணன், தாயக அபிவிருத்தி விவகார அமைச்சு இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

More from our blog

See all posts