அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம் செய்ய முடியாது!

“2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தமிழீழ தேசிய பிரச்சனை திம்புக்கோட்பாடுகளின் அடிப்படையிலே தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். மேலும் அக்கோட்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்களால் ஒருங்கிணைந்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி உருவாக்கிய பொது நிலைப்பாடுகள் எந்த ஒரு அரசியல் தீர்வுகளும் முக்கிய வகிபாகமாக இருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்

மேலும் 2024 ஆம் ஆண்டு உலகின் பல முக்கிய இடங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளதை குறிப்பிட்ட ருத்ரகுமாரன் இந்திய தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சிகள் மத்தியில் நமக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கச் செய்து அவற்றை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்க உள்ள வாய்ப்புக்கள் குறித்து தமிழ் மக்கள்  கவனம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல், தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் என்ற நிலையில் இருந்து தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இவ்வருடம் நடைபெற இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்கான தேர்தலில் புலம்பெயர் ஈழத் தமிழர் தேசம் பல்லாயிரக்கணக்கில் பங்களித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக விழுமியத்தை பலப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

 தற்போது பாலஸ்தீனத்தில் நடைபெறும் அனர்த்தங்கள் ஐக்கியநாடுகள் சபை உட்பட்ட உலக அமைப்புகள் நீதியை நிலைநாட்ட திராணி அற்றவை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகில், நீதியையும் சமாதானத்தையும் நிலை நாட்ட, புதிய பொறிமுறைகளையும், புதிய நியதிகளையும் உருவாக்குவதற்கான முயற்சியில், உலகின் ஏனைய அரசற்ற தேசங்கள், அனைத்துலக சிவில் சமூகம், அறிவு ஜீவிகள், சமூக வலைத்தளங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து ஈடுபடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.”

அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கும் இத் தருணத்தில், கடந்த ஆண்டு தொடர்பான சில கருத்துக்களையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடந்து போன ஆண்டில் தமிழ் மக்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை.

உலக அரங்கில், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களால் சொல்லணாத் துயரங்களை அனுபவித்த ஆண்டாக கடந்த ஆண்டு அமைந்திருந்தது.

கடந்த ஆண்டில் பாலஸ்தீன மக்கள் அனுபவித்த துயரம் நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் அமைந்ததோடு, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்காலத்தில் நமது மக்கள் சந்தித்த பெருந்துயரையும் எமக்கு நினைவு படுத்தியிருந்தது. மலர்ந்துள்ள புத்தண்டிலாவது இம் மக்களின் வாழ்வு பாதுகாப்பானதாக மாற வழிவகை பிறக்கும் என நம்புவோம்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக அமைப்புகள் எவையும் நீதியின் பக்கம் நின்று உலகப்பிரச்சினைகள் எதனையும் தீர்த்து வைக்கும் திராணியற்றவை என்பதனை தற்போது பாலஸ்தீனம்தில் நடைபெறும் நிகழ்வுகள் மீண்டுமொருமுறை வெளிப்படுத்தி நிற்கின்றன.

எமது சூழலை எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டில் அனைத்துலக அரசுகள் சிலவற்றின் அரவணைப்புடன் ‘ஹிமாலயா பிரகடனம்’ என்ற பெயரில் நடைபெற்ற அரசியல் பித்தலாட்டம் ஒன்றையும் நாம் காண நேர்ந்தது.

இப் பிரகடனமும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காட்சிகளும் எந்தவகையி்லும் தமிழ் மக்களின் நன்மை கருதியதாக அமையவில்லை.

தமிழ் டயாஸ்பொறவின் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டையும், தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கு சார்பான நிலைப்பாட்டையும் நீர்த்துப் போகச் செய்ய விரும்பும் அனைத்துலக அரசுகள் சில தமக்குச் சேவகம் செய்யக்கூடியவர்களை தமிழர் தரப்பில் இருந்து இப் பிரகடனத்துக்காகத் தெரிவு செய்துள்ளது போலத் தெரிகிறது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரும் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களைப் பிரதிபலிப்பவர்கள் அல்ல.

இதனால், இவர்களின் எந்தப் பிரகடனமும் தமிழ் மக்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. இதனைத் தாயகத்திலும் டயாஸ்பொறாவிலும் இருந்து வெளிவந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. இதேவேளை, தென்னிலங்கையிலும். அனைத்துலக தூதுவராலயங்கள் மட்டத்திலும் இப் பிரகடனம் குறித்தும், அதனைத் தொடர்ந்த காட்சிகள் குறித்தும் ஓரு வகையான பரபரப்புக் காட்டப்பட்டதை உணர முடிந்தது.

அனைத்துலக தூதுவராலயங்கள் காட்டிய இப் பரபரப்பின் பின்னால் தமிழ் டயாஸ்பொறாவின் தமிழ்த் தேசிய அரசியலை மழுங்கடிக்கும் ஆர்வமும், ரணில் விக்கிரசிங்காவை சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதியாக்கும் விருப்பும் புதைந்திருக்கலாம். ஆனால், இந்த ‘ஹிமாலயப் பிரகடன’ நகர்வால் ஓரணு கூட அசையப் போவதில்லை என்பதே நடைமுறை உண்மையாக அமையும்.

பிறந்திருக்கும் புத்தாண்டில், உலகளாவியரீதியில் முக்கியமான சில நாடுகளில் தமது ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பன.

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியாவின் பாராளுமன்றத்துக்கு 2024 இல் நடைபெறும் தேர்தல்கள் கூடுதல் கவனத்துக்கு உரியவை.

தமிழ்நாட்டிலும், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் குறித்த கவனத்தை ஏற்படுத்துவதில் தமிழர் தரப்பு கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள் மத்தியில் நமக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கச் செய்து, அவற்றை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்க உள்ள வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலும் இவ் வருடம் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் என்ற நிலையில் இருந்து தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து சிந்தித்தல் வேண்டும்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாலாவது அரசவைக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தலில் எவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்களித்தார்களோ, அதே போன்று இம்முறையும் புலம்பெயர் ஈழத்தமிழர்தேசம் பங்களித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக விழுமியங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும் என இப்புத்தாண்டுச் செய்தியில் உங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, திம்புக்கோட்பாடுகளான, தமிழர் தேசம், தமிழர் தாயகம், தமிழர் தேசத்தின் சுயநிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு குறித்து பல்வேறு புலம்பெயர் அமைப்புகள் ஒருங்கிணைந்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி உருவாக்கிய பொது நிலைப்பாட்டில் (Common Principles) உள்ளடக்கப்பட்ட பின்வரும் விடயங்கள், அடிப்படை  விடயங்களாக அமைய வேண்டும் என்பதனை இப்புத்தாண்டுச் செய்தியில் வலியுறுத்த விரும்புகிறேன்.

        1) இலங்கை தீவின் வடகிழக்கு பிராந்தியத்தில் (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம்) 1948 க்கு முன்பிருந்து வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் பங்கேற்புடன் ஒரு ஜனநாயகவழி, மற்றும் அமைதியான நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்காகத் தமிழர்களின் பெருவிருப்புக்களைப் பூர்த்தி செய்யும்,  சர்வதேச அளவில் நடத்தப்பட்டதும் மற்றும் கண்காணிக்கப்பட்டதுமான,  பொது சன வாக்கெடுப்பு ஒன்றை  அனுமதித்தல்.

     2) இலங்கைத் தீவின் வடகிழக்கு பகுதியில் இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை.

    3) இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்குதல்

    4) இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையில் நிலவும் நிலைமையை பரிந்துரைத்தலுடன், இனப்படுகொலைக் குற்றத் தடுப்பு மற்றும் தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான  தடுப்பு தொடர்பான மாநாட்டின் அடிப்படையின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கைக்கு எதிரான சட்ட நடவடிக்கை.

இந் நிலைப்பாடுகளைத் தமிழர் தரப்பு தனது அடிப்படை நிலைப்பாடுகளாகக் கொள்ளல் முக்கியமானது. இந் நிலைப்பாடுளில் தமிழர் தேசம் சமரசம் செய்து கொள்ள முடியாது. இங்கு நடைமுறைச் சாத்தியம் என்று கூறி இந் நிலைப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முயற்சிகளும் எதிரிக்குச் சேவகம் செய்யக் கூடியவை என்பதனை நம்மவர் கவனத்தில் வைத்துக் கொள்ளல் அவசியம்.

உலகின் தற்போதைய அனைத்துலக கட்டமைப்புகள் நீதியின்பாற்பட்டு இயங்குபவையாய் இல்லை. இதனால், நீதியின்பால் நின்று செயற்படக்கூடிய புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இது நடைமுறைக்குக் கடினமான இலட்சிய நிலைப்பட்ட கோரிக்கையாக இருக்கலாம். இருப்பினும், புதிய மாற்றத்துக்கான அவசியம் காலத்தின் தேவையாக உள்ளது. உலகின் ஏனைய அரசற்ற தேசங்கள், அறிவுஜீவிகள். அனைத்துலக சிவில் சமூகம், சமூக வலைத்தளங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுடன்இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புதிய மாற்றத்துக்கான முயற்சியில் ஈடுபடும்.

நிறைவாக, மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத் தமிழர் தேசம் தனது இலட்சியத்தில் முன்னோக்கிப் பயணிக்கும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போமாக!

தமிழர் தலைவிதி தமிழர் கையில்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

More from our blog

See all posts