அனைத்துலக பெண்கள் நாள் : ஒன்பது ஆண்டுகளாய் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் பெண்களும், ஓராண்டை தொட்டுவிட்ட நீதிக்கான போராட்டமும் !!

  • March 8, 2018
  • HDA

இன்று (March 8)மார்ச் 8ம் நாளன்று ‘அனைத்துலக பெண்கள் நாள்’ உலகப்பரப்பெங்கும் கொண்டாடப்பட இருக்கும் இத்தருணத்தில், இலங்கைத்தீவில் தமிழ்ப்பெண்கள் காணாமல்போன தமது மகள், மகன், கணவன் என உறவுகளை தேடியலையும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘தங்களின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொருட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ‘சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன், சிறிலங்கா படையினரிடம் ஆயிரத்திற்கும் மேலான தமிழ் பெண்கள் தங்கள் மகள், மகன், கணவன்மார்களை ஒப்படைத்திருந்தார்கள். இன்றுவரை அவர்களை பார்க்கக்கூட முடியாத நிலையில்காணாமலாக்கப்பட்டோர் ஆனார்கள். சிறிலங்கா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள், ஒப்பட்டைக்கப்பட்ட எவரும் இன்று உயிருடன் இல்லை என சமீபத்தில் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதுபற்றி மேலதிக தகவல் தர மறுத்ததுள்ளதுடன், சிறிலங்கா படைத்தரப்பை காப்பாற்றிக் கொள்வதிலேயே கருத்தாயிருந்தார்.

 சிறிலங்கா இராணுவத்தால் நடாத்தப்படும் ‘பாலியல் வதை முகாம்கள்’ பற்றியும் இங்கு தமிழ் பெண்கள் பாலியல் அடிமைகளாக அடைக்கப்பட்டுள்ளமை பற்றிய அறிக்கை ஒன்றினை சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு  (International Truth and Justice Project (ITJP) சமீபத்தில வெளியிட்டிருந்தது.

போர் காரணமாக கணவனை இழந்த சுமார் 90 ஆயிரத்திற்கும் மேலான தமிழ் கைம்பெண்கள் உள்ளார்கள். கணவனை இழந்த துயரத்துடனும், மிகுந்த சிரமங்களுடன் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்புடனும், எந்த இராணுவத்தினர் தமது கணவன்மார்களை கொன்றும், பாசஉறவுகளை காணாமலும் போகச்செய்தார்களோ, அதே கொடியவர்களின் மத்தியில், அவர்களது பயமுறுத்தல்கள், அச்சுறுத்தல்கள், முறைகேடுகளுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்தும் வாழும் இப்பெண்களின்    துன்பதுயரங்கள் தொடர்கதையாக நீள்கிறது.

சிறிலங்கா இராணுவம் பொதுமக்கள் மீதான படுகொலை, பெருமளவில் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்ற பல குற்றங்களை புரிந்துள்ளனர் என்ற நிலைப்பாட்டினை ஐ.நா பொதுமன்றம் கொண்டுள்ளது. பாரிய குற்றங்களைப் புரிந்த அதே ராணுவத்தினர் பெருமளவில் தமிழர் பகுதிகளில் இன்றும் நிலைகொண்டுள்ளனர். அரச பாதுகாப்பையும், ஆதரவையும் அனுபவித்துக்கொண்டு சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்கள்  மத்தியில் வாழவேண்டியுள்ள நிர்க்கதியை எண்ணிப்பார்க்கும் பாதிப்புக்குள்ளான பெண்கள் பயத்திற்கும், அவமான உணர்வுக்கும் ஆளாகிறார்கள்’ என அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் மேலும் கூறினார்.

‘யுத்தம்  முடிவுற்று எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும், ஒரு இராணுவ சிப்பாய்கூட நீதியின்முன் நிறுத்தப்படவில்லை. மாறாக, சிறிலங்கா அரசானது ஐ.நா விசாரணைகளிலிருந்தும் கூட தனது இராணுவத்தை காப்பாற்றிக் கொள்ளவே முயற்சிக்கிறது. சுயாதீன ஆதாரங்களின் படி, தமிழர் தாயக பகுதிகளில் ஐந்து குடிமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதத்தில் இராணுவப்பிரசன்னம் உள்ளது. உலக நாடுகளில் காணப்படும் குடிமக்கள்-இராணுவ விகிதாசாரத்துடன் ஒப்பிடும்போது இது அதிஉயர்ந்த எண்ணிக்கையாகும். குறிப்பிட்ட ஒரு தமிழர் பிரதேசத்தில் மாத்திரம் இவ்விகிதம் இரு சிவிலியன்களுக்கு ஒரு இராணுவம் என்ற அளவில் உள்ளது.

தமிழர்களை காப்பாற்றவும்,  எங்களுக்கான நீதி மற்றும் பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்குமான ஒரே வழி யாதெனில்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்முன் ஸ்ரீலங்கா நிறுத்தப்படவேண்டும் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபைக்கான பரிந்துரையுடன், ஐ.நா. மனித உரிமைகள் சபை ஸ்ரீலங்காவை ஐ.நா. பொதுச்சபைக்கு பாரப்படுத்த வேண்டும். அல்லது, வடகொரியாவின் மனிதகுலத்துக்கெதிரான குற்றங்கள் விடயத்தில் வகைகூறலை உறுதிசெய்யும் பொருட்டு பின்பற்றப்பட்ட நடைமுறைபோன்று,   ஸ்ரீலங்காவிற்கும் அதற்கென அமைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படவேண்டும்” இவ்வாறு திருமதி முருகதாஸ் கூறினார்.

திருமதி பாலாம்பிகை முருகதாஸ்

பெண்கள் விவகார அமைச்சர்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

More from our blog

See all posts