இலங்கைத்தீவின் அமைதி என்பது தமிழர்களுக்கான பரிகாரநீதியில் தங்கியுள்ளது – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

“தமிழர்களது இறைமை பறிக்கப்பட்டு சிங்கள பேரினவாதபூதத்திடம் கையளிக்கப்பட்ட நாளாகவே சுதந்திர நாள் இருக்கின்றது”

சிறிலங்கா தனது சுதந்திரநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில், இலங்கைத்தீவின் முழுஅமைதி என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான பரிகாரநீதியில் தங்கியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

இனஅழிப்புக்கான பரிகாரநீதியின் அடிப்படையில் தமிழர் தேசத்தின் அரசியல் இறைமை அங்கீகரிக்கப்பட்டு, தமிழர்கள் ஓர் தேசிய இனமாக தமது சுதந்திர தேசத்தை சுவாசிப்பதற்கான நாள் கிட்டாதவரை, இலங்கையில் அமைதி இல்லை”— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இரத்தக்கறை படிந்த சிறிலங்காவின் சுதந்திரநாளை, கரிநாளாக தமிழர்கள் எப்போதும் பார்ப்பதானது, இலங்கைத்தீவில் இரு தேசங்கள் என்ற நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கின்றது எனவும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்நாள் தொடர்பில் தெரிவிக்கையில், தமிழர்களது இறைமை பறிக்கப்பட்டு சிங்கள பேரினவாதபூதத்திடம் கையளிக்கப்பட்டநாளாகவே இந்நாள் இருக்கின்றது. இலங்கைத்தீவு முழுவதுமே சிங்களவர்களுக்கு என்ற நிலைப்பாட்டில் இறுகிப்போயுள்ள பௌத்த பேரினவாதமானது, அந்நாள் முதல் தமிழர்களை இனஅழிப்புக்கு உள்ளாக்கி வருவதோடு, தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்து தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்து வருகின்றது.

இத்தகையொரு சூழலில் தமிழர்கள் தமது நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடி வருவதோடு, சிறிலங்காவின் சுதந்திரநாளை கரிநாளாகவே கருதுகின்றனர்.

இனஅழிப்புக்கான பரிகாரநீதியின் அடிப்படையில் தமிழர் தேசத்தின் அரசியல் இறைமை அங்கீகரிக்கப்பட்டு, தமிழர்கள் ஓர் தேசிய இனமாக தமது சுதந்திர தேசத்தை சுவாசிப்பதற்கான நாள் கிட்டாதவரை, இலங்கைத்தீவில் முழுஅமைதி என்பது இல்லை என்பதே சிறிலங்காவின் சுதந்திரநாளில் சிங்கள தேசத்துக்கு, தமிழர் தேசம் விடுக்கின்ற செய்தியாக இருக்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)

More from our blog

See all posts