அன்னை கமலாம்பிகை கந்தசாமி அவர்களின் மறைவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆழ்ந்த இரங்கல் அறிக்கை!

தேசப்பற்றோடும் விடுதலை வேட்கையோடும் வாழ்ந்து மருந்தியல் துறை மூலம் அரும்பணியாற்றிய தமிழன்னையும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நேரடிச் சாட்சியாய் விளங்கியவருமான திருமதி கமலாம்பிகை கந்தசாமி அம்மா அவர்களின் மறைவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்.

https://tgte.tv/v/nXIG9m

தமிழீழ தேசத்தின் விடுதலையைத் தனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு; தளராத செயற்பாட்டாளராக எமது மத்தியில் இயங்கி வந்த தமிழன்னை திருமதி கமலாம்பிகை கந்தசாமி அம்மா அவர்கள் தனது 81 வது வயதில் இயற்கை எய்தி விட்டார் எனும் செய்தி எம்மைப் பெரும் வேதனைக்குள்ளாக்குகிறது.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் நீண்ட நெடுங்காலம் அயராது உழைத்த நமது தேசத்தின் வீர அன்னைக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சிரம் தாழ்த்தித் தனது மரியாதை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னையின் பிரிவால் துயருறும் உற்றார், உறவினர், நண்பர்கள், மக்கள் அனைவரோடும் துயர் பகிர்ந்து கொள்கிறது.

அன்னை கமலாம்பிகை அவர்கள் ஒரு பட்டம் பெற்ற மருந்தாளர் (pharmacist) ஆவார். நாட்டுப்பற்றாளர் கதிரமலை கந்தசாமி அவர்களின் மனைவி. மாவீரர் லெப்டினன் கேணல் வெற்றியரகன் (விக்டர்) அவர்களின் தாயார். தமிழீழ தேசத்தின் விடுதலையைத் தனது வாழ்நாளில் கண்டுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் வாழ்ந்து வந்த பெருமனிதர்.

அவர் மருந்தாளராகத் தொழில் புரியத் தொடங்கிய காலம் முதல் தாயக விடுதலைக்காகத் தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வந்தவர். ஆரம்ப காலங்களில் போராளிகளுக்கு மருந்துகள் தேவைப்பட்டபோது அவற்றைக் கொடுத்து உதவியவர். 1986-87 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ் மாவட்ட அரசியற்பிரிவுப் பொறுப்பாளராக விளங்கிய லெப்டினன் கேணல் திலீபன் அவர்களுடன் இணைந்து போராளிகளுக்கு மருத்துவ அறிவை ஊட்டியவர். யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் பணி புரிந்த போது 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் செய்த படுகொலைகளுக்குச் சாட்சியமாகவும் விளங்கியவர்.

வன்னிப்பெருநிலப்பரப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பினதும், தமிழீழ நடைமுறையரசினதும் மருத்துவக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு ஓயாது உழைத்து தேசியத்தலைவரதும் தளபதிகள் போராளிகளதும் பெருமதிப்பையும் அன்பையும் பெற்றுக் கொண்டவர் அம்மா அவர்கள். தேசப்பணியின் போது உயிர் ஈகம் செய்த தனது கணவர் நாட்டுப்பற்றாளர் கந்தசாமி அவர்களின் தாயக விடுதலை நோக்கிய செயற்பாடுகளுக்குப் பெருந்துணையாக இருந்தவர். முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காலம் வரை மக்களோடு மக்களாக வாழ்ந்ததனால் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு ஒரு நேரடிச் சாட்சியாக வாழ்ந்து வந்தார்.

அவர் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் தமிழீழ விடுதலைக்கான பணிகளை புலம்பெயர் நாடுகளில் உயிர்ப்புடன் மேற்கொண்டு வந்தவர். தனது தாளாத வயதிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபைக்கு ஜெனிவாவரை சென்று சிங்களத்தின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக் குறித்த தனது நேரடிச்சாட்சியத்தைப் பதிவு செய்தவர். அவரது சாட்சியம் முக்கியமான ஒன்றென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக இருந்த திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் நேரடியாகக் குறிப்பிடும் அளவுக்கு தனது சாட்சியத்தின் மூலம் கவனத்தை ஈர்த்துக் கொண்டவர்.

கமலாம்பிகை அம்மா அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பெருநம்பிக்கை கொண்டு செயற்பட்டு வந்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அமர்வில் பங்கு கொண்டதோடு, தனது கருத்துக்களையும் நாம்; செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் என்னுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில் பலதடவைகள் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் உரையாடி வந்திருக்கிறார். அம்மா அவர்கள்; என்னுடன் உரையாடும் போது அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அன்பையும் உணர்ந்து கொண்டேன். தமிழீழ தேசத்தின் விடுதலையில் அவர் கொண்டிருந்த பற்றுறுதியையும், அவரது சுதந்திர வேட்கையையும் நன்கு புரிந்து கொண்டேன். சிங்களத்தின் தமிழின அழிப்புக்கெதிராக நீதிகோரி அவர் புரிந்து வந்த சத்திய வேள்வியின் தகிப்பையும் நான் உள்ளுணர்ந்தேன்.

கமலாம்பிகை அம்மா இனிவரும் காலத்துக்கு உரியவர். அவர் தனது வாழ்க்கை மூலம் காட்டிய வழி எமது செயற்பாடுகட்கு உந்துசக்தியாக அமையும். அவர் தனது வாழ்நாள் காலத்தில் தமிழீழ தேசம் விடுதலை அடைவதனைக் காண முடியாது போயினும் தேசக் கனவுடன் மாமனிதராக வாழ்ந்த அவரது கனவு நனவாகித் தமிழீழ தேசத்தின் விடுதலையும் வரலாற்றில் ஒரு நாள் பதிவாகும். அந்நாளினை விரைவாக்க நாம் அனைவரும் அயராது உழைப்பது அம்மாவுக்குச் செய்யும் மரியாதை வணக்கமாக அமையும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

ருத்ரகுமாரன் விசுவநாதன்
பிரதமர்
https://tgte.tv/v/nXIG9m 

More from our blog

See all posts