எம்.ஜி.ஆர் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பூர்வமான ஆதரவைத் தமிழகம் வழங்க வேண்டும்!

பிரபல திரைப்பட நடிகரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை நிறுவியவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமாக விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களது நூறாவது பிறந்தநாளை (17.01.2017) கொண்டாடும் உலகளாவிய தமிழ் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொள்வதால் மகிழ்வடைகிறது. தமிழக மக்கள் மத்தியில் மட்டுல்ல ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நீங்காத இடம் உண்டு. எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு திரைப்பட நடிகராக ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தாலும் அவர் அனைத்து தமிழீழ மக்களின் நெஞ்சங்களிலும் குடி கொண்டமைக்கு முக்கிய காரணங்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த காட்டிய அன்பும் ஆதரவுமே அமைந்தவை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். தேசத்தின் குரல் அன்ரன்; பாலசிங்கம் அவர்கள் தான் எழுதிய நூல்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை விதந்துரைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்துக்கது.

இந்திய அரசியற் சூழலில் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாநில அரசாங்கம் ஆற்றக்கூடிய பங்கு இந்திய மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அமைவதே யதார்த்தமாக இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இத்தகைய சூழலுக்கு உட்பட்டு நடக்க வேண்டிய நிலை இருந்த போதும் அவர் தனது துணிச்சலான நடவடிக்கைகளாலும்> தனது உதவி செய்யும் பண்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

தான் முதலமைச்சராக இருந்த போது தனக்கு உடன்பாடில்லாத விடயங்களுக்குத் துணச்சலான விதத்தில் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார். தியாக தீபம் திலீபன் அறப்போராட்டத்தில் ஆகுதியாகியபோது அமெரிக்காவின் புருக்லின் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர் அவர்கள்; ஆழ்ந்த வேதனை அடைந்ததோடு தமிழ்நாடு மக்கள் சார்பாகத் தனது அஞ்சலியையும் தெரிவித்திருந்தார்;. தளபதிகள் குமரப்பா> புலேந்திரன் உட்பட்ட போராளிகளின் உயிரிழப்பு நடைபெற்ற போது தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் இன்னும் கூடுதலான காலம் உயிர் வாழ்ந்திருந்தால் தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் ஒரு காப்பரணாக இருந்திருப்பார் என்ற எண்ணம் தமிழ் மக்கள் பலரிடம் உண்டு.

தற்போதய காலகட்டத்தில் தமிழீழ மக்களுக்குத் தமிழக மக்களின் செயல்ரீதியான அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மாயமான் வேடமிட்டு உலவும் தற்போதய சிறிலங்கா ஆட்சியாளர்கள் மீது தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய இக் காலகட்டத்தில்;> சிறிலங்காவின் சூழ்ச்சித்தனமான செயற்பாடுகளை முறியடிக்க வேண்டிய இத் தருணத்தில் தமிழக அரசினதும் அரசியற்கட்சிகளதும் தமிழ் மக்களதும் செயற்பூர்வமான பங்களிப்பு அத்தியாவசியமானது.

திரு எம்.ஜி.ஆர் அவர்களது ஆதரவும் பங்களிப்பும் எப்போதுமே செயல்வடிவம் கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர் அவர்களின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ் வேளையில் அவரது செயல்பூர்வமான பங்களிப்பை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக அவர் ஆற்றிய பங்கினைப் போன்ற பங்கினை முன்னெடுக்க வருமாறு எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் தமிழ்நாடு மாநில அரசாங்கத்திடமும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

எம்.ஜி.ஆர் அவர்களை நேசிக்கும் மதிக்கும் அனைத்து அரசியற் தலைவர்களும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்குச் செயல்வடிவம் கொண்ட பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். எம்.ஜி.ஆர் அவர்கள் மீது மாறாத அன்பு கொண்ட மக்கள் எல்லோரும் ஈழத் தமிழ் மக்கள் மீது என்றும் பாசமும் தோழமையுணர்வும் கொண்டிருப்பார்கள் என்பதும் தமிழகத்தின் பங்களிப்புக்கு எப்போதும் அடித்தளமாக இருப்பார்கள் என்பதும் நமது நம்பிக்கை.

எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ் ஓங்குக! நாளை நமதே!!

தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்!

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Print Friendly