2013-01-05 புதுடெல்லி பாலியல் வன்கொடுமைச் சம்பவம்; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவலை தெரிவிப்பு !

இந்தியத் தலைநகர் புதியடெல்லியில் பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி சாவடைந்த விவகாரம் இந்திய தேசத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் தலைநகர் புதியடெல்லியில் பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி சாவடைந்த விவகாரம் இந்திய தேசத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அதிர்சியினையும் கவலையினையும் தெரிவித்துள்ளத

இவ்விவகாரம் தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் அயல்தேசத்தில் சிறிலங்கா படைகளினால் தொடர்சியாக தமிழ்பெண்கள் சந்தித்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு சிறிலங்கா இராணுவத்தினரின் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆதாரபூர்வமாக வெளிவந்திருந்த பேபதும் சர்வதேச சமூகமோ, சர்வதேச ஊடகங்களோ, ஐநா சபையோ உரிய நேரத்தில் கண்டனக் குரல் எழுப்பத் தவறியுள்ளன எனவும் அவ்வறிக்கையில் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி சம்பவத்திற்கு பின்னர் இந்தியப் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும்போது மிகுந்த உற்சாகமடைவதோடு, இவ்வெழுச்சியானது பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் அமைவதற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், அவற்றை பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போமாக எனத் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முழுவிபரம் :

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் என்ற வகையில், இந்தியாவில் சமீபத்தில் இரு இளம் பெண்கள்மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவு, கொலைகள் தொடர்பில் எனது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துக்கொள்கிறேன். இப் பெண்களில் ஒருவர் வைத்தியக் கல்லூரி மாணவியும், மற்றவர் 17 வயது இளம்பெண்ணுமாவர். பல பேரினால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கொலையுண்டுள்ளனர்.

பெண்களுக்கெதிரான பலாத்காரங்களும் பாலியல் அத்துமீறல்களும் உலகின் பல பாகங்களிலும் இன்று நடந்தேறி வருகின்றன. அயல் நாடான சிறிலங்காவில்கூட அந்நாட்டு இராணுவத்தினரால் தமிழ் பெணகள்மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள், கொடூரங்கள் நாகரீக உலகில் சகித்துக்கொள்ள முடியாதவை.

இராணுவத்தினரின் ‘கெடுபிடிகள,;’ ‘தணிக்கைகள்’ காரணமாக மக்கள் விரோத நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வரமுடியாதவாறு அடக்குமுறை நிலவுகிறது. பத்திரிகைகளும் இராணுவத்தினரின் அடாவடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவியலாத நிர்ப்பந்தத்தினால் செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இதனால் சர்வதேசத்திற்கு யதார்த்த நிலை பற்றிய செய்திகள் சென்றடையும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே தென்படுகின்றன.

ஆயினும், சமீபத்தில் இந்தியாவில் நடந்தேறியுள்ள இரு பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்பாக அங்கு எழுச்சிகொண்டுள்ள மக்கள் போராட்டம், சர்வதேச மட்டத்திலான கண்டனக் குரல்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை என்பன சில உண்மைகளை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்;டுகிறது.

சம்பவத்தின் பாரதூரத்திற்கு அப்பால், இந்திய நாடானது சம்பவத்தின் உண்மையை ஏற்று, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உள்நாட்டில் அலைமோதும் மக்கள் உணர்வுகளை உரிய முறையில் கையாண்டு, அதே சமயம் சர்வதேசக் குரல்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் காய்நகர்த்தி காரியமாற்றும் அதன் சாணக்கியம், இவை எல்லாம் சேர்ந்து அந்நாடு ஜனநாயக விழுமியங்களுக்கு அளிக்கும் மதிப்பைப் பறைசாற்றுகிறது. அதன் அயல் நாடுகளும் யதார்த்த நிலையை அனுசரித்து செயற்படும் இந்திய முன்னுதாரணத்தைப் பின்பற்றுதல் சமாதானம் நிலவ உதவுவதோடு, பிராந்திய நலன்களுக்கும் ஆரோக்கியமானதாக அமையும்.

பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் சிறிலங்காவில் நாளாந்த நிகழ்வாக மாறியுள்ளது. தமிழர் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தி, தமிழ் மக்களை ஒரு பயப்பிராந்திக்குள் வைத்து, பெண்கள்மீதான பாலியல் துஷ்பிரயோகம் தமிழர்களை அடக்கியாழும் ஆயுதமாக கையாளப்படுகிறது. அதுவும் அரச யந்திரத்தின் திரைமறைவு ஆதரவுடனேயே இவை அரங்கேற்றப்படுகின்றன.

மக்கள் கொடுமைகளை எதிர்த்து சாத்வீகப் போராட்டங்களை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத ஒடுக்குமுறை. பொலிஸ் நிலையங்களில் முறையிட பெண்கள் அஞ்சுகிறார்கள். தமக்கு மீண்டும் அதே கொடுமை அப்பொலிஸ் நிலயத்திலேயே ஏற்படலாம் என்ற அனுபவ அச்சம். தமிழில் கொடுக்கப்படும் வாக்குமூலங்கள் மொழி தெரியாத தனிச்சிங்களத்திலேயே பதிவு செய்யப்படுகின்றன.

தமிழ் பெண்கள்மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட பாலியல் பலாத்காரங்கள், சித்திரவதைகள், கொலைகள் பற்றி ஆதாரபூர்வமான ஆவணப்படம் ஒன்றை, பிரித்தானியாவில் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதேபோன்று, மனித உரிமை அமைப்புக்கள் பல ஸ்ரீலங்காவில் தமிழ் பெண்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் கொடுமைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், சர்வதேச சமூகமோ, சர்வதேச ஊடகங்களோ, ஐநா சபையோ உரிய நேரத்தில் கண்டனக் குரல் எழுப்பத் தவறியுள்ளன என்றே கூறலாம்.

இன்று உலகில் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குரல் கொடுக்க முன்வர வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனதும் தலையாய கடமையாகும். குற்றமிழைத்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

அங்கு நடந்தேறியுள்ள பாலியல் சம்பவங்கள் தொடர்பாக இந்தியப் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும்போது மிகுந்த உற்சாகமடைவதோடு, இவ்வெழுச்சியானது பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் அமைவதற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.

பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், அவற்றை பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போமாக.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts