2013-03-08 பாலியல் அத்துமீறல்களுக்கு மத்தியில் 90 000 தமிழ்ப்பெண்கள்!

அனைத்துலக பெண்கள் நாள்: இலங்கை படையினரின் பாலியல் அத்துமீறல்களுக்கு மத்தியில் 90 000 தமிழ்ப்பெண்கள்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளான தமிழர் தாயப் பிரதேசத்தில் அண்ணளவாக 90 000 தமிழ்ப் பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டு இலங்கைப் படையினரின் தொடர்ச்சியான பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் 8 – அனைத்துலக பெண்கள் நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர்-பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்த கூற்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழுவிபரம்:

அனைத்துலக பெண்கள் நாள்: இலங்கை படையினரின் பாலியல் அத்துமீறல்களுக்கு மத்தியில் 90 000 தமிழ்ப்பெண்கள்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 

உலகப் பெண்கள நாளினைக் முன்னெடுத்துக் கொண்டிருக்கு இந்த வேளையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியான தமிழர் தாயகப் பிரதேசத்தில் அண்ணளவாக 90 000 தமிழ்ப்பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டு சிறிலங்கா அரச பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான பாலியல் பலாத்காரங்களுக்கு பலியாகிக்கொண்டிருக்கிறார்கள் என ‘மனித உரிமைகளும் ஜனநாயகமும்’ எனும் கருப்பொருளில் பிரித்தானிய வெளி விவகார மற்றும் பொதுநலவாய காரியாலயம் கடந்தாண்டு மே மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது.

இவ்விதம் பாலியல் பசிக்கு இரையாவது இவ்விதவைப் பெண்கள் மாத்திரமல்ல. அவர்களினது வயது வந்த பெண் பிள்ளைகளும்தான். யாரும் கேட்கவோ முறைப்பாடு செய்ய முடியாது. அவ்வாறு துணிந்தவர்கள் யாரும் இருந்தால் அவர்களின் கதையும் காணாமல் போனோர் பெயர்ப் பட்டியலில்தான் இடம்பெறும்.

ஐக்கிய நாடுகள் சபையின பொதுச் செயலாளர் அவர்களுக்கு, சிறிலங்காவில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் பாலியல் கொடுமைகளினால் அல்லலுறும் பெண்களை காப்பாற்ற வேண்டிய தார்மீகக் கடப்பாடு உள்ளது. யுத்த காலத்தில் அப்பாவித் தமழ் மக்கள் இராணுவத்தால் வகைதொகையின்றிக் கொன்று குவிக்கப்பட்டபோது ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சமூகம் மௌனம் காத்தன. இவர்களின் கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளதை, வரலாறு நிச்சயம் பதிவுசெய்து கொள்ளும்.

சிறிலங்கா பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஐ.நா. பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவும், மற்றும் உள்ளக ஆய்வறிக்கைக் குழுவும், சிறிலங்காவில் தமிழ்ப் பெண்கள் பாதுகாப்புப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என ஆவணப்படுத்தியுள்ள போதும், செயலாளர் நாயகம் இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றும் விடயத்தில் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த கவலைக்குரியது.

இத்தகைய இராணுவக் கொடுமைகளை விசாரிக்க ஐ.நா சாசனத்தின் பகுதி 99ன் கீழ் ‘சர்வதேச விசாரணைக் ஆணையம்’ ஒன்றை நியமிக்கும் படி மேற்படி குழுக்கள் பரிந்துரை செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நூற்றுக்கும் மேலான தமழ் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அரச கருமங்களுக்கு ஆட்சேர்க்கும் போது பின்பற்றப்படும் வழமையான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சேர்த்துக் கொள்ளப்பட்ட சில பெண்கள் தப்பி வெளியேறி வீடு திரும்பியுள்ளனர். பதினாறு பெண்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தம் பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோர் விரட்டியடிக்கப் பட்டனர். பாராளுமன்றத்தில் இது தொடர்பாக பிரஸ்தாபித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்கள் விலக்கிக்கொள்ளப் பட்டு, அவரின் காரியாலயமும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சோதனையிடப் பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான ஒரு சிறுமி சார்பில் பரிந்து பேசிய வைத்திய அதிகாரி தாக்கப்பட்டு ‘பயங்கரவாதி’ என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். வரலாற்றுத் தவறுகளுக்குப் பரிகாரமாகவும், தமிழ்ப்பெண்கள் பாதுகாப்புடன் வாழ வழிசெய்யவும் காலத்தின் தற்போதய தேவையாக ஸ்ரீலங்காவில் தமிழர் தாயகப்பகுதியில் ‘சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறை’ (International Protection Mechanism) ஒன்றை ஐ.நா. நிறுவிக் கொள்ளவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

இதற்கு முன்னோடியாக ‘மனித உரிமைகள் கண்காணிப்பாளர்’ குழுவை இலங்கையில் தமிழர் பகுதியில் நிலைகொள்ள வைக்க ஐ.நா. விரைந்து ஆவன செய்யவேண்டும். ஜனநாயக கோட்பாடுகளுக்கமைய சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பங்களை அறியும் பொருட்டு, புலம், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பொன்றை ஐ.நா. அமைப்பின் கண்காணிப்புடன் நடாத்தி, மக்கள் விருப்பத்தை அறிந்து செயந்படல், இனப்பிரச்சனைக்கான தீர்வுநோக்கிய நகர்வுகளை நியாயபூர்வமாக்கும்.

தமிழ் மக்கள இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கு முறைக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள், இந்நிலமை சீரமைக்கப்பட வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாடுபற்றி உலகு இன்று மௌனம் கலைக்க ஆரம்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானங்கள். இத்தீரமானம் பற்றி உலக நாடுகள் வெளிப்படுத்திவரும் ஆதருவுக் கருத்துக்கள், சாதக நிலைப்பாடுகள் யாவும் உற்சாகமளிக்கிறன. இருப்பினும், இறுதித் தீர்வை அடைய இன்னமும் பயணிக்கவேண்டிய பாதை மிக நீணடது. இதற்கான எமது பெண்களின் பங்களிப்பு இன்றய கால கட்டத்தில் இன்றியமையாதது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ 26.02.13அன்று ‘பாடம் கற்பிப்போம்’’ (We will teach you a lesson) என்ற தலைப்பில் சிறிலங்காவின் அரச படையினர் தமிழ் பெண்கள்மீது மேற்கொள்ளும் திட்டமிட்ட பாலியல அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாக வெளியிட்ட 141 பக்க அறிக்கையை எமது அமைச்சானது வரவேற்கின்றது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர், யுவதிகள்மீது விசாரணை என்ற பெயரில் சிறிலங்கா படையினர் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறம்பான சித்திரவதைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பட்டியலிட்டு ஆவணப்படுத்தியுள்ளது.

பாலியல் கொடுமைகள், அடித்தல், கைகளைக் கட்டி தொங்கவிடல், மூச்சுத்திணறடித்தல், சிகரட்டினால் சுடல் போன்ற சித்திரவதைகள் அவற்றுள் சில. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதிகளில் சட்ட ஆலோசனை பெறவோ, குடும்ப உறவினர்களைச் சந்திக்கவோ, வைத்திய வசதிகள் பெற்றுக்கொள்ளவோ அனுமதி மறுக்கப்படுகிறது. விடுதலை செய்யப்படுவீர்கள் என்ற உறுதிமொழியின் பேரில் விளங்காத சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்ட பத்திரங்களில் வலுக்கட்டாயமாக கையொப்பம் பெறப்பட்ட பின்பும்கூட சித்திரவதைகள் தொடர்கதையாவதுடன் விடுதலை செய்யப்படுவதுமில்லை.

சர்வதேச நெருக்கடிக் குழு’ 20.02.13ல் (ஆசிய அறிக்கை 243) ‘சிறிலங்காவின் சர்வாதிகாரம் நோக்கிய திருப்பம்: சர்வதேச நடவடிக்கையின் அவசியம்’ (Sri Lanka’s Authoritarian Turn: The Need for International Action) என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சட்ட ஆட்சி சீர்குலைந்துள்ளமை, மனித உரிமைமீறல்கள் அதிகரித்துள்ளமை, யுத்த மீறல்கள் தொடர்பான உண்மைகளை அவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது. சர்வதேச நெருக்கடிக் குழு 2011ம் ஆண்டிலும் இலங்கையில் தமிழ் மக்கள் குறிப்பாக பெண்கள் போர் முடிவுற்றிருந்த நிலையில்கூட முகம் கொடுத்துவரும் இராணுவ அச்சுறுத்தல்கள், பாலியல் அச்சுறுத்தல்கள பற்றி விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

வடக்கு, கிழக்கில் இருந்து பெண்கள் தென் பகுதிகளுக்கு கடத்தப்பட்டு பாலியல் தொழிலிலுக்கு நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தொழல் புரியும் பெண்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாகிறார்கள். சிறிலங்கா ராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பன்னிரண்டு வயதுச் சிறுவன் பாலச்சந்திரனின் கொலையுண்ட உடல் ஐந்து குண்டுகளை மார்பில் தாங்கிய நிலையில் சனல்4 தொலைக்காட்சியினால் சமீபத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்றுமறியாத பச்சிளம் பாலகனுக்கே இக் கொடூரமிழைத்தவர்கள், மனித உரிமைகள் வேண்டிக் குரலெழுப்பிவரும் காரணத்தால், எவ்வாறானதொரு இனப்படுகொலைக்கு தமிழினத்தை ஆளாக்கி வந்துள்ளார்கள், வருகிறார்கள் சிறிலங்கா ஆட்சியாளர் என்பதை பாலச்சந்திரன் படுகொலை உலகிற்கு உணர்த்துகிறது.

இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேறவேண்டும் என்ற ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்’ சபையின் 2012ம் ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட தீர்மானத்ததிற்கு மாறாக இராணுவம் இன்னமும் அங்கு நிலைகொண்டு மக்களின் நாளாந்த வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் தலையிட்டு வருகிறது. பிரித்தானியாவில் சனல்4 தொலைக்காட்சி சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள், மனிதாபிமான, மற்றும் மனித நேயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் பற்றி ஆவணப்படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது.

மனித நேய அமைப்புக்களினால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும் இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அநீதிகள், அராஜகங்கள், அடக்குமுறைகள், உரிமை மறுப்புக்கள் யாவும் பெரு வெள்ளத்தின் சிறு துளிகளே. ஐ.நா. வரை சென்று எதிரொலிக்கத் தொடங்கியிருக்கும் தமிழர் பிரச்சனை இன்று பல நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பியிருப்பதை ஐ.நா. சபையில் ஒலிக்கும் கருத்துக்கள், பதிவாகும் வாக்குக்கள் மூலம் காணக்கூடியதாக இருக்கிறது.

சிறிலங்காவிற்கு இன்னமும் முண்டு கொடுக்க நினைக்கும் அல்லது அதனைக் கண்டிக்கத் தயங்கும் நாடுகளிருந்தால் காலக்கிரமத்தில் அவைகளும் தங்களை உலக நாடுகளின் கருத்தோட்டத்தோடு இணைத்து உலகில் அடக்குமுறைக்கு ஆளாகிவரும் இனத்தவர்க்கு நீதி கிடைக்க வழி செய்யவேண்டும். இவ்வாறு அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்களது அனைத்துலக் பெண்கள் நாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts