முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக அரசவை தொடக்கிவைத்தது !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தொடக்கிவைத்தது !
aaமுள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது.
மே-12 முதல் 18ம் நாள் வரை நினைவேந்தல் வாரமாக கடைப்படிக்கப்பட்டு வரும் நிலையில்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முறையாக இவ்நினைவேந்தல் வாரத்தினை தொடக்கி வைக்கும் பொருட்டு கூடியது.
தொழில்நுட்பரிவர்த்னையூடாக அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த சிறப்பு அவைக்கூட்டத்தில்< நினைவேந்தல் உரைகள், கவிதைகள் , கருத்துரைகள் என தமிழினப்படுகொலையினை நினைவேந்தி இருந்ததோடு சுதந்திர லட்சியத்தினை வென்றடைவதற்கான உறுதிப்பாட்டினையும் உணர்வுபூர்மாக பதிவு செய்து கொண்டனர்.
எமது சுதந்திர இலட்சியம் நிறைவேறும்வரை நாம் தொடர்ந்து போராடுவதின் மூலமே முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளின் அர்ப்பணிப்புக்கள் அர்த்தம் உள்ளவையானதாகும் என அரசவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்கள் தனது நினைவேந்தல் உரையில் தெரிவித்திருந்தார்.
எம் அனைவரதும், எமது இனத்தின் எம் தேசத்தின் கூட்டு நினைவில் என்றும் நிலைத்திருக்கும் நாட்களாகவும் நாம் இத் துக்கம், துன்பம், இழப்பு என்பவற்றில் இருந்து எம்மை மீட்டுக்கொண்டு எமதுகையில் உள்ள அத்தனை பலத்தையும் திரட்டி விடுதலைப் போராட்டத்தினை துணிவுடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல எம்மை நாமே மீளவும் அற்பணிக்கும் காலமாகவே நாம் கருத வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது நினைவேந்தல் உரையில் தெரிவித்திருந்தார்.
தொடர்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தங்களது நினைவேந்தல் கருத்துரைகளை அவையில் பதிவுசெய்தனர்.
அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களுடைய நினைவேந்தல் உரை :
கௌரவ பிரதமர் அவர்களே! கௌரவ நிறைவேற்றுச் செயலர் அவர்களே! கௌரவ அரசவை உறுப்பினர்களே!
விடுதலைக்காய் தம்முயிர் ஈந்த மாவீரர்களையும் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எம்மக்களை மனதில் இருத்தி எனது வணக்கத்தினை முதற்கண் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிங்கள அரசு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்னும்  பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் ஆயுத, மற்றும் அரசியல் ஆதரவோடு, ஒருபுறம் வரலாறு காணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு, பொதுமக்களை ஏமாற்றி யுத்ததவிர்ப்பு வலையங்களுக்கு போகச்செய்து, அவர்கள் மீது எறிகணைத் தாக்குதல்களையும், தடை செய்யப்பட்ட இராசயன ஆயுதங்களைக் கொண்டும் 2009 இல்  இனவழிப்பை நிகழ்த்தியது.
மக்கள் பதுங்குகுழிக்குள்கூட ஓய்வெடுக்க முடியாதவாறு எல்லா முனைகளிலிருந்தும் சகலவிதமான எறிகணைகளாலும் படைக்கலன்களாலும் தொடர்ந்து தாக்கப்பட்டார்கள். காயப்பட்ட மக்கள் சிகிச்சைபெற முடியாதவாறு மருத்துவமனைகள் தாக்கப்பட்டன. அந்த மக்களுக்கான மருந்து விநியோகம் தடுக்கப்பட்டன. காயப்பட்ட மக்களை வெளியே அப்புறப்படுத்துவதற்கான சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் கப்பலின் வரவு தடுத்துநிறுத்தப்பட்டது. அந்த மக்களுக்கு வெளியாலிருந்து தருவிப்பதற்கான உணவு விநியோகம்  தடுக்கப்பட்டது. பட்டினிச்சாவைத் தடுப்பதற்காக ஒருவேளை உணவு வாங்குவதற்காக பசியோடு வரிசையாக குழுமிநின்ற மக்கள்மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
இந்த இனப்படுகொலை திட்டமிட்டு  நிறைவேற்றப்படுள்ளது என்பதற்கான சான்றுகள் உடனடியாகவே எமக்கு கிடைத்தபோதிலும் அது சர்வதேசத்தின் கண்களில் இருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.
ஆனாலும் படிப்படியாக சனல் 4 போன்ற ஊடகங்களினாலும், மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களினாலும், போர்முனையில் இருந்து தப்பியவர்களினாலும், சிங்கள சிப்பாய்களினாலும் உண்மை வெளியில் கொண்டு வரப் பட்டுள்ளது.
இதனால் அரச பயங்கரவாதத்தின் உண்மைத் தோற்றம் உலகுக்குக் காட்டப்பட்டுள்ளதோடு சிங்களத்துக்கு சகலவகையிலும் உதவிய நாடுகளும் வெட்கித் தலைகுனிய வேண்டியநிலைக்கு ஆளாகின.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மண்ணிலே கடைசி நிமிடம் வரை சாவைத் துச்சமாக எண்ணி சளைக்காது போராடிய எங்கள் விடுதலை போராளிகள் மற்றும் அவர்களோடு தூணாக நின்ற பொதுமக்கள் அனைவரினதும் தியாகங்கள் வீண்போகவில்லை என்றே கூறலாம்.
உண்மையில் முள்ளிவாய்க்கால் என்பது ஒரு முடிவல்ல. எமது ஆயுதப் போராட்டம்தான் மௌனிக்கப்பட்டதே அன்றி எமது உரிமைப்போராட்டத்திற்கான முடிவல்ல.
எமது உரிமைக்கான போராட்ட வடிவம் இன்று சர்வதேச அரங்குக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இனஅழிப்புக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது, அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
அந்தவகையில் எமது சுதந்திர இலட்சியம் நிறைவேறும்வரை நாம் தொடர்ந்து போராடுவதின் மூலமே முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளின் அர்ப்பணிப்புக்கள் அர்த்தம் உள்ளவையாகும்.
இன்று எமது விடுதலைப் போராட்டத்தில் பல முனைகளில் நாம் முகம் கொடுக்கவேண்டியுள்ளது.
ஒருபுறம் ஐ.நா.வில் சர்வதேச சுயாதீன விசாரணையும், எம்மக்களிடையே விருப்பறியும் வாக்கெடுப்பும் வேண்டிப் போராடும் வேளையில் மறுபுறத்தில் எமது தாயகத்தின் மண்ணின் இருப்பையும் மக்களின் இருப்பையும் தக்கவெய்க்க போராட வேண்டியுமுள்ளது.
கடமையுணர்வோடு நாடுகடந்த அரசாங்கத்தில் இணைந்து பணியாற்ற வந்துள்ள உங்களுக்கான, எனக்கான பணிகள் எம்முன்னே தெளிவாக இருக்கின்றன. நாம் எமது கடமைகளைப் புறக்கணித்தால் சரித்திரம் எம்மை மன்னிக்காது.
முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளின் அர்ப்பணிப்புக்களை ஒரு கணம் நினைவு கூருவோம். அவர்களின் அர்ப்பணிப்புக்களை அர்த்தம் உள்ளவையாக்குவோம் என்று உறுதி கொள்வோம்! எமது கடமைகளை உண்மையுடனும் விடா முயற்சியுடனும் செய்வோம் என்று திடம்  கொள்வோம்!  வெற்றி எமதே! இவ்வாறு அவைத்தலைவர் தவேந்திரராஜர் அவர்களுடைய நினைவேந்தல் உரை அமைந்திருந்தது.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுடைய அரசவை நினைவேந்தல் பதிவு :
ஆண்டு தோறும் திரும்பும் இந்நாள் – வாரம் எம் ஒவ்வொருவரதும் ஆழ் மனதில் மாறாத வடுவாகவும், எமது மாபெரும் இழப்பின் சின்னமாகவும்  எமது விடுதலைக் கனவு சிதைக்கப் பட்டதன் குறியீடாகவும்,  எமது உறவுகள் எம் விடுதலை வீரர்கள் எம்மிடம் இருந்து கொடூரமாகப் பிரிக்கப் பட்டதன் ஆறாத் துக்கத்தின் மிகுதியாகவும் இன்று எம்மை வருத்தும் அதே வேளையில் இதே வாரம் எம் அனைவரதும், எமது இனத்தின் எம் தேசத்தின் கூட்டு நினைவில் என்றும் நிலைத்திருக்கும் நாட்களாகவும்,  நாம் இத் துக்கம், துன்பம், இழப்பு என்பவற்றில் இருந்து எம்மை மீட்டுக்கொண்டு, எமதுகையில் உள்ள அத்தனை பலத்தையும் திரட்டி விடுதலைப் போராட்டத்தினை துணிவுடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல எம்மை நாமே மீளவும் அற்பணிக்கும் காலமாகவே நாம் கருத வேண்டும்.
துக்கம் என்பது ஒரு பரிமாணம் மட்டுமே , ஆனால் துயரமும் இழப்பும் துக்கமும் தான் எம்மை பிணைக்கும், எமது உணர் வுகளை வீச்சுடன் இணைக்கும்   வலிமை கொண்டவை. அந்த இணைந்த உணர்வுகள் தான் எம்மை துக்க உணர்வைக் கடந்து இந்த நாட்களின் மற்றைய பரிமாணங்கட்கு முக்கியமாக அரசியல் பரிமாண ங்கட்கு எம்மை இட்டு செல்லும்.
இந்த உணர்வுகளை நாம் கையில் எடுத்து நீங்கள் அனைவரும் மக்களிடையே சென்று எமது அரசியல் பணிகட்கும், எமது இனம் எதிர்நோக்கும் இன அழிப்புக்கு எதிரான போராட்டத் துக்கும் எமது முழுமையான விடுதலைக் கும்  அவர்களது ஆதரவினையும் ஈடுபாட்டினையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மகத்தான அர்பணிப்பின் மூலம் எமது விடுதலை வேட்கையை இதுவரை வீரத்துடன் எடுத்து சென்று உலக அரங்கில் விட்டுள்ள வீரம் நிறைந்த போராட்டத்தின் தொடர்சியாக எம்மை கருதிக் கொண்டு, அத்தனை அரும் பெரும் உன்னத வீரர்கள் மக்கள் எல்லோரையும் பணிவுடன் வணங்கி எம்மை நாமே புதுப்பித்துக் கொள்வோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரனுடைய நினைவேந்தல் உரை அமைந்திருந்தது.
நாதம் ஊடகசேவை
நினைவேந்தல் வணக்கப் பாடல் : http://youtu.be/BUPRH4yugyQ
தமிழீழத் தேசிய துக்க நாள் பாடல் : http://youtu.be/U2ZkYdI9vaw
aa
TGTE_may18-3
TGTE_may18
TGTE_may18-5

 

 

 

 

 

More from our blog

See all posts