பிரதமர் வி.உருத்திரகுமாரனுடைய மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரை

aaமுள்ளிவாய்க்கால் பெருவலியின் துயர நினைவுகளைச் சுமந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உரித்திரகுமாரனுடைய மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரை, சமகால அரசியல் அரங்கில் தமிழர்களின் முன்னகர்வு குறித்து முன்வைத்துள்ளது.

அன்பான தமிழீழ உறவுகளே

இன்று தமிழீழ தேசிய துக்க நாள்.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் நினைவு நாள்.

2009 மே 18 இல் சிங்களம் தனது இரத்தமும் நிணமும் தோய்ந்த, அசிங்கமான கால்களை தமிழீழ தேசமெங்கும் அகல விரித்து, நமது தாயகப்பூமி மீதான முழுமையான ஆக்கிரமிப்பை வரலாற்றில் பதிவு செய்த நாள்.

தமிழீழ தேசத்தின் மீது சிங்களம் ஆடிய கோரத்தாண்டவத்தையும், அது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளில் ஆறாப் பெருந்துயராய் நிலைத்துள்ளதையும் குறியீட்டு வடிவில் வெளிப்படுத்தும் நாள்.

வீடுகளில், வீதிகளில், மருத்துவமனைகளில், கோவில்களில், தேவாலயங்களில், தஞ்சம் புகுந்த முகாம்களில் எங்கும் – எல்;லா இடங்களிலுமே – வயது வேறுபாடு ஏதுமின்றி, ஆண், பெண், முதியோர், குழந்தைகள் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி – இவர்கள் தமிழர்களாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காக சிங்களம் எடுத்த நரபலியின் இரத்த சாட்சியமாக அமையும் நாள்.

இற்றைக்கு ஐந்து வருடங்களின் முன்னால் நமது மக்கள் சிங்களத்தால் கொத்துக் கொத்தாய்க் கொன்றொழிக்கப்பட்டனர். இறந்தவர் எவர் மிஞ்சியவர் எவர் என்ற கணக்குக்கூடத் தெரியாத வகையில் எமது மக்கள் சிங்களத்தின் கனரக ஆயுதங்களாலும் யுத்த விமானங்களாலும் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டனர். மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. உணவும் போர் ஆயுதமாக்கப்பட்டது. பாதுகாப்பு வலயங்கள் அரச பயங்கரவாதத்தின் கொடுர முகத்தின் சாட்சியங்களாகின.

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். சுமார் மூன்று இலட்சம் மக்கள் சிறை பிடிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். தடுப்பு முகாம்களில் இருந்து கவர்ந்து செல்லப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கபட்டு சிதைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோரின் நிலை என்ன என்பது இன்று வரை எவருக்கும் தெரியாது.

மனித நாகரிகமும் அனைத்துலக சட்டங்களும் உலக நிறுவனங்களும் வெட்கித் தலைகுனியும் வகையில் மானுடத்துக்கு எதிரான பெரும் குற்றமொன்று 24 மணி நேரமும் விழித்திருக்கும் நவீன ஊடக உலகத்தின் கண்களின் முன்னே நடைபெற்று முடிந்தது.

முள்ளிவாய்க்காலில் தமிழர் தேசம் மீது சிங்களம் நடாத்திய இனஅழிப்பு நமது தேசத்தின் ஆன்மாவில் பெரும் துயர வடுவாய்ப் பதிந்திருக்கிறது. இப் பெருந்துயர் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக தமிழர் தேசத்தின் கூட்டு நிiவுகளில் பொதிந்திருக்க வேண்டியது.

இதன் பாற்பட்டுத்தான் இன்றைய தினத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ தேசிய துக்க நாளாகப் பிரகடனம் செய்திருக்கிறது.

ஆறாப் பெருந் துயர் என்பதும் தேசிய துக்கம் என்பதும் உரிமைப் போராட்டங்களில் எதிர் மறையான் அம்சங்கள் அல்ல. மாறாக துயர நினைவுகளே மக்களை உருத்திரள வைக்கும் ஆற்றல் கொண்டவை. இன அழிப்பின் துயர நினைவுகைளை உயிர்ப்;புடன் வைத்திருக்கும் எந்த சமூகமும் அரசியல்ரீதியாக சரணாகதி அடைவதும் இல்லை. இது தமிழீழ தேசத்துக்குச் சாலவும் பொருந்தும்.

சிங்கள தேசமும் தமிழர் தேசமும் இனி ஒரு போதும் ஒரு நாடு என்ற கூட்டுக்குள் வாழ முடியாது என்பதனை முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மிகத் தெட்டத் தெளிவாக முரசறைந்திருக்கிறது.

சிங்களம் தொடர்ந்து வரும் தமிழர் தேசத்தின் மீதான இனஅழிப்பில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்குத் தமிழீழம் என்றதொரு புதியநாடு உலகில் பிறப்பெடுப்பதனைத் தவிர வேறுவழியேதும் இல்லை.

தமிழர் தேசம் தம்மைத் தாமே ஆள்வதனைத் தவிர வேறு மார்க்கம் ஏதும் இல்லை.

இதனை வரலாறு தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிறப்பும் இந்த வரலாற்று வழிகாட்டுதலில் இருந்துதான், முள்ளிவாய்க்கால் முதாலாண்டு; நினைவுடன் எழுந்தது.

இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் துயர நிiவுகளை நெஞ்சில் ஏந்தியவாறு அனைத்துலக சமூகத்துக்கு நாம் முறையீடு ஒன்றினைச் செய்கிறோம்.

தயவு செய்து ஈழத் தமிழர் தேசத்தை சிங்களத்துடன் சேர்ந்து ஒரே நாட்டில் வாழுமாறு கோராதீர்கள்.
தயவு செய்து சிங்களம் செய்த இனஅழிப்பை மறக்குமாறும் மன்னிக்குமாறும் எம்மை வற்புறுத்தாதீர்கள்.

நாசிக் கொடுமைகளை மறக்குமாறும் கிட்லரை மன்னிக்குமாறும் நாம் யூத மக்களைக் கோருதல் நியாhயம் ஆகுமா? இதே போல்தான் நமது நிலையும். நாசிகளின் யூத இனஅழிப்பு அளவாலும் பரிமாணத்தாலும் பெரியதுதான். ஆறு மில்லியன் யூத மக்கள் கொன்றொழிக்கப்பட மிகப்பெரிய இனஅழிப்பு அது. ஆனால் கொடுரத்தில், இனஅழிப்பு குறித்த நோக்கத்தில், திட்டமிட்ட செயற்பாடு என்ற வகையில் ஈழத் தமிழர் தேசம் மீதான சிங்களத்தின் இனஅழிப்பு எந்த வகையிலும் குறைந்ததல்ல.

நம்மாலும் சிங்களத்தின் இனஅழிப்பின் கொடுமைகளை மறக்கவோ அதற்குக் காரணமான இராஜபக்சாக்கள் உள்ளிட்ட சிங்கள அரசின் தலைவர்களை மன்னிக்கவோ முடியாது.

நாம் கோருவதெல்லாம் நமது மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தம்மைத் தாமே ஆளுமை செய்யம் உரிமை உடையவர்களாக இவ்வுலகப் பந்தில் ஏனைய சுதந்திர மனிதர்களைப் போல் வாழும் உரிமையினைத்தான்.

நாம் கோருவதெல்லாம் நமது தேசத்தின் மீது இனஅழிப்பு புரிந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதனைத்தான். எமது மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதனைத்தான்.

நாம் கோருவதெல்லாம் சிங்களத்தின் இனஅழிப்பில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ அரசை அமைக்க அங்கீகாரமும் ஆதரவும் தாருங்கள் என்பதனைத்தான்.

ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடிப்பதற்கு அனைத்துலக சமூகம் வகித்த பாத்திரம் இவ்வுலகறிந்த ஒன்றுதான்.

இன்று நமது தேசம் ஆயதங்களை மௌனித்து விட்டு அரசியல் இராஜதந்திர வழியில் உரிமைப்
போராட்டத்தைத் தொடர்கிறது.

எந்த அனைத்துலக சமூகம் நமது தேசத்தின் ஆயுதப் போராட்;டத்தைத் தோற்கடிக்கத் துணைநின்றதோ அதே அனைத்துலக சமூகத்திடம் நாம் நீதி கோருகிறோம்.

நலன்கள் என்ற அச்சாணியில் சுழலும் அரசுகளின் மனச்சாட்சிகளைத் தட்ட முயல்கிறோம். நமது நலன்களையும் உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் பலம் மிக்க அரசுகளினதும் நலன்களை ஒன்று சேர வைக்கக்கூடிய மார்க்கங்களைத் தேடுகிறோம்.

அரசுகளின் நலன்களும் நமது நலன்களும் ஆரம்பத்தில் நமது இறுதி இலக்கு வரை இணையாது இருக்கலாம். சில சமயங்களில் நமது பயணத்தில் பாதி வழி வரை கூட சில அரசுகள் வரக்கூடிய வாய்ப்புக்களும் கிடைக்கலாம். நாமும் அனைத்துலக அரசுகளும் வேறுபட்ட நோக்கங்;களுக்காக ஒரே வழியில் பயணம் செய்யும் நிலையும் தோன்றலாம்.

இதனால் நாம் அரசுகளுடன் செயற்படும் போது நமது முழு வழி நண்பனாக இவ் அரசுகள் இயங்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. பாதி வழி நண்பன் என்ற அணுகுமுறையை நாம் அனைத்துலக உறவுகளில் வளர்த்தெடுத்தல் நமது இலக்கின்பால் முன்னேறத் துணைபுரியும். நாம் செல்ல வேண்டிய பாதையில் ஒரு சிறிய அடியை அனைத்துலக அரசுகள் ஏதும் தமது நலன் கருதியாவது முன்னோக்கி வைப்பின் பாதிவழி நண்பன் என்ற அணுகுமுறையுடன் நாம் இவற்றை கையாளல் பயன் தரும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழம் என்ற தனிநாடு அமைவது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தற்போதய கொள்கைகளில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதில் கூடுதல் கவனத்தை எடுத்து வருகிறது. இது இரு தளங்களுடன் தொடர்பு பட்டது. முதலாவது இந்து சமுத்திரத்தையும் தென்னாசியப் பிராந்தியத்தையும் சார்ந்த புவிசார் அரசியல் தொடர்பான விடயம். 21 ஆம் நூற்றாண்டின் புவிசார் அரசியலில் இந்து சமுத்திரம் முக்கிய பாத்திரம் வகிக்கும் நிலை இருப்பதனால் நமக்கு வாய்ப்பான சூழல் உருவாகும் நிலைமைகள் உள்ளன.

இரண்டாவது தமிழர்கள் ஒரு வலுமையமாகக் கருதப்படுவதுடன் தொடர்பு பட்டது. தமிழர்கள் வலுமையமாகக் கருதப்படுவதற்கு தமிழகத்தின் பாத்திரம் இன்றியமையாததாகும். இதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் தமிழகத்துக்கு உண்டு. இந்திய அரசின் தமிழீழம் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை தமிழகம் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் புதிய அரசாங்கம் அமையும் ஒரு சூழலில் புதிய அணுகுமுறைகளுடன் நாம் விடயங்களைக் கையாள வேண்டும். ஈழத் தாயகம், புலம் பெயர்தமிழ் மக்கள்(தமிழ் டயாஸ்பொறா), தமிழகம், உலகத் தமிழ் மக்கள் இடையே ஏற்பட்டு வரும் தோழமையுடனான இணைவும் ஈழத் தாயகத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பூகோள அமைவிடமும் தமிழர்களை ஒரு வலுமையமாக உருவாக்கும் தகைமைகளைக் கொண்டவை.

முள்ளிவாய்க்கால் நினைவுகள் நம்மை நமது இலக்கு நோக்கிச் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கும் உந்துசக்தியினைக் கொண்டவை.

ஓர் இலட்சியப் போராட்டத்தில், இப் போராட்டப்பாதையில், இப் போராட்ட காலத்தில் தமது உயிர்களை ஈந்த அனைவரதும் நினைவாக நமக்கெனத் தமிழீழம் என்ற தனியரசை அமைத்துக் கொள்வதற்காக உழைப்போம் என முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனுடைய மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts