ஸ்ரீலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் குவைத்திலும் விறுவிறுப்பு!

  • June 22, 2015
  • TGTE
ஸ்ரீலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் குவைத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன்  தமிழகத்தின் மயிலாடுதுறையில் கருத்தரங்கமொன்றும் இடம்பெறவுள்ளது.

பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் www.tgte-icc.org எனும் இணைய மூலமும் நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்து இயக்கமானது லட்சத்தினைக் கடந்து பத்து இலட்சத்தினை நோக்கி விறுப்புடன் நடைபெற்று வருகின்றது.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் தற்போதைய ஆட்சிக்கு உயிர் கொடுக்கும் முகமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள், ஒரு உள்நாட்டு பொறிமுறை அல்லது வெளிநாட்டுடன் இணைந்த ஒரு கலப்புப் பொறிமுறை மூலம் இவ் விசாரணையினை மேற்கொள்ளப் பரிந்துரைக்கும் ஆபத்து உள்ளதாக தெரிவித்திருந்த நா.தமிழீழ அரசாங்கம், இந்நிலை ஏற்படின் எமக்கான பரிகார நீதியினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அருகிவிடும் என அச்சத்தினை வெளிப்படுத்தியிருந்தது.

இதன் நிமித்தமாக ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கையில் நாம் விரும்பும் தாக்கத்தை ஏற்படுத்து முகமாக ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு கோரும் ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதனொரு அங்கமாக குவைத்தில் உள்ள தமிழ் உறவுகள் மிகுந்த உற்சாகத்துடன் இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக செயலாற்றத் தொடங்கியுள்ள இக்கையெழுத்து இயக்கத்தின் ஒர் முனைப்பாக மயிலாடுதுறையில் இதனையொட்டிய கருத்தரங்கொன்று யூன் 23ம் நாளன்று இடம்பெறவுள்ளது.

நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத் தலைவர் பேராசிரியர் சரசுவதி அம்மையார் அவர்களது முதன்மைக் கருத்துரையுடன் பல்வேறு சமூக-அரசியல் பிரமுகர்கள் பங்கெடுக்கின்ற வகையில் இக்கருத்தரங்கு இடம்பெறவிருக்கின்றது.

                            http://www.tgte-icc.org/

More from our blog

See all posts