பிரான்ஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சிறிலங்காவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி !

  • November 15, 2015
  • TGTE

பிரான்ஸ் தாக்குதல் விவகாரத்தில் உலக நாடுகள் சிறிலங்காவுக்கு மலர் மாலையிட்டு வணங்க வேண்டுமென்ற சிறிலங்காவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி கொடுத்துள்ளது.

பயங்காரவாத தாக்குதல்களால் தடுமாறி வரும் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள், இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்த சிறிலங்கா அரசாங்கத்தினை மலர் மாலையிட்டு வணங்க வேண்டுமென சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பதிலுரைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ், தமிழினத்தின் மீது தான் நிகழ்த்திய இனஅழிபபினை மூடிமறைத்து, தனது அரச பயங்கரவாதத்தினை நியாயப்படுத்த, பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தினை சிறிலங்கா துணைக்கு இழுக்கின்றது.

மலர் மாலையிட்டு வணங்க வேண்டுமென்பதற்கு அப்பால் அனைத்துலக நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்த வேண்டிய பொறுப்பு பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உண்டு.

ஐ.நா பொதுச்செயலரது நிபுணர் குழுவினரது அறிக்கையும், ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையும், அப்பாவிப் பொதுமக்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட இனஅழிப்பினை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளன.

அனைத்துலக அரங்கில் இனப்படுகொலையாளி நாடாக சிறிலங்கா அரசாங்கம் உள்ள நிலையில், சிறிலங்காவுக்கு மாலையிட்டு பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள், வணங்க வேண்டுமென்ற சிறிலங்காவின் கருத்து வேடிக்கையானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

More from our blog

See all posts