திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்க : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிறிலங்கா சிங்களப் பேரினவாதப்பூதத்தின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு கண்டனமும் இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு வணக்கமும் தெரிவிப்பதற்காக மெரினா கடற்கரையில் அமைதியான முறையில் ஒன்றுகூடல் நடத்தியமைக்காக, மே 17 இ;யக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்துவதுடன் இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் தமிழக அரசைக் கோருகிறது.

தமிழர் உரிமைக்காகப் போராடும் இத் தோழர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் உள்ளங்களையும் உணர்வுகளையும் காயப்படுத்தியிருக்கின்றது என்பதனையும் நாடுகடந்து தமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டுகிறது.

2009ம் ஆண்டு மே மாதம், சிங்களம் ஈழத்தமிழ் மக்களுக்கெதிராக நடாத்தி வந்த இனவழிப்பு கொடுமையை அதன் உச்சத்தை எட்டியிருந்தது.

தமிழ் மக்களின் விடுதலை வேணவாவை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இத் தமிழின அழிப்புக்குப் பதிலடியாக, நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை 2010ம் ஆண்டு மே மாதம் 17-19 திகதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம்.

இதே போல் தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் தீயில் இருந்து மே 17 இயக்கம் ஒரு மக்கள் அமைப்பாகத் தோற்றம் பெற்றது.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலை நோக்கிய செயற்பாடுகளுடன் தமிழ்நாடு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் தோழர் திருமுருகன் காந்தியின் ஒருங்கிணைப்பில் மே 17 இயக்கம் போராடி வருகிறது. இவர்களின் தோழமைச்செயற்பாடுகள் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பவையாக அமைந்திருந்தன.

தமிழ்நாடு மக்கள் ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கும் ஆதரவாக உள்ளனர். ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவானதொரு செயற்பாட்டை மேற்கொண்டிருந்த காரணத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைத்திருக்கப்பட்டுள்ளமை தமிழ் நாட்டு மக்களது உணர்வுகளுக்கு எதிரானதாக அமைவதோடு, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தலைமையில் நிiவேற்றப்பட்ட சட்டப்பேரவைத் தீர்மானங்களை அவமதிக்கும் செயலாகவும் இருக்கிறது.

இச் செயலை அமரர் ஜெயலலிதா அவர்கள் பெயர் சொல்லி இயங்கும் தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டிருப்பது வேதனை தருவதாகவும் இருக்கிறது.

இந் நிலையில்; திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழக அரசினைக் கோருவதுடன,; இவர்களின் விடுதலைக்காக உரத்துக் குரல் கொடுக்குமாறு தமிழகத்தின் அனைத்து அரசியற் கட்சிகளையும் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts