போராட்டத்தினை வழிநடத்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் : சிறிதரன் எம்.பி கருத்து !

  • June 13, 2017
  • TGTE

தமிழர் தாயகம், புலம்பெயர் தேசம் என உலகப் பரப்பெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்தின் ஓரு பாகத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழிநடத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த நா.கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நாள் நிகழ்வில், இணைய வழிப்பரிவர்த்தனை ஊடாக தாயகத்தில் இருந்த உரையாற்றும் பொழுதே இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நெருக்கடிகளையும், கண்காணிப்புக்களையும் கொண்டுள்ள நிலையில் தமிழர் தாயகத்தில் இருந்து சுதந்திரமாக எல்லா வார்த்தைகளையும் பேசிவிட முடியாத நிலையில் தாம் இருப்பதாக சிறிதரன் எம்.பி அவர்கள் தெரிவித்திருந்தார்.

வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதான ஒர் அரசியற் தீர்வுத்திட்டத்துக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்த சிறிதரன் எம்.பி அவர்கள், தாயகதினது அரசியல் அணுகுமுறைகளும், புலம்பெயர் தமிழர் அரசியல் அணுகுமுறைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற காலம் வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அது தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கின்ற ஓர் மையமாக அந்த புள்ளி இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் தொடர் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் இருந்து தாம் அவதானித்து வந்ததாக தெரிவித்த சிறிதரன் எம்.பி அவர்கள், அச்செயற்பாடுகளுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்திருந்தார்.

தமிழர் தாயகமெங்கும் நில மீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் போராட்டம் என மக்கள் தன்னெழுச்சியாக தமது நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்த சிறிதரன் எம்.பி அவர்கள், நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்சி மாற்றங்களுக்கு நாம் வாக்களித்திருந்தாலும், அந்த நம்பிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற தவறி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

More from our blog

See all posts