9ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதியோரியும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைவு கூர்ந்தும் தமிழீழ தேசிய துக்கநாள் May 18 நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மே 12 முதல் 18 வரை இலண்டனில் பல பகுதிகளை மையப்படுத்தி குருதிக்கொடை மற்றும் மிதிவண்டி கவனயீர்ப்புப் போராட்டம் ஆகிய நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு உணர்வெளிச்சியுடன் நடைபெறுகின்றன.
 
மேலும் மே 11 முதல் மே 13 வரை Great Plastic Pick Up எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சிரமதானப் பணியொன்றிலும் நாடுகடந்த தமீழீழ அரசாங்கம் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.
 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான மே 12 அன்று 10, Downing street பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தின் முன்பாக மிதிவண்டி கவனயீர்ப்பு போராட்டம் அக வணக்கத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தினர்.
 
இந் நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மிதிவண்டி கவனயீர்ப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கினர். 
 
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள்இவ் மிதிவண்டி கவனயீர்ப்பாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
காலை 11 மணியளவில் Downing Street இலிருந்து புறப்பட்ட மிதிவண்டி கவனயீர்ப்பாளர்கள் முதலில் West End Blood Donor Centre எனும் இடத்தைச் சென்றடைந்தனர். இங்கு குருதிக்கொடை வழங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தபின் மிதிவண்டிப் பயணம் Walthamstow, Newbury Park, Ilford போன்ற பகுதிகளூடாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மிதிவண்டி கவனயீர்ப்பாளர்கள் ஆங்காங்கே தரித்து நின்று மக்கள் சந்திப்பை மேற்கொண்டனர். இறுதியில் மாலை ஆறுமணியளவில் East Ham பகுதியை வந்தடைந்த மிதிவண்டிப் பயணம் எழுச்சிப்பாடல் இசைக்கப்பட்டு உறுதிமொழி எடுத்தலுடன் நிறைவடைந்தது.
 
இம் முதல் நாள் கவனயீர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு. கந்தப்பு ஆறுமுகம் அவர்கள் ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரித்தானியா அரசும் சர்வதேச சமூகமும் கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்திப் பேசினார். 
 
முள்ளிவாய்க்கால் துக்கதின நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன் வைக்கும் கோரிக்கைகள்  என்னவெனில் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகச் செயலாக்கும் வரை பொதுநலவாய அமைப்பிலிருந்து சிறிலங்கா இடைநீக்கப்பட வேண்டும் இப் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவேண்டும், அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும், ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ஒன்று நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் சமூகநல திட்டங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இலங்கையில் நடைபெற்ற இனவழிப்புக்கு பரிகார நீதி கோரி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈழத்தமிழர்களால் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. 
 
அந்த வகையில் பிரித்தானியாவின் பல பாகங்களில் 11ம் திகதி முதல் 13ம் திகதி வரை பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் GREAT PLASTIC PICK UP எனும் தொனிப்பொருளில் SUNDERLAND, ILFORD, ESSEX, COLCHESTER, REDBRIDGE, HARROW, KINGSTON, ENFIELD, RICHMOND, THURROCK, WANDSWORTH MITCHAM, BRENT, EALING, LEWISHAM, CROYDON, BARKING, GLASGOW, WOOLWICH, NEWHAM, MORDEN, BIRMINGHAM, LUTON ஆகிய 23 கவுன்சில் பகுதிகளில் இந்த சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
 
இந்த சிரமதானப் பணியொவ்வொன்றிலும் நாடு கடந்த தமீழீழ அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் அரசவை உறுப்பினர்கள் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 2ம் நாளில்
 
9வது முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்க தின நினைவேந்தல் நிகழ்வாக  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மிதிவண்டி கவனயீர்ப்புப் போராட்டமானது 2வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மே 13 அன்று  East Ham பகுதியில் அக வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
காலை 11 மணியளவில் தமது பயணத்தை ஆரம்பித்த மிதிவண்டி கவனயீர்ப்பாளர்கள் பொதுமக்களிடம் பரப்புரை செய்தபடி Forest Hill, Lewisham, Croydon, Tooting  ஆகிய பகுதிகளூடாகப் பயணித்து இறுதியில் மாலை 6 மணியளவில்   Kingston எனும் இடத்தைச் சென்றடைந்தனர்.
 
பிரித்தானிய‌ லிபரல் டெமொக்ரட் கட்சியை சேர்ந்த‌ கிங்ஸ்டன் பிரதேசத்தின் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மதிப்புக்குரிய‌ சேர் எட்வர்ட் ஜொனதன் டெவி அவர்களை சந்தித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கோரிக்கைகளை விளக்கியதுடன் ஆதரவு கோரி அதற்கான மனுவையும் கையளித்தனர். இதன் போது கருத்து தெரிவித்த மதிப்புக்குரிய திரு எட்வர்ட் டேவி அவர்கள் ‘முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப்படுகொலையை இத்தனை வருடங்கள் கடந்த நிலையிலும் புலம்பெயர் தமிழர்கள் நினைவு கூர்ந்து அதன் பிரதி பலிப்புகளை சர்வதேசத்திடம் கொண்டு சேர்த்து அதற்கான பரிகார நீதி கோருவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தான் வரவேற்பதாகவும் சிறீ லங்கா நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கு நிச்சயமாக சர்வதேசத்தின் முன்னிலையில் பொறுப்பு கூற வேண்டும் எனவும் சிறீ லங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் உலக நாடுகளுக்கும்  உறுதியளித்த நடவடிக்கைகளை  புறக்கணிப்பதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். இந்த விடயங்களை முன்னிறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைக்கும் மனுவை தான் பூரணமாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். சிறீலங்கா அரசாங்கம் உலக நாடுகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் அளித்த உறுதிகளை நிறைவேற்ற‌ தவறும் பட்சத்தில் சிறீலங்காவின் பிரித்தானியாவுடனான வியாபார முன்னுரிமைகளை இரத்து செய்ய பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தான் முன்னின்று வலியுறுத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கைகளான ஐநா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகச் செயலாக்கும் வரை பொதுநலவாய அமைப்பிலிருந்து சிறிலங்கா இடைநீக்கப்பட வேண்டும்; இப் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவேண்டும்; அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும், ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ஒன்று நடைபெற வேண்டும் என்பவற்றைத் தாங்கிய துண்டுப்பிரசுரங்ககளும் விநியோகிக்கப்பட்டன.
 
ஊடக அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

More from our blog

See all posts