இலங்கைத் தமிழரின் இறையாண்மையும் சுயநிர்ணய உரிமையும் – பிரித்தானியாவில் கருத்தரங்கு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் “இலங்கைத் தமிழர்களின் இறையாண்மையும் 
சுயநிர்ணய உரிமையும்” (Sovereignty and Right to Self Determination of Ceylon Tamils) என்ற தலைப்பிலான கருத்தரங்கு 03/06/2018 அன்று இலண்டனில் ஈஸ்ட் ஹாம் பகுதியில் நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
 
இக் கருத்தரங்கை வழங்கிய கலாநிதி S. பரமலிங்கம் அவர்கள் பேசுகையில் ” தமிழ்-சிங்கள இன மோதல் வரலாற்று ரீதியானது. இரு தேசிய இனங்களும் குடியேற்ற ஆட்சியின் கீழ் அவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன. உண்மையில் தமிழ்த் தேசிய இனம் அதனது சர்வதேச எல்லைகளையும் ஆட்புலத்தின் மீதான உரித்தினையும் இழந்து இருக்கையில், சிங்கள தேசம் நீதியற்ற முறையில் தனது ஆதிக்கத்தைத் தமிழர் மீதும் தமிழ் பேசும் மக்கள் மீதும் செலுத்துவதனை அவதானிக்க முடியும். இன்று நடைமுறையிலிருக்கும் 1978ம் ஆண்டின் அரசியற் சட்டம் முன்னைய 1972ம் ஆண்டின் சட்டத்தைப் போலவே தமிழர்களது பங்கு பற்றுதல் எதுவுமின்றி உருவாக்கப்பட்டதாகும். 
 
இலங்கை அரசின் சகல துறைகளும் வடக்கு-கிழக்கு மாகாணத்தின் வரலாற்று ரீதியான குடிப்பரம்பலை மாற்றி சிங்களவர்களை தமிழ் பேசும் தாயகத்தில் பெரும்பான்மையாக்க முயற்சி எடுக்கிறார்கள். இவ்வாறான திட்டமிட்ட தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்குரியது. 
 
எனவே இவ்விவகாரத்தில் உடனடியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை கொசோவா நாட்டுச் சச்சரவில் எடுத்த நடவடிக்கையைப் போல இலங்கைத் தமிழர்களது அபாயகரமான சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் இனப்படுகொலை பலாத்காரமான முறையில் குடிப்பரம்பலை மாற்றுதல் என்ற சர்வதேசச் சட்ட விரோதச் செயல்களை நிறுத்துவதற்காகவும் இலங்கையின் – தமிழர் தாயகத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச இடைக்கால தன்னாட்சி அதிகார சபை அமைக்கப்பட்டு தமிழர்களது சுயநிர்ணய உரிமையை அமுலாக்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 
 
கருத்தரங்கின் முடிவில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது. இந் நிகழ்வில்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
 
ஊடக அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
 
 
 
 

More from our blog

See all posts