நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் அதன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் அடிப்படையில் தாயக மக்களினதும் ஈழத்தமிழ் மக்களினதும் ஈழக்கனவை சுமந்து 8 வருடங்களாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கமைய மாதம் தோறும் வருகின்ற முதற் சனிக்கிழமை அரசவை கூடுவது வழமை.

இதனடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமரின் பணிப்பின் பேரில் அரசவை விவகாரங்களுக்கான செயலாளரினால் (05.10.2018) நடைபெற்ற விசேட அரசவை அமர்வில் அரசவை தலைவருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்பட்டு அரசமைப்பு அங்கம் 1.7.3 இற்கு அமைய திரு. பாலச்சந்திரன் நாகலிங்கம் அவர்கள் அவைத்தலைவர் பதவியிலிருந்து அரசவையினால் இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் அரசமைப்பு அங்கம் 1.7.5 இற்கு அமைய அடுத்த அவைத்தலைவரை தெரிவு செய்யும் வரை அடுத்துவரும் அரசவை அமர்வுகளை உதவி அவைத்தலைவராகிய வைத்தியகலாநிதி திருமதி. சர்வேஸ்வரிதேவி தேவராஜா அவர்கள் தலைமை தாங்கி நடாத்துவார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளியீடு :
ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்