தமிழினவழிப்பு நினைவுப்தூபி அழிப்பு – இனவாதப்பூதத்தின் மற்றுமொரு கோரமுகம் !

சிங்கள இனவாதப்பூதத்தின் இனவழிப்பையும், கோரமுகத்தையும் மெல்ல மெல்ல அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி அழிக்கப்பட்ட சம்பவத்தை நோக்க முடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

நினைவுத்தூபி அழிக்கப்பட்டாலும், சிங்களத்தின் இனவழிப்பின் பெருந்துயர் தமிழர் தேசத்தின் ஆன்மாவில் ஆறா வடுவாய்க் காலா காலமாகத் தமிழ் மக்களின் கூட்டுநினைவுகளில் நிலைத்;திருந்து எழும் பெருந்தழல் சிங்கள இனவாத பூதத்தை என்றோவொரு நாள் சுட்டெரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிங்களத்தின் தமிழினவழிப்பின் அடையாளச்சின்னமாக யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி, சிறிலங்கா அரசின் உத்திரவுக்கிணங்க அழிக்கப்பட்டமையானது, உலகத்தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோப உணர்வினையும் வலியினையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர் தேசம் மீதான சிங்கள இனவாதப்பூத ஆக்கிரமிப்பின் மற்றுமொரு கோரமுகமாக தமிழ்மக்கள் இதனை உணர்கின்றனர்

இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீதான இனவழிப்பு என்பது சிறிலங்கா அரசின் ஓர் அரச கொள்கையாக இருந்து வருகின்றதொரு நிலையில், தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் அடையாளங்கள், இரத்தம் தோய்ந்த சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை வெளிக்காட்டுபவையாக உள்ளன. இத்தகைய நினைவுச் சின்னங்கள் தமிழ்மக்களின் கூட்டு நினைவுகளில் சிங்கள ஆக்கிரமிப்பை என்றும் நினைவுபடுத்துபவையாகவும் உள்ளன. தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளில் இருந்து சிங்கள இனவாதப்பூதத்தின் இனவழிப்பையும், கோரமுகத்தையும் மெல்ல மெல்ல அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி அழிக்கப்பட்ட சம்பவத்தை நோக்க முடியும்.

சமீபத்தில் தியாக லெப்.தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளாகட்டும், தமிழீழத் தேசிய மாவீரர் நாளுக்கு விதிக்கப்பட்ட தடைகளாகட்டும் யாவுமே சிங்களத்தின் தமிழினஅழிப்பு, தலைமுறை தலைமுறையாக தமிழ்மக்களின் கூட்டுநினைவுகளில் நிறைந்து தம்மைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் என்ற அச்சம் சிறிலங்கா அரசுக்கு உண்டு என்பதனை வெளிப்படுத்தியது. மேலும் தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி இலங்கைத்தீவில் இல்லை என்பதனையும் வெளிக்காட்டியிருந்தது.

இன்iறைய நினைவுத்தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்களுக்கு தமது அரசியல் உரிமைக்காக போராடிய மாவீரர்களை மட்டுமல்ல, இனஅழிப்புக்கு உள்ளான மக்களை நினைவேந்துவதற்கும் உரிய அரசியல்வெளி இல்லை என்பதனையே வெளிக்காட்டுகின்றது.

இதேவேளை இந்த நினைவுத்தூபி அழிப்பினை சட்டத்துக்கு உட்பட்டதொரு நடவடிக்கையாகவே சிறலங்கா அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் வெளிக்காட்டுகின்றன. சிறிலங்கா அரசின் நோக்கம் என்ன என்பது பல்கலைக்கழக நிர்;வாகத்துகத் தெரியாததொன்றல்ல. தமிழ்மக்களின் உணர்வின் வடிவமாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபியினைத் தம்மால் அழிக்க முடியாது என்பதனை வலியுறுத்தி தனது பதவியினை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் துறந்திருப்பாரேயானால் அவர் தமிழ் மக்களின் மனதில் உயரிய இடத்தைப் பெற்றிருப்பார். தமிழ மக்களின் போராட்ட உணர்வும் உலகக் கவனத்தை ஈர்த்திருக்கும்.

ஐ.நா  மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கான நாள் நெருங்கி வரும் இச் சூழலில் தெடர்ந்து நிலைமாற்றுக்கால நீதியை ( Transitional Justice )   பற்றிப் பேசுவது வெறும் காலத்தை வீணடிக்கும் வேலையாகவே இருக்கும் என்பதோடு நீதியைப் புறந்தள்ளிய வகையில் கட்டுமானமயப்படுத்தப்படட ( Structural  Genocide  ) இனவழிப்பு தொடர்ந்தும் இடம்பெற வழி சமைக்கும் என்றே நாம் கருதுகின்றோம். இனவழிப்பு புரியும் சிறிலங்கா அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதற்கு சமனான சர்வதேச நீதிப்பொறிமுறையிலோ நிறுத்துவதுதான் தமிழர்களுகான ஈடுசெய்   நீதியினை ( Remedial Justice  ) பெற்றுத் தரும.

யாழ் பல்கலைக்கழகத்தின் அமையப் பெற்றிருந்த தமிழினவழிப்பு நினைவுத்தூபி அழிக்கப்பட்டாலும், சிங்களத்தின் இனவழிப்பின் பெருந்துயர் தமிழர் தேசத்தின் ஆன்மாவில் ஆறா வடுவாய்க் காலா காலமாகத் தமிழ் மக்களின் கூட்டுநினைவுகளில் நிலைத்;திருக்கும். இந் நினைவுகளில் இருந்து எழும் பெருந் தழல் சிங்கள இனவாத பூதத்தை என்றோவொரு நாள் சுட்டெரிக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

More from our blog

See all posts