எந்தவொரு அரசியல் தீர்வையும் சிங்கள பேரினவாதபூதம் அழித்து விடும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

  • March 18, 2022
  • TGTE

“சுனாமி இயற்கை பேரிழிவில் இருந்து மக்களை மீட்பதற்கான மனிதநேய கட்டமைப்பயே கிழித்துப் போட்டவர்களிடத்தில் அரசியல் தீர்வினை எப்படி எதிர்பார்க்க முடியும்?”

சிங்கள இனவாதக் கட்டமைப்பாக இறுகிப் போயுள்ள சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்குள் தமிழர்களுக்கு அரசியல்தீர்வு என்பது சாத்தியப்படப்போவதில்லை. எந்தவொரு அரசியல்தீர்வுக்கும் சிங்கள இனவாதம் இடம் தரப்போதில்லை என்பதே வரலராற்று உணமை எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், சுனாமி இயற்கை பேரிழிவில் இருந்து மக்களை மீட்பதற்கான மனிதநேய கட்டமைப்பயே கிழித்துப் போட்டவர்களிடத்தில் அரசியல் தீர்வினை எப்படி எதிர்பார்க்க முடியும் என கேள்வியெழுப்புள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் செவ்வி :.

1) இந்திய பிரதமர் மோடிக்கு 13வது திருத்தம் சட்டம் தொடர்பிலான கடிதம் தொடர்பாக தங்களின் கருத்து என்ன ?

புத்தாண்டு செய்தியில் நான் கூறியபடி எமக்கான போராட்ட அரங்கினை நாங்களே தீர்மானிக்க வேண்டும். எமக்கான போராட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை நாமே வடிவமைக்க வேண்டும்.

தமிழர் தேசத்தின் உரிமைப் போராட்டம், சிறிலங்கா அரசின் இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசொன்றை அமைத்துக் கொள்வதற்கான போராட்டமாக வரலாற்றப்போக்கில் வடிவெடுத்தது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னர் இனவழிப்புக்கு எதிரான பரிகாரநீதி என்ற வகையில் தனித் தமிழீழ அரசு அமைவதே ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்து நாம் செயற்பட்டு வருகிறோம்.

6ம் திருத்தச் சட்டம் காரணமாகத் தாயகத்தில் உள்ள தலைவர்கள் இந் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைத்துச் செயற்பட முடியாது என்பதனை நாம் அறிவோம். இருப்பினும், ஈழத்தமிழர் தேசத்துக்கான அரசியல் தீர்வு என்பது சிங்கள இனவாதப்பூதத்தின் இனவழிப்பிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கக்கூடியதொரு வடிவத்தில் அமைய வேண்டும் என்பதில் தாயகத் தலைவர்கள் சமரசம் ஏதுமின்றிச் செயற்பட வேண்டும். அரசியல் தீர்வு தொடர்பான உரையாடல் கூட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான பரிகாரநீதியினை மையப்படுத்தியே அமையவேண்டும்.

13ம் திருத்தச் சட்டமும் அதன் வழிவந்த மகாணசபை முறையும் ஈழத் தமிழ் மக்களை சிங்களத்தின் இனவழிப்பிலிருந்து எந்த வகையிலும் காப்பாற்றப் போவதில்லை. இதனால் 13 வது திருத்தச் சட்டம் குறித்துப் பேசுவதில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்து அர்த்தம் எதும் இருக்கப் போதில்லை.

மேலும், இன்னுமொரு விடயத்தினை நினைவுபடுத்த விரும்புகின்றேன். சிறிலங்கா அரசு சிங்கள இனவாதக் கட்டமைப்பாக இறுகிப் போயுள்ளது. இதனால்தான் சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள் தமிழர்களுக்கு அரசியல்தீர்வு என்பது சாத்தியப்படப்போவதில்லை என நாம் கூறி வருகிறோம். எந்தவொரு அரசியல்தீர்வுக்கும் சிங்கள இனவாதம் இடம் தரப்போதில்லை என்பதே வரலர்ற்று உணமை. கடந்த காலங்களில் செய்யப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் போன்றவற்றுக்கு நேர்ந்த கதியினையும் வரலாறு அறியும். சிறிலங்கா நாடாளுமன்றில் அதிபர் கோத்தா ஆற்றிய உரையே இதற்கு சமீபத்திய சாட்சி.

சுனாமி பேரழிவின் போது மக்களை அழிவில் இருந்து மீட்டெடுக்க இணைத்தலைமை நாடுகளின் துணையுடன் உருவாக்கப்பட்ட சுனாமி கட்டமைப்பையே சிங்கள பேரினவாதபூதம் தனது நீதிமன்றின் ஊடாக கிழித்தெறிந்தது. இயற்கை பேரிழிவில் இருந்து மக்களை மீட்பதற்கான மனிதநேய கட்டமைப்பயே கிழித்துப் போட்டவர்களிடத்தில் அரசியல் தீர்வினை எப்படி எதிர்பார்க்க முடியும்?

எம்மைப் பொறுத்தவரை, தாம் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்கின்ற வகையில், ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலமாகவே அரசியல் தீர்வு காணப்படவேண்டும். பொதுவாக்கெடுப்பை கோருவதற்கு 6ம் திருத்தச் சட்டம் என்பது தடையாக இல்லை. எனவே தாயகத்தில் இருந்து இதற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்பாகும்.

2) 13வது ஒரு தொடக்கபுள்ளி என்றும் தற்போது சிறிலங்கா அரச கட்டமைப்புக்களால் நிகழ்த்தப்படும் நிலஅபகரிப்புக்களை தடுத்த நிறுத்த இது உதவும் என்றும் கூறப்படுகின்றதே ?

இது தவறான கருத்து. வாதமும் கூட.

13க்கு கீழ் அரச நிலங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கைகளில்தான் உள்ளது. மாகாணசபையுடன் ஆலோசித்து விட்டு மத்திய அரசாங்கம் காணிகளை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. காணிகளை மத்திய அரசு எடுப்பதற்கு மாகாணசபையின் அனுமதி தேவையில்லை. மாகாணசபையுடன் நடப்பது கலந்தாலோசனை மட்டுமே. இதற்கு எந்தவொரு சட்டவலுவும் இல்லை என சிறிலங்காவின் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இது தொடர்பில் முன்னராக சொன்ன கூற்றையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

மேலும். காணிகளை பகிர்வது என்பது தேசிய இனவிகிதத்தின் அடிப்படையில் அன்றி மாகாண இனவீதத்தின் அடிப்படையில் அல்ல என 13இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபைக்குள்ளான எந்தவொரு விடயத்தினையும் தேசிய கொள்கை எனக்கூறி ‘கொழும்பு’ பறித்துக் கொள்ளவும் முடியும். சமீபத்திய நாட்களில் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உள்வாங்கிக் கொள்கின்ற கொழும்பின் நடத்தையின் தந்திரத்தை இதில் புரிந்து கொள்ளலாம். இதனால் மாகாணசபைகள் ஊடாக குடியேற்றங்களைத் தடுக்கலாம் என்பது ஏற்படைய கருத்தல்ல

3) 13 நடைமுறைப்படுத்தக் கோருவது இந்தியாவை எங்கள் விடயத்தில் தலையிடக் கோரும் நோக்கம் கொண்டதென கூறப்பட்டுள்ளதே ?

13ம் திருத்தச் சட்டம் என்பது ஓர் உள்நாட்டு சட்டம். அதனை நடைமுறைப்படுத்த கோரும் அதிகாரம் எந்தவொரு வெளிநாட்டுக்கும் இல்லை.

ஆனால், தமிழர்கள் விடயத்தில் இந்தியா தலையிடுவதற்கு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உரிமை உண்டு. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் இலங்கைதீவின் வடக்கு- கிழக்கு தமிழர்களின் தாயகம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்தேறும் நிலஅபகரிப்புக்கள், சிங்கள குடியேற்றங்கள், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உறுதிசெய்யப்பட்ட தமிழர் தாயகத்தை அழிக்கின்றது என்ற அடிப்படையில், இந்தியா தலையீடு செய்யலாம். நாமும் இதனையே எதிர்பார்கின்றோம். ஆனால் இதற்கான அரசியல் விருப்பு இந்திய அரசுக்கு இருக்க வேண்டும். சிறிலங்கா அரசைத் திருப்திப்படுத்தி தனது நலன்களை அடைந்து கொள்ளலாம் என்பது நாளடைவில் சாத்தியப்படப் போவதில்லை என்பதனை இந்திய அரசு புரிந்து கொள்ளும் நாள் வரும்போது இது நிகழவும் கூடும். இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பது ஓர் சர்வதேச ஒப்பந்தம். அதனை சிறிலங்கா மீறும் போது அதனை உலக நீதிமன்றத்துக்கு இந்தியா கொண்டு செல்ல முடியும்.

எம்மைப் பொறுத்தவரை, தமிழர் விடயம் தொடர்பில் தலையீடு செய்வதற்கு 13 தேவையில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தமும் தேவையில்லை. 1983 யூலை இனப்படுகொலையின் போது நரசிம்மராவ், 1983 நொவம்பரில் ஜீ.பார்தசாரதி, 1985 ரொமேஸ் பண்டாரி, 1986ல் சிதம்பரம் என இத்தலையீடுகள், 13 யைக் காட்டியோ அல்லது இலங்கை-இந்திய ஒப்பந்த்தை காட்டியோ நிகழவில்லை. இவை யாவுமே இதற்கு முன்னராக நிகழ்ந்தவை.

4) அண்மையில் நேபாளத்தில் மதாசி தொடர்பாக இந்தியா அழுத்தம் கொடுத்தமை உள்நாட்டு சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலோ நிகழ்ந்தது அல்ல.

பங்களாதேஸ் விடயத்தில் இந்தியா தலையிட்டமை உள்நாட்டு சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ நிகழ்ந்தது அல்ல. மாறாக பரிகாரநீதியின் அடிப்படையிலே தனது தலையீடுகள் அமைந்தன என இந்தியா ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கூறியது. இதுபோல பரிகாரநீதியின் அடிப்படையில் நாமும் எதிர்பார்கின்றோம். மேலும், இலங்கைத்தீவில் ஈழத்தமிழ்ர்கள் வலுவுடன் இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அவசியமானதும் கூட என்பதனையும் மீளவும் வலியுறுத்துகிறோம்.

5) இவ்விவகாரத்தில் மேலதிகமாக சொல்லக்கூடியது ?

டெல்லியை நாம் தமிழ்நாட்டுடன் இணைந்து கொண்டே அணுகவேண்டும். இனவழிப்புக்கு எதிராக சர்வதேச நீதி கோரியும், அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு கோரியும் தமிழ்நாட்டு சட்டப்பெருமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயற்பூர்வமாக ‘டெல்லியை’ நோக்கிக் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். மாறாக 13ஐ கோருவது என்பது இத் தீர்மானங்களை வலுவிழக்க செய்வதோடு, தமிழர்களின் போராட்டத்தை பின்னோக்கி கொண்டு செல்கின்றது என்பதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

More from our blog

See all posts