தமிழர் தேசத்தின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு குறித்தான ஐ.நா ஆணையாளரின் கருத்து தமிழர்களுக்கு வலுவூட்டியுள்ளது: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

  • September 10, 2022
  • TGTE

சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் செப்ரெம்பர் 6 அறிக்கையில், சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து இடித்துரைத்திருப்பது, தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளரின் செப்-6 அறிக்கையானது, தொடரும் மனித உரிமைமீறல்கள், பொருளாதார நெருக்கடி, பொறுப்புக்கூறல் தொடர்பில் முக்கியமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தது.

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அதன் இராணுவச் செலவினங்களே அமைகின்றன என்பதனை பல மாதங்களாகவே சுட்டிக்காட்டி வந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை தொடர்சியாக வலியுறுத்தி வந்திருந்தது.

இந்நிலையில் சிறிலங்கா தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான படிமுறையில் தனது இராணுவச் செலவினங்களை குறைக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதோடு, தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். கூடவே இராணுவம் அபகரித்துள்ள பொதுமக்களின் காணிகள்மீள கையளிக்கப்பட வேண்டும் எனவும் இடித்துரைதுள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் இக்கருத்தானது, இராணுவ நீக்கம் செய்யப்படவேண்டும் என்ற தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழர் தேசத்தின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கலுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதோடு, மக்களின் வாழ்வாதார பொருளாதாரத்தினையும் சுரண்டி வருகின்றது என நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்தி வரவிருக்கின்ற தீர்மானத்தில், இராணுவ வெளியேற்றம் தொடர்பில் ஓர் காலஅட்டவணை உள்ளடக்கப்பட வேண்டும் என்பதோடு, பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையாக ஐ.நா பாதுகாப்பு சபைக்கு சிறிலங்கா விவகாரத்தினை பாரப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழர்களின் நிலைப்பாடாக மட்டுமன்றி இவ்விடயம் தொடர்பில் ஐ.நாவின் முன்னாளர் ஆணையாளர்கள், ஐ.நாவின் வள அறிஞர்கள் பலரும் சிறிலங்காவின் சூழலை சர்வதேச குற்றவியல் நீதமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்பதனை ஏற்கனவே தெளிவாக ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளை நோக்கி முன்வைத்துள்ளனர் எனவும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.

More from our blog

See all posts