தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வாவும் தீவிரவாதியா ? – பிரதமர் கேள்வி !

  • April 29, 2014
  • TGTE
தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வாவும் தீவிரவாதியா ? – பிரதமர் வி.உருத்திரகுமாரன் கேள்வி !

தமிழீழக் கோரிக்கையினை முன்வைக்கின்ற காரணத்தினால் புலம்பெயர் தமிழ்சமூகத்தினை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றவர்கள் , தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வாவினை தீவிரவாதியாக சித்தரிக்குமா என கேள்வியெழுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், அவ்வாறெனில் தந்தை செல்வாவினையும் பட்டியலில் போடப்போகின்றீர்களா என கேட்கின்றார்.

கனடாவில் இடம்பெற்றிருந்த ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும் தமிழர்களுக்கான பரிகார நீதி தேடும் வழிமுறைகள் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கிலேயே, இக்கேள்வியினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்துள்ளார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை எனில் அதற்கான நீதி நிவாரணத்தினை வழங்க வேண்டிய நிலையில் இருந்து தப்புதல் என்ற அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாட்டினை அடியொற்றி, தமிழர் அமைப்புக்கள் சில, இனப்படுகொலை பற்றியோ அல்லது தமிழீழம் பற்றி கதைக்க வேண்டாம் என கூறுவது குறித்தும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது கடுமையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

இக்கருதரங்கின் இறுதியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்த கருத்துரை :

நாளைய தமிழீழம் :

– தமிழீழம் பற்றி எந்வித யோசனையும் இன்றி நாம் கதைக்கவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முரசறைந்த தமிழீழ சுதந்திர பட்டயத்தில் இது தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மதசார்பற்ற ஈழமாக மலரும். தமிழீழத்தில் தமிழுக்கு மட்டுல்ல சிங்கள மொழிக்கும் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தினை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளோம்.

அன்று, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் , தென்னிலங்கையில் எவ்வாறு தமிழ் மொழிக்கான உரிமைகள் வழங்கப்படுகின்றதோ அதற்கு ஏற்றாற்போல் தமிழீழத்தில் சிங்கள மொழிக்குரிய உரிமைகள் வழங்கப்படுமென நிபந்தனை சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்தது.

நாம் அதற்கு அடுத்தபடியாகச் சென்று, தென்னிலங்கையில் தமிழுக்கான உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்டாலும், தமிழீழத்தில் வாழும் சிங்கள மக்களின் அவர்களது சிங்கள மொழிக்கான அங்கீரித்தினை மனித உரிமைகள் அடிப்படையில் வழங்கப்படுமென்று குறிப்பிட்டுள்ளோம்.

அத்தோடு மனித உரிமைகள் தொடர்பிலான அனைத்துலக சட்டங்களை ஏற்று தமிழீழத்தின் சட்டங்களாக ஏற்றுக் கொள்கின்றோம் எனவும அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

தமிழீழக் கோரிக்கையினை நாம் வெற்றுமுழக்கமாக அல்லாமல், நாளைய தமிழீழம் குறித்தான தெளிவான நிலைப்பாட்டோடுதான் அக்கோரி;கையினை முன்வைத்து வருகின்றோம்.

– நாளை தமிழீழம் அமைந்தால் சைப்பிறஸ்-துருக்கி போல் இருபக்கத்திலும் துப்பாக்கியினை நீட்டிக் கொண்டு நிற்போம் என்று கூறப்படுகின்றது. இது ஒரு பிழையான உதாரணம்.

செக்கோ சுலவோக்கியாவினை எடுத்துப் பாருங்கள். செக் குடியரசு மற்றும் சுலோவாக்கியா ஆகிய நாடுகள் நட்புறவோடு இருக்கின்றார்கள். மலேசியா சிங்கப்பூர் நட்புறவாக இருக்கின்றார்கள். நோர்வே சுவீடன் நட்புறவாக இருக்கின்றார்கள். நாளைக்கு ஸ்கொட்லாண்ட் பிரிந்தாலும் இரு அரசுத் தலைவர்களும் துப்பாக்கிய நீட்டிக் கொண்டு நிற்கப் போகின்றார்கள் என்று நினைக்கவில்லை. ஏன்எனில் அரசியல் நாகரீகம் அரிசயல் முதிர்ச்சி இருக்கின்றது.

தமிழர்களுக்கும் அந்த அரசியல் நாகரீகம் இருக்கின்றது. அத்தகைய அரசியல் நாகரீகத்தோடுதான் நாளைய தமிழீழம் தொடர்பிலான நிலைப்பாட்டினை நாம் முன்வைத்து வருகின்றோம்.

இனப்படுகொலை :

இனப்படுகொலை பற்றி கதைப்பது கடினம் என்றும் அதனை நிறுவுவது கடினம் என்றும் கூறுகின்றார்கள். சாதாரண போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியனவற்றினை நிறுவுவது சுலபம். ஆனால் இனப்படுகொலை என்பதனை நிறுவுவது சவாலான விடயம்தான். ஆனால் கடினம் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறமுடியாது.

கடந்த பத்தாண்டுகளுக்குள் அனைத்துலக மட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் இனப்படுகொலைக்கு எதிராக வந்திருக்கின்றன. இனப்படுகொலைக்கான காரணங்கள் சூழ்நிலைச்சாட்சியங்களின் அடிப்படையில் அத்தீர்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்துடனும் தென்னிலங்கையிலும் பல தமிழர்கள் தொழில் புரிகின்ற சூழலில் , தமிழர்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான இனரீதியிலான இனப்படுகொலை என்பதனை எவ்வாறு நிறுவுவது என்று பலர் கேள்வி எழுப்புகின்றார்கள்.

கடந்த மாதம் பிரான்சில் இடம்பெற்ற ருவண்டா இனப்படுகொலை தொடர்பிலான நீதிமன்ற வழக்கொன்றில் வெளிவந்த தீர்ப்பு இதற்கான தெளிவான பதிலை முன்வைத்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது மனைவி ருட்சி இனத்தவர் என்றும், இந்நிலையில் எவ்வாறு இனரீதியாக ருட்சி இனத்தவர்களுக்கு எதிரான இனப்படுகொலையில், தான் பங்கெடுத்திருக்க முடியும் என்றும் தனது எதிர்வாதத்தினை முன்வைத்திருந்தார். ஆனால் இந்த வாதத்தினை பிரான்ஸ் நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஆகையால் கொழும்பில் தமிழர்கள் தொழில்புரிய சிறிலங்கா அரசு அனுசரித்துள்ளதால், தமிழர்கள் என்ற அடிப்படையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்ற வாதத்தினை ஏற்கமுடியாது.

இங்கே நாங்கள் இனப்படுகொலை என்ற தீர்ப்பினை கேட்வில்லை. இனப்படுகொலைக்கான விசாரணையினைத்தான் கேட்கின்றோம். நடந்தது என்ன என்பதனை முதலில் விசாரிக்கட்டும். அதன் தீர்ப்பினை ஏற்றுக் கொள்கின்றோம். விசாரணைக்கு முன்னரே இனப்படுகொலை இனப்படுகொலை என்று கதைக்க வேண்டாம் என்று சொல்வதில் நியாயம் இல்லை.

இப்படிக் கூறுதவதற்கு பின்னால் உள்ள உண்மை என்னவென்றால் இனப்படுகொலை என்று சொன்னாலோ அல்லது இனப்படுகொலை என்று ஏற்றுக் கொண்டாலோ அனைத்துலக சட்டங்களுக்கு அமைய உலக நாடுகள் அந்த விடயத்தில் தலையிட்டு அதற்கான நீதி நிவாரத்தினை வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனை நான் மட்டும் கூறிவில்லை. அமெரிக்காவில் இருந்து வெளிவருகின்ற நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இனப்படுகொலை தொடர்பில் இக்கருத்தினையே கடந்த மாதம் பதிவு செய்திருந்தது.

இந்தப் பிண்ணியில் இந்த (சிறிலங்கா) விவாகாரத்தில் இனப்படுகொலை என்ற நிலைப்பாட்டில் தங்களின் தலையிட்டீனை தவிப்பதற்காக அங்கு (ஈழத்தில்) இனப்படுகொலை நடக்கவில்லை என கூறுகின்றார்கள்.

அவ்வாறு அவர்கள் (அனைத்துலகம்) அதனைச் சொல்ல. தமிழர் அமைப்புக்கள் சில அவர்கள் சொல்வதனைக் கேட்டுக் கொண்டு இனப்படுகொலை பற்றி கதைக்க வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.

International Crisis Group போன்ற மனித உரிமை அமைப்புக்கள் சில புலம்பெயர் தமிழர்சமூகத்தினை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றன. பயங்கரவாதிகளாக அல்ல. ஏன் தீவிரவாதிகள் என கூறுகின்றார்கள் என்றால் தமிழீழம் கேட்கின்றார்கள் என்று.

நாங்கள் தீவிரவாதிகள் என்றால் தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வா தீவிரவாதியா ? அப்படி என்றால் தந்தை செல்வாவினை பட்டியலில் போடப்போகின்றீர்களா ?

இவ்வாறான கருத்துக்களையும் கேள்விகளையும் எதிர்கொள்ளாமல் அதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் தமிழீழம் நாங்கள் கேட்கவில்லை…இனப்படுகொலை என்று சொல்லவில்லை என தமிழர் அமைப்புக்கள் சில தப்பித்துக் கொண்டு தங்களுடைய நிலைப்பாட்டினை எடுக்கின்றன.

நியாயம் எங்கங்கள் பக்கம் உள்ள நிலையில் எந்தச் சவாலையும் துணிவோடும் அறிவோடும் எதிர்கொள்கின்ற செயல்முனைப்பே இங்க அவசியம் என நான் கருதுகின்றேன்.

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுடைய கருத்துரை அமைந்திருந்தது.

More from our blog

See all posts