விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கு: ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியாவிடம் கோரும் தீர்மானம் !

  • December 27, 2014
  • TGTE
timthumbதமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயங்கரவாத முத்திரையும், இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது எனக் கோரியுள்ளது.

நடந்த முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களில் ஒன்றாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது என்று புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முழுமையான வடிவம்:

1. தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த சிறிலங்கா அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறை, துன்புறுத்தல்கள், அரச வன்முறை, அரசால் நடத்தப்படும் வன்முறைகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகின்றன என்பதை நினைவில் இருத்திக் கொண்டு,

2. தமிழரது தேசிய சிக்கலை அமைதி வழியில் தீர்த்துக் கொள்வதற்கு உள்நாட்டிலோ சர்வதேசத்திலோ எந்த அரங்கமும் இல்லாததோடு, அமைதி வழியிலான தமிழ் மக்களின் போராட்டம் தோல்வியடைந்ததையும் நினைவில் இருத்திக் கொண்டு,

3. மேற்கூறிய காரணங்களின் விளைவாக, தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றிடவே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவானது என்பதை அங்கீரித்துக் கொண்டு,

4. தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை தமது உண்மையான பிரதிநிதிகளாகவும் பாதுகாவலர்களாகவும் கருதினார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு

5. 2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடனும் ,இணைத் தலைமையில் இயங்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான் ஆகிய நாடுகளின் ஆதரவுடனும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதான முயற்சிகளைக் கருத்தில் எடுத்துக் கொண்டும்.

6. 2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது என்பதை குறிப்பில் எடுத்துக் கொண்டும்.

7. சர்வதேச அங்கீகாரத்துடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 2002 போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டு தமிழ்தேசிய பிரச்சினைக்கும் இராணுவ தீர்வு காண்பதற்கென சிறிலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதை கவனத்தில் எடுத்துக் கொண்டும்,

8. 2006இல் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை, ஒரு விதத்தில் இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடத்துவதற்குத் துணை செய்தது என்பதை கவனத்தில் கொண்டும்,

9. விடுதலைப் புலிகளின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தகுதி வாய்ந்த நிர்வாகத்தினால் நிரூபிக்கப்படவில்லை என்பதும் பிற நியாயாதிக்க எல்லைகளுக்கு உட்பட்ட தீர்மானங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அளவுகோலுக்கு இணையானவர்களா என்பதும் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் குறித்துக் கொண்டு,

10. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மே 16 2009ம் ஆண்டு முதல் மௌனித்தன என்பதை குறிப்பில் எடுத்துக் கொண்டும்.

11. மீண்டும் பட்டியலில் போடுவது தொடர்பாக உண்மை நிலவரம் மாறியுள்ளதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிட்டதையும் நினைவில் இருத்திக் கொண்டும்.

12. 2009 வருடத்தில் இருந்து இன்று வரை விடுதலைப்புலிகள் செய்ததாக, தகுதி வாய்ந்த நிர்வாகத்தினால் நிரூபிக்கப்பட்ட எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்பதை குறிப்பில் எடுத்துக் கொண்டும்.

13. சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மிகவும் இழிவுபடுத்தும் பதமான பயங்கரவாதம் என்ற பதத்தை பயன்படுத்தி வருகிறது என்பதையும், தமிழ்த்தேசிய பிரச்சினை அப் பதத்துக்கு இணையாக நிறுத்துகிறது என்பதைக் கவலையுடன் குறித்துக் கொண்டும்,

14. பயங்கரவாதத் தடை என்ற பேரில் தமிழ்மக்கள் மீது அவப்பெயர் சூட்டப்படுவதை கவலையுடன் குறித்துக் கொண்டும்,

15. அந்த அமைப்பின் மீதான பயங்கரவாதத் தடையையும், தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அரசியல் குறிக்கோள்களையும் பிரிக்கும் கோடுகள் படிப்படியாக மங்கி வருகின்றன என்பதை குறிப்பில் எடுத்துக் கொண்டும்,

16. பயங்கரவாதம் என்ற முத்திரையை நீக்குவது ஒரு சமமான களத்தை உருவாக்கும் என்றும் சமதர்ம அடிப்படையில் தமிழ் தேசிய பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் உறுதியான நம்பிக்கையுடனும்

இவ்வாறாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருமனதாகக் கோருகிறது:

1. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது.

2. அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயங்கரவாத முத்திரையும் இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட வேண்டும்.

3. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது என்று புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுக்க வேண்டும்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

More from our blog

See all posts