புதிய ஆண்டில் தமிழர் தேசம் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் ! பிரதமர்.

  • January 2, 2015
  • TGTE

images (1)தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப்புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் 2014ம் ஆண்டில் எட்டப்பட்ட விடயங்கள், சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் தமிழர் தாயகத் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆறு விவகாரங்கள், மற்றும் 2015ம் ஆண்டுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெருஞ்செயற்திட்டம் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக பிரதமர் வி.உருத்திரகுமாரனது புத்தாண்டுச் செய்தி அமைந்துள்ளது.

அறிக்கையின் முழுவடிவம் :

மலரும் புதிய ஆண்டு தமிழ் மக்களுக்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையுடன் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தை மாதம் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் புத்துணர்வையும் தரும் மாதமாகும். தைத் திருநாள் பொங்கல் விழாவுடன் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்தை வரவேற்பது தமிழர் பண்பாட்டுடன் நன்கு இணைந்து போயுள்ள வாழ்வியல் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையுடன் நாம் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக!

தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப் புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை.

2014 இல் எமது முன்னோக்கிய காலடி

கடந்து சென்ற 2014 ஆம் ஆண்டு தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு காலடி முன்னோக்கி நகர்த்தியுள்ளது. சிங்களத்தின் இனஅழிப்புக்கு எதிரான தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டம் கூடுதலாக அனைத்துலகமயப் படுத்தப்பட்டுள்ளது. தேசங்களிடையே ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பிரிந்து சென்று தனிநாடு ஒன்றை உருவாக்குவதனை அரசியல் தீர்வாக முன்வைப்பதும், அக் கோரிக்கையினை அரசியல்ரீதியாக, ஜனநாயக வழியில் மக்கள் வாக்கெடுப்பின் ஊடாகக் கையாண்டு தீர்வினைக் காண முயல்வதும் செழுமை மிகு அரசியல் பண்பாடாக கடந்த ஆண்டில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழீழ தேசமும் தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனஅழிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பரிகார நீதி என்ற வகையிலும் தமிழீழம் என்ற தனிநாட்டை அமைப்பதனை தேசியப் பிரச்சனைக்கான அரசியற்தீர்வாக வரித்துக் கொள்வதும், அதற்காக ஜனநாயக அடிப்படையிலான மக்கள் வாக்கெடுப்பைக் கோருவதும் தார்மீகரீதியில் வலுப் பெற்றுள்ளது.

இத் தார்மீக அடிப்படையினை வலுவாகக் கொண்டு தமிழீழத் தனியரசினை அமைப்பதற்கான எமது மக்களின் ஜனநாயக உரிமையினை வென்றெடுப்பதற்குத் தேவையான அரசியற்பொறிமுறையினை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

இதற்காக Yes to Referendum எனும் பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தும் புதிய அரசியல் இயக்கத்தினை 2015 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இந்த Yes to Referendum இயக்கம் உலகெங்கும் உள்ள தமிழர் அமைப்புகளையும் நீதிக்காகக் குரல்தரக்கூடிய அனைத்துலக சிவில் சமூக அமைப்புக்களையும் இணைத்தவாறு முன்னெடுக்கப்படும். இவ் Yes to Referendum என்ற அரசியல் இயக்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு அனைத்துத் தமிழர் அமைப்புகளுக்கும் நாம் இத் தருணத்தில் தோழமையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல்

2015 ஆம் ஆண்டில் சிங்கள தேசத்தின் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறுகிறது. ஈழத் தமிழர் தேசம் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இத் தேர்தல் தமிழர் தாயகப் பகுதிகளிலும் நடைபெறுகிறது. பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவர் வெற்றி பெறினும் சிறிலங்கா இனவாத அரசின் தலைவர்களாகவே இருப்பார்கள். இருவரில் எவர் தெரிவானாலும் தமிழ் மக்களுக்கு விளையும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகமாக இருக்கும். மகிந்த இராஜபக்ச தெரிவானால் உடடியான தீமையும் நீண்டகாலத்தில் நன்மையும் கிடைக்கலாம். மைத்திரிபால சிறிசேன தெரிவானால் உடனடி நன்மையும் நீண்ட காலத்தில் தீமையும் கிடைக்கலாம். எது எவ்வாறாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக நோக்கின் தீமைகளே எம்மை நோக்கிச் சூழப் போகின்றன. இதனை மனதில் வைத்துத் தாயக மக்கள் தங்கள் தீர்மானங்களை எடுப்பார்கள் என நாம் நம்புகிறோம்.

தமிழ் மக்களின் உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என்பதும் சிங்கள பௌத்த இனவாத அரசு தமிழர்களை ஒரு தனித்துவமான மக்களாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதனையும் வரலாறு எமக்குத் தெளிவாகக் கற்றுத் தந்துள்ளது.

இதனால் எவர் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொண்டாலும் எமது உரிமைப் போராட்டம் பாதுகாக்கப் படுவதற்கான கோரிக்கைளை முன்வைத்துத் தாயகத் தலைவர்கள் செயற்பட வேண்டும் என இப் புத்தாண்டுத் தினத்தில் நாம் கோருகிறோம். தற்போதய காலகட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் தமிழ் தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமானவை என நாம் கருதுகிறோம்.

1.சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை தேவை.

2.தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தினை அடிப்படையாகக் கொள்வதனை ஏற்க முடியாது.

3.தமிழர் தாயகத்தின் சிவில் வெளியை உருவாக்குவதற்கு முன்நிபந்தனையாகத் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்.

4.தமிழர் தாயகத்தில் சிங்களம் நடாத்தும் நிலக்கபளீகரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5.தமிழர் தாயகப் பகுதியின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் புலம் பெயர் தமிழ் மக்கள் அச்சமின்றிப் பங்குபற்றக்கூடிய வகையிலானதொரு பொறிமுறை அனைத்துலகச் சமூகத்தின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்படவேண்டும்.

6.தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி ஜனநாயக வழியில் உரையாடவும் விவாதிக்கவும் தடையாகவுள்ள அரசியலமைப்பின் 6வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

மிகக் குறைந்த பட்சமான இவ் ஜனநாயகக் கோரிக்கைகளைத் தாயகத் தலைவர்கள் தமது கவனத்திற் கொள்வார்கள் என்றே நாம் நம்புகிறோம்.

2015 இன் பெருஞ்செயற்திட்டம்

2015 ஆம் ஆண்டிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயல்முனைப்பை வேகப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அடையாளம் கண்டு நடைமுறைப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இச் செயற்திட்டங்கள் பிரதமர் பணிமனையின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

பதிப்பகம், ஆவணக்காப்பகம்,Yes to Referendum அரசியல் இயக்கம், நிலக் கபளீகர எதிர்ப்பியக்கம், தமிழ்க் கல்வி மேம்பாட்டு மதியுரைப்பீடம், உலகத் தமிழர் பல்கலைக் கழகம், மாவீரர் நினைவாலயம், இந்தியாவில் தோழமை மைய பணிமனைகள், நல்லெண்ணத் தூதுவர்கள், மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணும் மையங்கள், தாயகத்தில் சுயதொழில் வளர்ச்சித் திட்டங்கள், பசுமையைக் காப்போம் – சூழல் விழிப்புணர்வு இயக்கம், உள்ளடங்கலாக 15 செயற்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் ஒரு பெரும் வேலைத்திட்டமாக (Massive Working Programme) 2015 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

இத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பங்குபற்றுதல் மிகவும் அவசியமானதாகும். இத் திட்டங்களுடன் செயற்பட விரும்பும் அனைவரையும் எம்முடன் பின்வரும் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.

தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரி:      massiveplan@tgte.org

புதிய ஆண்டில் எமது மண்ணும் மக்களும் முழுமையான விடுதலைபெறும் இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் முன்னோக்கிய காலடிகளைப் பதிப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Year Message 2015 - Tamil-page-001New Year Message 2015 - Tamil-page-002New Year Message 2015 - Tamil-page-003

More from our blog

See all posts