உணர்வெழுச்சியுடன் நிறைவுற்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்காலத்தின் முதலாவது நேரடி அரசவை அமர்வு உணர்வெழுச்சியுடன் நிறைவுற்றது.

அமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட National Constitution Centre   வரலாற்றுக்கூடத்தில் மைய அமர்வு அமைய, அதனோடு இணைந்ததாக பிரித்தானியா, ஜேர்மனி, ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் இருந்து கூடியிருந்தனர்.

மே-17,18,19 ஆகிய நாட்களில் இடம்பெற்ற இவ்வமர்வில் புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் தேர்வாகிய உறுப்பினர்கள், மதியுரைக்குழு உறுப்பினர்கள், வள அறிஞர்கள் எனப பலரும் பங்கெடுத்திருந்தனர்.

அங்குரார்ப்பண நிகழ்வில் வளப்பெருமக்களான பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர் சரசுவதி, மிலேனா ஸ்ரேறியோ, திருமதி.உசா சிறீஸ்கந்தராஜா, திரு.பாலன் பாலசிங்கம், திரு.இரவி சுப்பிரமணியம், பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோர் பல்வேறு கருப்பொருளில் சிறப்புரைகளை வழங்கினர். நா.தமிழீழ அரசாங்கம் கடந்த வந்த செயல்வழிப்பாதை தொடர்பில் திரு.சுதன்ராஜ் தொகுப்புரை வழங்கியிருந்தார்.

அவைத்தலைவராக வைத்திய கலாநிதி சர்வேஸ்வரிதேவி, உப தலைவராக திருமதி. இரஜனிதேவி சின்னத்தம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மீண்டும் வி.உருத்திருமாரன் அதிபெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
போராட்டத்தில் பதவிகள் வழங்கப்படுவதல்ல. பொறுப்புக்களே வழங்கப்படுகின்றன. பதவிகள் யாவும் இங்கு வேசங்களே. நாம் அனைவரும் விடுதலைக்கான களத்தில் போராளிகளே என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது ஏற்புரையில் தெரிவித்திருந்தார்.

அவை உறுப்பினர் ஒவ்வொருவரும் தமது அறிமுக உரையினை வழங்கியிருந்ததோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான தமது ஈடுபாட்டையும், கருத்துக்களையும் முன்வைத்தனர்.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான புறுக்கினா பசோ நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினராக பங்கெடுத்திருந்த கொலாக ஒமாறு பொல் அவர்கள், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உரையாடல்கள், அதன் தந்திரோபாயங்கள் குறித்து தனதுரையினை வழங்கியிருந்தார்.

–  உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் விளைவுகளும் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் எதிர்கொள்ளும் சவாலும் 
– முள்ளிவாய்க்காலின் பின்னரான பத்து ஆண்டுகளில் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதையின் மதிப்பீடுகள்
– நீதியினை வென்றடைவதற்கான புதிய களங்களை உருவாக்குதல்
– தமிழர் தலைவதி தமிழர் கையில், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்
தமிழீழத் தேசக் கட்டுமானம், ஆகிய தொனிப்பொருட்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

பிரதமர், அவைத்தலைவர், உதவி அவைத்தலைவர் ஆகிய பொறுப்புக்களுக்கு இடம்பெற்றிருந்த போட்டி, தேர்வு பொருத்தமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆகியன நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக முதிர்சியினை வெளிக்காட்டி நிற்பதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது நிறைவுரையில் தெரிவித்திருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தமிழீழத் தேசிய விடுதலை இயக்கம். இதில் எதிர்கட்சி என்று எவரும் இல்லை. எல்லோரும் தமிழீழத்துக்கான போராளிகளே எனவும் அவர் இடித்துரைத்திருந்தார்.

– இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, பயங்கரவாத தடைச்சசட்டம், அவசரகாலச் சட்டடம் ஊடாக, தமிழர்கள் மீது பிரயோகிக்கப்படும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் ஐ.நா ஆணையாளரின் கவனத்திற்கும்.

– தமிழிழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை இந்தியா நீக்க வேண்டும்.


ஆகிய இரு தீர்மானங்களும அமர்வின் நிறைவு நாளில் நிறைவேற்றப்பட்டிருந்தன.

More from our blog

See all posts