சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் மூலோபாயம்: லண்டன் மாநாடு !

2014-05-17 14.53.46சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் இலக்கினை கொண்ட “சிறிலங்காவைப் புறக்கணிப்போம்” எனும் செயல்முனைப்புக்கான மூலோபாய திட்டத்தினை வகுக்கும் லண்டன் மாநாடு சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடையொன்றைக் கொண்டுவரும் நோக்கில் இந்தமாநாட்டினை நடத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் அனுமதித்திருப்பதாகவும் சிறிலங்கா அரசு குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மே17ம் நாள் சனிக்கிழமை இம்மாநாடு இடம்பெற்று முடிந்துள்ளது.

சிறிலங்காவைப் புறக்கணிப்போம் எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியாகவும், இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோபாயங்களைக் கண்டறியும் வகையில் இந்த மாநாடு இடம்பெற்றிருந்தது.

மாநாட்டின் முதற்பகுதி பொது அரங்காகவும், இரண்டாம் பகுதி உள்ளக கலந்தாய்வாகவும் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டில், கிரிக்கெட் புறக்கணிப்பு செயல்வீரர் Trevor Grant, தென்ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் பிரதிநிதி Krish Govender ஆகியோர் நேரடியாக பங்கெடுத்திருந்தனர்.

இணையவழி காணொளி பரிவர்த்தனையூடாக பலஸ்தீனத்தினை மையப்படுத்திய இஸ்ரேல் புறக்கணிப்பு Omar Barghouti பிரதிநிதி அவர்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துரைகள் மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் ஆகியனவற்றின் வழியே, சிறிலங்கா புறக்கணிப்பு செயற்திட்டத்துக்கான மூலோபாய வரைவு தயாரிக்கப்படவுள்ளதாகவும் பின்னர் ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு தளங்களிலும் அதனை செயற்படுத்த இருப்பதாகவும் SAY NO TO SRI LANKA செயல்முனைப்பின் பணிப்பாளர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

More from our blog

See all posts