சிறிலங்காவை கையாள விசேட நீதிமன்றம் : ஐ.நாவின் நிலைப்பாட்டை வரவேற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

  • March 22, 2018
  • TGTE

சிறிலங்காவின் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, அனைத்துலக நிபுணர்களின்  சிறப்பு நீதிமன்றத்தை   ஆதரவுடன் நிறுவ வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாரின் நிலைப்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2017ஆம் ஆண்டு மீள உறுதிப்படுத்தப்பட்ட 30/1 தீர்மானத்தை நடப்பாடுகள் தொடர்பில் ஐ,நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த விவாதத்தின் பொழுதே ஆணையாளரின் இந்நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் உலகளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளுக்கு தாம் அழைப்பு விடுக்கிறோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆணையாளரின் இந்நிலைப்பாட்டினை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான வேட்கையில் புதியதொரு நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும், அல்லது அதற்கு சமனான அனைத்துலக தீர்ப்பாயம் ஒன்றினை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையினை 2011ம் ஆண்டு முதலே நாம் முன்வைத்து வருகின்றோம். 2015ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தில் 1.8 மில்லியன் மக்கள் ஐ.நா நோக்கி கோரிக்கையாக ஒப்பமிட்டிருந்தனர்.

சிறிலங்காவை கண்காணிக்கவென நாம் நியமித்திருந்த பன்னாட்டு நிபுணர் குழுவும்  ( Sri Lanka -Monitoring and Accountability Panel (MAP)  இதனைத்தான் வலியுறுத்தியிருந்தது.

தற்போது ஐ.நாவின் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னராக ஆணையாளர் அவர்கள் சிறிலங்கா தொடர்பிலான இடைக்கால அறிக்கையினை வெளியிட்டிருந்தார்.

கடந்த 13ம் திகதி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழ் மக்களவை மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டாக ஆணையாளர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடி இருந்ததோடு, சபை விவாத்தில் வாய்மூல அறிக்கையில் அனைத்துலக நீதிமன்றம் தொடர்பிலும் பிரஸ்தாபித்திருந்தோம்.

இந்நிலையில், தற்போது சிறிலங்காவைக் கையாள பன்னாட்டு நீதியாளர்களைக் கொண்ட விசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற ஆணையாளரின் நிலைப்பாடு தொடர்பான வாய்மூல கருத்து நீதிக்கான வேட்கையில் புதிய நம்பிக்கையினைத் தந்துள்ளது.

குறிப்பாக 2014ம் ஆண்டும், வட கொரியாவை அனைத்துலக நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறு பாதுகாப்பு சபையினை நோக்கி ஐ.நா மனித உரிமைச்சபை கோரியிருந்தது. தற்போது ரொகிங்கியா விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல்¨ நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று ஆணையாளர் குறிப்பிட்டு வருகின்றார்.

இவைகள் யாவும் முன்னுதாரங்களாக உள்ள நிலையில், இதனை நோக்கிய செயற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

More from our blog

See all posts